காதல் ஆயிரம் [பகுதி - 118]
971.
பாத்திறம் மின்னுமுயர் பாவலனே! இன்காதல்
சூத்திரம் உன்றன் சுடர்கவிகள்! - தோத்திரமாய்ப்
பாடிக் களிப்பேன்! பசும்பாவைப் பெண்ணாகச்
சூடிக் களிப்பேன் சுவைத்து!
972.
பாநெஞ்சம் தந்த பழக்கூட்டு நூல்படித்துப்
பூநெஞ்சம் வாடிப் புலம்புதடா! - தீநெஞ்சம்
பெண்ணெஞ்சம் என்பேனா? பேதை உளம்தெளிய
பண்கொஞ்சும் வண்ணம் பழகு!
973.
வெந்தேன் நினைவுகளால்! விந்தைக் கவியழகா
வந்தேன் உனைத்தேடி! வண்ணங்கள் - சந்தமிடச்
செந்தேன் இதழால் சிலிர்த்திடும் முத்தங்கள்
தந்தேன் தமிழ்போல் தழைத்து!
974.
சிலுக்குடை போட்டுச் சிரிப்பவளே! மெல்லத்
தளுக்குநடை போட்டுச் சகியே! - குலுக்காதே!
ஒய்யாரப் பார்வையை ஊட்டி உலுக்காதே!
மெய்யார வந்தெனை மேவு!
975.
விழியிருந்தும் ஏனடி வீண்செய்தாய்? இன்ப
மொழியிருந்தும் ஏனடி மௌனம்? - வழியில்
பொழிலிருந்தும் ஏனடி போனாய் வெறுத்து?
வழியிருந்தும் ஏனடி வம்பு!
(தொடரும்)
இன்னும் 25 பாக்களுடன் இந்த காதல் ஆயிரம் தொடர் முடிவிற்கு வரப்போகிறதோ...
RépondreSupprimer925 பாக்களையும் வெறும் ஒன்பது நாட்களுக்குள் பாடிவிட்டது போல உணர்வுவருகிறது.
இன்னும் இருக்கிறதே படித்துக் களிப்பதற்கும் கற்பதற்கும் என நினைத்திருந்தது விரைவில் நிறைவு காணப்போவதையிட்டு மனதில் வலித்தாலும் பெருமையாக இருக்கின்றது கவிஞரையா!
என் அறிவிற்கெட்டியவரை இதுபோல யாரும் இப்படி இக்காலகட்டத்தில் ஆயிரம் வெண்பாக்களை பாடிப் பதிந்தத்ததாய் அறியவில்லை.
உங்கள் வெண்பாக்கள் அத்தனையும் முத்துக்கள்! அருமை!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!
வெந்தேன் நினைவுகளால்! விந்தைக் கவியழகா
RépondreSupprimerவந்தேன் உனைத்தேடி! வண்ணங்கள் - சந்தமிடச்
செந்தேன் இதழால் சிலிர்த்திடும் முத்தங்கள்
தந்தேன் தமிழ்போல் தழைத்து!
வண்ணப் பா வடிக்கும்
வள்ளல் நீர் எப்போதும்
எண்ணக் காதலுக்கும்
எழுத்தாணி ஆனவரே
பொன்னை உருக்கி
புடம் போட்டேன்
உந்தன் கவிபோல்
ஒன்றும் ஒளிரவில்லை...!
அத்தனையும் அழகிய பாக்கள்
ரசித்திட எம்மை வைத்தமைக்கு நன்றிகள்
வாழ்த்துக்கள் கவிஞரே வாழ்கவளமுடன்
கவிஞர் அய்யா வணக்கம் !
RépondreSupprimerஇயந்திர மனிதர்கள், அவர் மனம் இரும்பாகி எத்தனையோ காலம் ஆகிவிட்டது .
ஆனால் தங்கள் காதல் ஆயிரம் என்ற கவிதை மலர்ச்சோலை காதலின் நறுமணம் வீசி
காதல் எவ்வளவு சுவையானது என்று உணர்த்துகிறது எத்தனை முறை படித்தாலும் தேனாக இனிக்கும் கவிதைகள்
வாழ்க கவிஞர் !!!
- அன்பு மறவா மாமல்லன்