mardi 13 août 2013

காதல் ஆயிரம் [பகுதி - 123]




காதல் ஆயிரம் [பகுதி - 123]
 
996.
எண்ணத்துள் தேனே இனிக்குதடி! உன்மேனி
வண்ணத்துள் காதல் வழியுதடி! - கண்ணே..என்
உள்ளத்துள் உன்னினைவே ஊறுதடி! இன்பமெனும்
வெள்ளத்துள் நெஞ்சம் விழுந்து!

997.
எத்திக்கும் போற்றும் இனியவளே! என்னுடை
புத்திக்குள் ஏனோ புகுந்தனையோ! - முத்தமிழால்
சித்திக்கும் சீர்கள் சிறந்தோங்கும்! எப்பொழுதும்
தித்திக்கும் தேனாய்த் திரண்டு!

998.
நானூறும் நற்றமிழில் நங்கையுன் நல்லழகைத்
தேனூறும் பாக்களில் செய்தளித்தேன்! - வானூரும்
வண்ண நிலவாய் வருபவளே! என்மனத்தின்
எண்ண நிலவாய் இரு!

999.
ஓர்பாட்டு கேட்டாய்! உனக்காகக் காதலின்
சீர்பாட்டு செய்தேன்நல் லாயிரமே! - பேர்புகழ்
சேர்பாட்டு! செம்மலர்த் தேன்பாட்டு! நம்மரபின்
வேர்ப்பாட்டு என்றே விளம்பு!

1000.
ஆயிரம் பாட்டென்ன? ஆயுள் இறுதிவரை
தாயிடம் தண்டமிழ்ச் சால்புற்றும் - தூயகவி
ஆற்றல் தரித்தும் அவளழகை முற்றுமாய்ப்
போற்றல் எளிதோ புகல்?

--------------------------------------------------------------------------------------------------------

நூற்பயன்

காரிகையைக் கற்கும் கவிஞர்கள், என்காதல்
காரிகையைக் கற்றால் கவிபடைப்பார்! - பேரிகையைக்
கொட்டி முழுங்கிடுவார்! கோலத் தமிழாட்சிக்
கட்டில் வழங்கிடுவார் காண்!

22 commentaires:

  1. வணக்கம்
    இன்பத் தமிழால் இனிக்க இனிக்க
    அள்ளித் தந்த கவிதைத் துளிகள்
    எண்ணில் ஆயிரம் என விளைந்ததிங்கே இன்னும்
    இது போல் தொடர என் வாழ்த்துக்கள் தொடரட்டுமே !!

    RépondreSupprimer
  2. ஆயிரம் பாடல்கள் தந்து சாதனை புரிந்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், ஐயா.

    மற்றொருவர் இன்று 1000 பதிவுகள் தந்து சாதனை புரிந்துள்ளார்.

    அவருக்காக அடியேன் ஒரு சிறப்புப்பதிவு வெளியிட்டுள்ளேன்.

    நேரம் கிடைத்தால் வருகை தந்து வாழ்த்துங்கள், ஐயா.

    இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

    அன்புடன் VGK

    RépondreSupprimer
  3. கனிச்சீரில் வெண்பா வரவைக்கும் காரிகையை
    தனிச்சீரில் நின்பா காட்டிற்று!
    ஆச்சரியம்!

    வயதில்லை ஐயா;
    ஆயினும் வாழ்த்துக்கள்
    ஆயிரம் வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  4. கவிஞருக்கு வணக்கம்.
    காதல் ஆயிரம் என்ற தலைப்பில் வெற்றிகரமாக ஆயிரம் செந்தமிழ் கவிதைகளைப் புனைந்து முடித்திருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    இன்னும் இன்னும் பல ஆயிரம் கவி புனைய இறைவன் நல்லருள் புரியட்டும்.
    அன்புடன்,
    ரஞ்சனி

    RépondreSupprimer
  5. ஐயா வணக்கம்!...

    ஆயிரம் பூக்களாய் ஆனவெண் பாக்களே!
    பாயிரம் ஒன்றுநான் பாடிடவோ! - வைரமாம்
    கூறிடும் சீர்களும் கோடியும் கோபுரமாய்
    ஏறிடும் ஏட்டில் விரைந்து!


    நினைக்க முடியவில்லை... பெருமிதமாய் இருக்கின்றது.

    ஆயிரம் வெண்பாக்களை மாலையாக் கோர்த்து
    எங்கள் தமிழன்னைக்குச் சூட்டியுள்ளீர்கள்!
    மண்ணில் காலங்காலமாய் மறவாது வாழும் உங்கள் பாக்கள்!
    மேலும் தொடரவேண்டும்...

    வாழ்க தமிழ்! வளரட்டும் உங்கள் பணி!!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  6. தித்திக்கும் செந்தமிழால் எத்திக்கும் முழங்கினீர் .
    காதல் பாக்கள் பூக்கள் போல் நித்தமும்
    மலர்ந்தது கண்டு வண்டுகள் காதல் தமிழ்
    உண்டு களித்தன . மயக்கத்தில் திளைத்தன.
    வாழ்த்துக்கள் செப்பின தொடரவே !

    RépondreSupprimer
  7. வணக்கம் ஐயா!

    இமாலயச் சாதனை இயற்றியுள்ளீர்கள்!
    என் வாழ்வில் இதுவரை எங்குமே
    இதுபோலக் கண்டதில்லை!

    பொங்கிட ஆனந்தமும் புகழும் மேலும்
    தங்கிட வேண்டுகிறேன் பணிந்து!

    என் இனிய நல் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  8. சொக்கா...எனக்கு கையும் ஓடமாட்டேங்குது .. காலும் ஓடமாட்டேங்குது...
    ஒரு வெண்பா அல்ல ஆயிரம் வெண்பாவாமே.
    பாண்டிய மன்னன் இருந்திருந்தால் ஆயிரம் பொற்க்காசுகள் கொடுத்து கௌரவப்படுத்தியிருப்பார். -எட்டு திக்கும் மணம் பரப்ப வாழ்த்துகிறேன்

    RépondreSupprimer
  9. சொக்கா...எனக்கு கையும் ஓடமாட்டேங்குது .. காலும் ஓடமாட்டேங்குது...
    ஒரு வெண்பா அல்ல ஆயிரம் வெண்பாவாமே.
    பாண்டிய மன்னன் இருந்திருந்தால் ஆயிரம் பொற்க்காசுகள் கொடுத்து கௌரவப்படுத்தியிருப்பார். -எட்டு திக்கும் மணம் பரப்ப வாழ்த்துகிறேன்

    RépondreSupprimer
  10. ஆயிரம் பாட்டென்ன? ஆயுள் இறுதிவரை
    தாயிடம் தண்டமிழ்ச் சால்புற்றும் - தூயகவி
    ஆற்றல் தரித்தும் அவளழகை முற்றுமாய்ப்
    போற்றல் எளிதோ புகல்?


    ஆயிரமாய் மலர்ந்து மணம் வீசும் பூக்களாய்
    அற்புதமான பாக்களைப் படைத்து உலவவிட்டு
    அருமையான ஆக்கம் நிறைவாய் தந்தமைக்கு
    அன்பான பாராட்டுக்கள்..இனிய வாழ்த்துகள்..!

    RépondreSupprimer
  11. ஆயிரமாவது பதிவுக்கு பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பில்
    வாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த
    இனிய அன்பு நன்றிகள் ஐயா..

    RépondreSupprimer
  12. காரிகையைக் கற்கும் கவிஞர்கள், என்காதல்
    காரிகையைக் கற்றால் கவிபடைப்பார்! - பேரிகையைக்
    கொட்டி முழுங்கிடுவார்! கோலத் தமிழாட்சிக்
    கட்டில் வழங்கிடுவார் காண்!

    ஆயிரம் வெண்பாக்கள்...
    அமுதாய்... தேனாய்... அழகுத் தமிழில்...
    வாழ்த்துக்கள் கவிஞரய்யா...
    இன்னும் தொடருங்கள்...

    RépondreSupprimer
  13. "காதல்ஆயிரம்" படைத்து கரும்பாக சுவைக்கத் தந்தீர்கள். மகிழ்ந்தோம் இனியவாழ்த்துகள்.

    RépondreSupprimer

  14. அள்ளி அளித்துள்ள ஆயிரம் பாபடித்துத்
    துள்ளி மகிழ்ந்துநான் சொக்குகிறேன்! - வெள்ளி
    நிலவாய் ஒளிவீசும் நின்காதல் சீா்கள்
    மலராய் மணக்கும் மலா்ந்து!

    RépondreSupprimer

  15. வணக்கம்!

    சீரா யிரம்பெற்ற சின்னவளை நான்பாடிப்
    பேரா யிரம்பெற்றுப் பேணுகிறேன்! - பார்..அழகின்
    உச்சமென ஒண்டமிழை! ஓதிக் களித்தவரை
    மெச்சுமென் நெஞ்சம் மிகுத்து!

    RépondreSupprimer

  16. வணக்கம்!

    என்காதல் ஆயிரத்தை ஏந்திப் படித்தவா்கள்
    இன்காதல் வாழ்வை இசைத்திடுவார்! - மின்வலையில்
    நாளும் கருத்தீநத நல்லவா்க்கு என்னன்றி!
    மூளும் எனக்குள் மொழி!

    RépondreSupprimer
  17. வணக்கம்!

    கற்கண்டுத் தேன்பாகாம் காதலை வெண்பாவில்

    பொற்செண்டாய்க் கட்டிப் புகழ்கொண்டீர்!-நற்றமிழ்த்

    தாயும்மைப் பெற்றாள் தவப்பயனால்.பாரெங்கும்

    பாயுமையா நீரெழுதும் பா!

    கவிஞர் சரோசா தேவராசு

    RépondreSupprimer
  18. ஆயிரம் வெண்பா பாடிய அற்புதப் பாவலர் நீங்கள். கலைமகள் உங்கள் உள்ளத்தில் வாசம் செய்கிறாள். பாராட்டுக்கள்.
    மரபுக் கவிதை இலக்கணங்களை கற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் நிறையப் பேர் பயனடைவார்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உலகம் முழுதும் உயா்தமிழ் ஓங்கப்
      பலவும் பதிவாய்ப் பகா்ந்தேன்! - கலைகமழ
      யாப்பைப் படைப்பேன்! படிப்போர் இனியகவித்
      தோப்பைப் படைப்பார் தொடா்ந்து!

      Supprimer
  19. வணக்கம்!

    வண்ணத் தமிழால் வளர்காதல் ஆயிரம்
    கன்னல் அமுதாய்க் கனிந்திடும் - மின்னும்
    கவியழகும், கற்பனையும் கண்டு வியந்தே
    புவிபோற்றும் உம்மைப் புகழ்ந்து!

    கவிஞர் வே.தேவராசு

    RépondreSupprimer
  20. அழகாய்ஆயிரம்படைப்புகளை
    அமுதாய்படைத்திட்டஅய்யா
    அழகுதமிழில்அற்புதம்
    அத்தனையும்கற்கண்டு

    RépondreSupprimer
  21. வணக்கம்
    ஐயா

    இன்று இந்தியாவின் சுதந்திர நாளில் வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/08/blog-post_15.html?showComment=1376568104980#c892188592548843204
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer