vendredi 23 août 2013

சிலப்பதிகாரப் பாட்டரங்கம்




சிந்தை அள்ளும் சிலப்பதிகாரம்
[தலைமைக் கவிதை]

(இளங்கோவின் அரசியல், கோவலனின் மோகம்,
கண்ணகி என்னும் கனல், மாதவியின் மாட்சி)

இறை வணக்கம்

கண்ணா! உன்றன் கருணையினால்
     காலம் தன்னை வென்றிடுவேன்!
என்,நா என்றும் உனைப்போற்றி
     இறவா நிலையை நாடிடுமே!
பொன்னார் நெஞ்சர் இளங்கோவின்
     புகழார் சிலம்பின் சீர்பாட
மன்னா! மயக்கும் மணிவண்ணா!
     மனத்துள் அமர்ந்து காத்தருளே!

தமிழ் வணக்கம்

சல்..சல்.. என்று சிலம்பதிரத்
     தங்கத் தமிழே நீ..வாராய்!
சொல்..சொல்.. என்றே எனைநாடி
     சுடரும் கவியை நீ..கேளாய்!
வெல்..வெல்.. என்று என்னுள்ளே
     வீரத் தமிழை நீ..அருளாய்!
வில்,மீன், புலியை இமயத்தின்
     மேலே பதித்த என்தாயே!

அவை வணக்கம்

இளங்கோ படைத்த நற்சிலம்பின்
     எழிலைக் காண வந்தோரே!
வளம்,கோ தமிழை மூவேந்தர்
     வடிவாய் வளர்த்த பணியாக
இளம்,கோ கவிஞன் பாரதியான்
     இன்பத் தமிழைப் பரப்புகிறேன்!
நலமாய் உங்கள் துணைவேண்டி
     நவின்றேன் வணக்கம்! ஏற்பீரே!

இளங்கோவின் அரசியல்

பத்து நபரைக் கொலைசெய்து
     பதவி பெறுதல் இக்காலம்!
முத்து மணியின் ஆட்சியினை
     முற்றும் துறந்த(து) அக்காலம்!
பித்துப் பிடித்தே அரசியலில்
     பிழைப்போர் வாழ்தல் இக்காலம்!
சொத்தும் சுகமும் மக்களெனத்
     தூயோர் இருந்த(து) அக்காலம்!

கோடி கோடி பலகோடிக்
     கொள்ளை அடிப்ப(து) இக்காலம்!
வாடி வதங்கும் கொடிகண்டு
     வன்தோ் அளித்த(து) அக்காலம்!
தேடிச் சென்றே அரசியலில்
     மகனைச் சேர்ப்ப(து) இக்காலம்!
நாடி வந்த பசுவுக்கு
     நல்ல தீர்ப்பாம் அக்காலம்!

நீதி கேட்ட மங்கைக்கு
     நேசக் கோயில் அக்காலம்!
சோதி டர்சொல் கேட்டவுடன்
     சோகம் விளைத்த(து) இக்காலம்! 
சாதி சமயச் சண்டையிலே
     அரசு அமைப்ப(து) இக்காலம்!
காதி நெஞ்ச இளங்கோவின்
     கருணை கமழ்ந்(து) அக்காலம்!

அரசு பிழைத்த காலத்தில்
     அறமே கூற்றாய் ஆகுவதை
முரசு கொட்டி மொழிகிறது
     முன்னே பிறந்த நற்சிலம்பு!
அரசை ஆள்வோர் இளங்கோவின்
     அருமைத் தமிழைத் தம்முடைய
சிரசில் தரித்துத் தெளிந்திட்டால்
     செழிக்கும் உலகைக் காண்பாரே!

நல்ல இளங்கோ சொல்லிய அரசை
வல்ல தமிழில் வடிக்க வருகிறார்
செந்தமிழ்ச் செல்வி! சிந்தனை அரசி!
நந்தமிழ் மரபை நல்கும் வாணி!
புன்னகை முகத்தில் பூக்கும் கவிகளைப்
பொன்னகை போன்று பூந்தமிழ் அணிவாள்!
குரலால் குணத்தால் கொள்ளை கொள்ளும்
அருங்கவி மங்கையை அழைத்தேன்! திருமதி
சண்முக நாதன் சால்புடன் வருகவே!
தண்டமிழ் அமுதை அன்புடன் பொழிகவே!

கோவலனின் மோகம்

செவ்வேள் முகத்தன்! கலைமிளிரும்
     சீரார் அகத்தன்! பெரும்மறவன்!
எவ்வேல் விழியார் மயக்கமுற
     இலங்கும் அழகன்! நெஞ்சமதைக்
கவ்வேல் கண்ணாள் மாதவியைக்
     கலந்து மறந்தான் தன்மனையை!
தவ்வேல் அணங்கு வந்தெய்த
     தளர்ந்தான் இழந்தான் வாழ்வினையே!

தானே வந்து முன்வினைகள்
     தாக்கும்! வாழ்வைச் சீரழிக்கும்!
வானே என்று சேர்த்தபொருள்
     வற்றிப் போகும்! துயராடும்!
வீணே பேசும் மனிதா!கேள்!
     வினையாம் கொடுமை விளைந்துவரும்!
ஊனே உருகி ஊழ்வினையால்
     உயிரை இழந்தான் கோவலனே!

கோவலன் காதலைக் கொடுக்க வருகிறார்
நாவளம் மிக்கநம் பார்த்த சாரதியார்!
பாவளம் இவரின் பாட்டில் கொஞ்சும்!
காவலாய் நின்று கனிக்தமிழ் காக்கும்
அன்பர்! ஆற்றல் மறவர்! என்றன்
நண்பர்! சிறுகதை, நல்ல செய்திகள்,
புதிய கவிதைகள், பொழியும் கவிஞர்!
பதியும் வண்ணம் பாக்கள் படைக்கப்
பார்த்தா் வருகவே! பறந்து வருகவே!
ஆர்த்த சுவைகவி அள்ளித் தருகவே!

கண்ணகி என்னும் கனல்

கற்புக் கரசி! கனல்மூட்டி
     கருகச் செய்தாள் மதுரையினை!
அற்பர் நிறைந்த அரசியலை
     அழிக்க மீண்டும் வருவாளோ?
பொற்பார் மங்கை! பூந்தமிழின்
     புகழார் குணத்துக் கண்ணகியைப்
பற்றிப் போற்றும் என்,நாவே!
     பகையைச் சாய்க்க எரி..மூட்டு!

பெண்ணுக்(கு) இங்கே ஒருநெறியும்
     ஆணுக்(கு) இங்கே ஒருநெறியும்
பின்னும் வாழ்க்கை பிழையாகும்!
     பெருமை நிறைந்த தமிழர்களே
என்றும் கற்பு இருவருக்கும்
     இருத்தல் வேண்டும்! பாரதியும்
முன்னே இதனை உரைத்திட்டான்
     முடிவாய்ப் யானும் மொழிகின்றேன்!

கண்ணகி கனலைக் கவியில் மூட்ட
என்னுயிர்த் தோழி இங்கே வருகிறார்!
நற்செயா பத்ம நாபன்! இவரின்
சொற்சுவைப் பாட்டில் சொக்கும் நம்மனம்!
கருத்தின் ஆழம் கற்பனை ஓட்டம்
பெருகிப் பாயும்! பிழையைத் தாக்கும்!
மதுரையை எரித்த மங்கையைப் பாடப்
புதுமைப் பெண்ணே! புரட்சி  ஒளியே!
புயலென எழுக! பூந்தமிழ் பொழிக!
இயலிசைப் புலவர் இனிது போற்றவே!

மாதவியின் மாண்பு

ஆடற் கலையின் ஆலயமாய்
     அமைந்த நங்கை மாதவியாள்!
பாடற் கலையில், இசைமீட்டி
     படைக்கும் வண்ண ஏழிசையில்,
ஈடே இல்லா இளங்கொடியாள்!
     இன்பத் துறையின் இலக்கணமாய்க்
கூடற் கலையில் அவள்திகழக்
     கொஞ்சிக் களித்தான் கோவலனே!
 
வண்ணக் கிளியாள் மாதவியின்
     மாட்சிக் கொன்று உரைத்திடுவேன்!
எண்ணம் நிறைந்த கோவலனின்
     இறப்பைக் கேட்டுத் துறவேற்றாள்!
அன்னம் ஈந்தே உலகுயிரை
     அன்பாய்க் காக்கத் தன்மகளைச்
சின்ன வயதிய் துறவேற்கச்
     சொன்ன சொற்கள் மறப்போமோ?

மாதவி மாட்சியை மணக்கும் தமிழில்
ஓத வருகிறார் உயர்செய ராமர்!
பற்பல இராமர் பாரில் உள்ளார்!
நற்றமிழ் இராமர் என்றே நானும்
இவரை அழைத்தே இனிமை அடைந்தேன்!
சிவனின் அருளும் திருமால் கருணையும்
பெற்ற நண்பர்! பெரும்புகழ் மேவக்
கற்றோர் போற்றக் காக்கிறார் தமிழை!
சீர்செய ராமரே! செந்தமிழ் வாணரே!
கார்மழை போன்று கவியைப் பொழிகவே!

முடிப்பு கவிதை


உத்திராப் பிள்ளையர் உவந்தே வந்து
முத்தமிழ் முழங்கும் இலக்கிய விழாவின்
மங்கள விளக்கை மாண்புடன் ஏற்றினர்
தங்கத் தமிழ்போல் தழைத்து வாழ்க!

திருப்பணிச் தொண்டர்! அருந்தமிழ் அன்பர்!
குருவருள் கமழும் பெருமன சீலர்!
சுந்தர இரத்தின சபாபதியர் தந்த
செந்தமிழ் உரைக்குச் செப்பினேன் வணக்கம்!

வான்மழை யாக வாழ்த்தை வழங்கிய
தேன்சுவைச் செல்வர் தேவ குமரனை
வாழ்த்தி வணங்கி மகிழ்ந்தேன்! தொண்டுள் 
ஆழ்ந்த அவர்மனம் வெற்றியைச் சூடுக!

முன்னிலை ஏற்று முத்தமிழ் அளித்த
பண்புடைச் செல்வர் பற்குண ராசர்
என்னுளம் கவர்ந்த இனியவர் என்பேன்!
பொன்மனச் செல்வர் புகழினைப் பெறுக!

கிருட்டின நாதரின் அருந்தமிழ் வாழ்த்தை
பெருமையாய்ப் பெற்றோம்! பீடுடன் வாழ்கவே!

வழுக்கைத் தலையைப் போற்றியதால்
     வணக்கம் சொன்னேன் நண்பருக்கு!
வழுக்கை இளமை என்பதனை
     நண்பர் ஏனோ மறந்தாரோ?
வழுக்கை உடைய இளநீரே
     வல்ல இளமை எனவுரைப்பேன்!
வழுக்கை ஏற நன்கேற
     வளமாய் அறிவு மின்னிடுமே!

அண்ணன் ஆள அன்னாளில்
     தம்பி துறவு கொண்டதனைக்
கன்னல் தமிழில் சீர்இளங்கோ
     காப்பி யம்தந்(து) உயர்ந்தாரே!
முன்னே பிறந்த நம்மினத்தின்
     மேன்மை அறிந்து மகிழ்கின்றோம்
என்னே தமிழன் பண்பாடே!
     என்றன் தோள்கள் விம்முதடா!

மோகம் கொண்ட கோவலனின்
     மூச்சும் பேச்சும் எதுவென்று
வேகம் கொண்டு என்..நண்பர்
     விளித்தார்! அவரின் கவிகேட்டுத்
தாகம் தணிந்தே என்னெஞ்சம்
     தாவித் தாவி மகிழ்கிறதே!
பாகம் தன்னில் பெண்ணுருவைப்
     படைத்தோன் அருளால் வாழியவே!

கோவலன் தந்தான் தொல்லை!
     கொஞ்சியே களித்தாள் முல்லை!
ஆ..வளம் பொங்கும் பாக்கள்!
     அருந்தமிழ் அணியும் பூக்கள்!
நாவளம் பெற்ற நண்பர்!
     நலமெலாம் பெற்று வாழ்க!
பாவளம் பாடி யானும்
     பண்புடன் நன்றி சொன்னேன்!

பத்துத் தடவை சிலம்புதனைப்
     படிக்க வேண்டும் அரசியலார்!
பித்தம் தெளிந்து நல்லாட்சி
     பேண வேண்டும் அரசியலார்!
நித்தம் மக்கள் நிலையெண்ணி
     நெஞ்சம் பொங்கி லினோதினியார்
முத்தாய்க் கவிதை படைத்திட்டார்
     மூவாத் தமிழ்போல் வாழியவே!

கலையின் நாயகி! காதல் தேவதை!
தலைக்கோல் பெற்ற தளிர்க்கொடி!
விடுதல் அறியா விருப்பினன் கோவலன்
நெடுஞ்சுகம் கண்டான்! நிலத்தை மறந்தான்!
வல்ல கோவலன் மறைவைக் கேட்டு
நல்ல மாதவி நாடினால் துறவறம்!
மாதவி மாண்பை மாண்புடன் இங்கே
ஓதிய இராமன் ஓங்கி வாழ்கவே!

கொஞ்சும் சிலம்பின் சிறப்புகளைக்
     கொடுத்து மகிழ்ந்த பாவலரே!
தஞ்சம் அடைந்து தண்டமிழைச்
     சால்பாய்ச் சுவைத்த அவையோரே!
விஞ்சும் தமிழின் மேன்மைகளை
     விழியாய்க் காக்கும் சான்றோரே!
நெஞ்சம் நிறைந்த நன்றியினை
     மிஞ்சும் அன்பால் மொழிகின்றேன்!

16-05-2005 இலக்கிய விழாப் பாட்டரங்கம், பிரான்சு

4 commentaires:

  1. வணக்கம்
    ஐயா



    சிந்தை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற தலைப்பில் சிறு தலைப்புக்கள் கொண்டு மிக அழகாக எழுதிய விதம் மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா படிக்க படிக்க படிக்கத்தான் சொல்லுது ஐயா,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. எங்களின் சிந்தையையும் அள்ளி விட்டது... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    RépondreSupprimer
  3. அப்பா... தித்திக்கும் தமிழ் சிறப்பாய் விளையாண்ட பாட்டரங்கப் பகிர்வு நன்றி ஐயா.

    RépondreSupprimer
  4. பாட்டரங் கத்திற் பதிந்தநற் பாட்டுகள்
    நாட்டரங் கத்தின் நலம்!

    மிக மிக உயர்வான, சிந்தனைச் சிறப்பான பாக்கள் ஐயா!
    உயர்ந்த கருத்துகள்! அருமை!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer