jeudi 22 août 2013

எம்பெருமானார்




எம்பெருமானார்
[எண்சீா் விருத்தம்]

எனைக்காக்கும் எம்பெருமான் வரத ராசன்
     இன்னருளால் கவியரங்கில் பாட வந்தேன்!
தனைக்காக்கத் தெரியாத சேயைப் போன்று
     தடுமாறும் பொழுதெல்லாம் அருளைத் தந்தே
உனைக்காக்க நானுள்ளேன் என்று சொல்லும்
     ஒண்மரைவாழ் பெருந்தேவி தாளைப் போற்றி
வினைபோக்கும் இராமாநு சர்தம் சீரை
     வியந்திடவே எடுத்துரைப்பேன் அவையின் முன்னே!

தேர்கொண்ட உருளைகளில் ஒன்று டைந்தால்
     தெருவிலது உலாவருதல் நின்று போகும்!
ஊர்கொண்ட வேற்றுமையால் மாந்தர்க் குள்ளே
     உண்டாகும் பிணக்குகளை அறிவீர் அய்யா!
போர்கண்ட நாட்டினரின் புன்மை போக்கிப்
     பொதுவுடைமை பூத்திடவே உழைத்த ஞானி!
கார்கண்ட மயிலைப்போல் மக்கள் எல்லாம்
     களித்தனர்எம் பெருமானார் செயலைக் கண்டே!

கண்ணான நம்வாழ்வில் கவலை ஏது
     கண்ணனருள் கடைக்கண்கள் பட்ட போது?
புண்ணான நெஞ்சத்தின் பொய்ம்மை போக்கப்
     பூமகள்சேர்ந்(து) உறைமார்பன் புகழைச் சொன்னார்!
அன்பான அருளுரையால் அடியேன் என்னை
     ஆட்கொண்ட அன்பரசாய் வாழ்ந்து நின்றார்!
பொன்னான வாழ்வுதனைப் புவியோர் காணப்
     பொருளுரைத்த புகழ்ராமா நுசரே வாழி!

சீர்திருத்தம் சீர்திருத்தம் என்றே சொல்லிச்
     சிறப்பில்லாச் செயலினையே செய்வார் சில்லோர்!
பார்!திருத்தம் செய்கின்றேன் என்று கூறிப்
     பகற்கொள்ளை அடிப்பவரே எங்கும் உள்ளார்!
யார்திருத்தம் மெய்ந்நெறியில் நின்றே செய்தார்!
     யாரிங்கே உய்விக்கும் வழியைச் சொன்னார்!
ஓர்திருத்தம் அந்நாளில் புரிந்த துண்டா?
     உயர்ராமா நுசரைப்போல் புதுமை யோடே!

தாழ்ந்துள்ள குலத்தினரை அந்த நாளில்
     தனியாக வைத்தனரே! கோயில் பக்கம்
சார்ந்துள்ள தெருக்கள்தம் வழியே அன்னார்
     தாம்வரவே கூடாதாம்! அந்தோ பாவம்!
சாழ்ந்துள்ள இவ்வழிவைச் சுட்டெ ரிக்கும்
     சூரியனாய் வந்துதித்தார்! ஞானச் செல்வர்!
ஆழ்ந்துள்ள அவநிலையை அன்றே போக்கி
     அழகொளிரத் திருக்குலமாய் வாழ வைத்தார்!

பேரின்பம் அளிக்கின்ற நெறியைக் காட்டும்
     பெரியதிரு மந்திரத்தைத் தங்க ளுக்குள்
ஓரினத்தார் மட்டுமதை ஓதி வந்தார்!
     ஒப்பற்ற உயர்நிலையை உலகோர் ஏற்கக்
கூர்மதியால் கோபுரத்தின் மேலே ஏறிக்
     குவலயமே இன்பமுறக் கூறி விட்டார்!
சீர்மிகுந்த எதிராச முனிவர் தம்மைச்
     சீர்திருத்தச் செம்மலெனப் போற்று வோமே!

சண்டையிடும் வன்முறையைத் தகர்த்து நாட்டில்
     சால்புடனே வைணவத்தைத் தழைக்கச் செய்தார்!
மண்டைநிறை ஆணவத்தார் திருந்தும் வண்ணம்
     மாண்புகளைப் பொழிந்திட்டார்! தொல்லை தந்த
அண்டையினத் தவரைத்தம் அறிவால் வென்றே
     ஆட்கொண்ட அருமையினை என்ன வென்பேன்!
தொண்டைநல்லூர் ஏரிதனை வெட்டி ஆங்கே
     சொல்லரிய புரட்சியினைப் புரிந்தார் நன்றே!

பிறப்பினிலே வேற்றுமைகள் உளவாம் என்று
     பேசுகின்ற மாந்தர்களைத் திருத்த வேண்டிச்
சிறப்பில்லாக் குலம்சார்ந்த உறங்கா வில்லி
     சீர்மைதனை உலகோர்க்கே எடுத்துச் சொன்னார்!
அறமில்லாச் செயல்புரிவோர் தாழ்ந்தோ ராவார்!
     அன்புடைமை நெறிநிற்பார் உயர்ந்தோ ராவார்!
மறுப்பில்லை இளையாழ்வார் கொள்கைக் கிங்கே
     மாண்புடைய மாமுனியை வாழ்த்து வோமே!

நல்லதிரு வாய்மொழிக்கே உரையைச் செய்ய
     நலமோங்கும் பிள்ளானை நமக்க ளித்தார்!
வல்லபெரு பிரம்மச்சூத் திரத்துக் கிங்கே
     வளமோங்கும் நல்லுரையை வடித்துத் தந்தார்!
சொல்லரிய கீதைக்கும் உரையைக் கண்டார்!
     தொல்லுலகில் 'சீர்பாச்யக் காரர்' ஆனார்!
வெல்லமென இனிக்கின்ற நூல்கள் தந்து
     விண்ணுக்கும் மண்ணுக்கும் உடையர் ஆனார்!

எமக்குற்ற செல்வமென இருக்கும் வேந்தர்!
     எம்மனத்தை ஆளுகின்ற கருணைச் செம்மல்!
தமக்குற்ற பேரமிழ்தை உலகோர்க் கெல்லாம்
     தந்துவந்த பெருவள்ளல்! அன்பின் ஊற்று!
உமக்குற்ற ஆசிரியர் ஐவர் போலே
     உலகத்தார் எவர்பெற்றார்! என்றும் என்றன்
மனமுற்ற மாமுனியே! மக்கள் நெஞ்சுள்
     வளர்ந்தோங்கும் உம்புகழைப் போற்று வேமே!

இராமநுச நாவலர் சுவாமிகள் மன்றத்தின் 17 ஆண்டு   
வைணவ மாநாடு. புதுச்சேரி (23-07-1995)

7 commentaires:

  1. இராமானுசருக்கு அழகிய பாமாலை...

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா

    ஒவ்வொரு வரியிலும் உள்ள சொல் வீச்சு மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. /// பிறப்பினிலே வேற்றுமைகள் உளவாம் என்று
    பேசுகின்ற மாந்தர்களைத் திருத்த வேண்டிச்
    சிறப்பில்லாக் குலம்சார்ந்த உறங்கா வில்லி
    சீர்மைதனை உலகோர்க்கே எடுத்துச் சொன்னார்! ///

    அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
    இதுவரை அறியாத பல அற்புதத் தகவல்களையும்
    அறிந்து கொண்டேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  5. வணக்கம் ஐயா!
    பெருமானார் ராமானுசர்பற்றி இவ்வளவிற்கு
    நான் அறிந்ததில்லை.
    அருமை ஐயா!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
  6. ஆசாரியன் தாள் வணங்கி வாழ்த்துகிறேன்,இன்னும் ஒரு நூறாண்டு இரும்.

    RépondreSupprimer