காமராசர்
[கலிவெண்பா]
வாழைபோல் நன்மை வழங்கிவந்த காமராசர்
ஏழைகட் காகவே இங்குதித்த ஏந்தலென்பேன்!
பட்டம் பதவிகளைப் பாட்டாளி மக்களுறத்
திட்டம் பலசெய்தே சீராட்சி கண்டவராம்!
அன்னார் பெரும்புகழை ஆற்றல் சிறப்புகளைச்
சொன்னால் மனமினிக்கும் சோகமெல் லாம்பறக்கும்!
நாட்டின் விடுதலையை நாடிய காமராசர்
வேட்டு முறையை விரும்பாத நன்மனத்தார்!
உத்தமர் காந்தியிடம் உண்மையைப் பெற்றதனால்
சத்திய மூர்த்தியிடம் சால்புகளைக் கற்றதனால்
அன்பு வழியொன்றால் அன்னியனை ஓட்டுவிக்கத்
துன்பம் பலவேற்றுத் தூய செயல்புரிந்தார்!
இன்பத் தமிழ்நாட்டின் ஈடில் முதலமைச்சர்
என்று புகழ்பெற்றார் ஏற்றமிகு தொண்டாலே!
ஒத்துழை யாமை உயர்ந்த இயக்கத்தில்
மெத்தக் கலந்து விடுதலையை வேண்டியவர்
உப்பெடுக்கும் ஒப்பற்ற போரினிலே முன்னின்று
தப்பாமல் வெஞ்சிறையைத் தாமுவந்து கொண்டவராம்!
தந்நலம் இல்லாத் தலைவர் அவர்போலப்
பொன்மனம் பெற்றார் புவியினில் உள்ளனரோ?
கள்ளங் கபடமிலாக் கற்றறியாக் கூட்டத்தில்
உள்ள குறைகள் உடனே பறந்தோடப்
பள்ளி பலவமைத்தார் பல்கலையும் பெற்றிடவே!
துள்ளித் திரிகின்ற தூய சிறார்க்கங்கே
உண்ண உணவளித்தார்! உண்மைப் பணிசெய்தார்!
எண்ணம் அனைத்திலும் ஏழைகளின் முன்னேற்றம்
கல்வியைக் கற்றார் கலைவல்லார் ஆவாராம்!
தொல்புவியில் தொண்டால் படிக்காத மேதையராம்!
ஊழை விரட்டி உயர்நலங்கள் சேர்த்திட்டார்
ஏழைபங் காளன்என எல்லோரும் போற்றிடவே!
மூத்த தலைவர்கள் முன்னே வழிவிட்டுப்
பூத்த முகத்தோடே புத்திளைஞர் ஏற்கட்டும்
நாட்டுப் பணிபுரிய நற்றலைமை என்றாரே!
ஏட்டில் எழுதாமல் இங்குவழி தாம்விட்டார்!
கல்விக்குக் கண்கொடுத்த காமராசர் என்றென்றும்
சொல்லைச் செயலாக்கித் தூய்மையுடன் வாழ்ந்தாரே!
வாட்டும் வறுமையுடன் வாழும் அறியாமை
நாட்டில் நடமிடும் நஞ்சாம் இனவெறி
தீண்டாமை என்கின்ற தீயசொல்! சாதிமத
வேண்டாத குப்பை! வெறும்பேச்சு! வீண்வாதம்!
அத்தனையும் நீக்க அறவழியில் பாடுபட்ட
வாய்மைமிகும் காமராசர் வாழ்ந்த திருநாளில்
தூய்மைமிகும் நல்லாட்சி தொல்லையிலாப் பொன்னாட்சி!
கன்னித் தமிழ்நாடு கண்டதுவும் பொய்யாமோ?
ஊழல் சிறிதுமிலை! ஊரில் வறுமையில்லை!
வீழும் சமுதாய வேற்றுமையை வேரறுத்து
நாடு நலமுறவே நன்மைகளைச் செய்திட்டார்!
கூடும் வறுமையைக் கூண்டோ(டு) அழித்திட்டார்!
சீருடை தந்திட்ட சீராளர் நற்புகழைப்
பாரில் பரப்பிடவே பாடுதல் புண்ணியமே!
கண்கண்ட தெய்வம்நம் காமராசர்; என்றுமனம்
புண்பட்ட மாந்தரெல்லாம் போற்றிப் புகழ்ந்தாரே!
எல்லார்க்கும் எல்லாம் இயல்பாய்க் கிடைத்திடவே
நல்லார் உழைத்திட்டார் நன்கு!
கம்பன் இதழ் 15-07-2003
கலிவெண்பாவில் கர்ம வீரரின் புகழ்பாடியது
RépondreSupprimerதேனொடு கல்ந்த தெள்ளமுதாய் இனித்தது
படித்து மிகப் பரவசமுற்றேன்
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Supprimerவணக்கம்!
கலிவெண்பா கற்றோர் மனங்கரைத்தால், பாட்டில்
புலியென்பார் என்னைப் புகழ்ந்து
tha.ma 2
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வாக்களித்து என்றன் வளா்தமிழைப் போற்றுகின்றீா்!
ஊக்கத்தால் துள்ளும் உளம்!
கல்விக் கண் திறந்த காமராசரை நாளும் போற்றுவோம்
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கல்விக்கண் தந்துவந்த நற்காம ராசரைச்
சொல்லி மகிழ்தல் சுகம்!
சிறப்பான பகிர்வு... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
பச்சைத் தமிழரைப் பாடிக் களித்திட்டால்
உச்சி குளிரும் உவந்து!
நாமெல்லாம் காமராசர் பற்றி அறிவதே இப்போதெல்லாம் மிக அரிதாகிவிட்டது. இந் நிலையில் இங்கு உங்கள் கவிதையால் இப்படியாகிலும் அறிந்தது மகிழ்வே.
RépondreSupprimerவாழ்த்துக்கள்!
ஏழை பங்காளனை
RépondreSupprimerஇடர்நீக்க வந்தவரை
வாழையடி வாழையாக
நினைப்போம் உணர்ந்து!
அவர் அருமை பெருமைகளை அறிந்திருந்தும் உங்கள் பாவினால் உணரும்போது
அவர் மதிப்பு பன்மடங்காகிறது.
மிகமிக அருமை|
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!
வணக்கம் ஐயா கல்விக்கண் திறந்த காமராஜர் தமிழகத்தை பசுமை மாறாமல் ஆட்சி செய்தவர் விவசாயம் மிகச் சிறப்பாக நடைபெற்றது பகுத்தறிவு தந்தை பெரியாருடன் படம் அருமை கவிதை வரிகளும் அருமை நன்றி ஐயா
RépondreSupprimerஅருமை...
RépondreSupprimer