கலிப்பா மேடை – 62
கலித்தாழிசை – 5
அம்மானை
அம்மானை
என்பது மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிகையில் அமைந்த எலுமிச்சம்பழம் போன்ற காய்களை
எறிந்து அவை கீழே விழாமல் பிடித்து விளையாடும் பெண்கள் விளையாட்டு.
அம்மானை
ஆடும் போது ஒருத்தி ஒரு கருத்தைக் கூறுவாள்,
அடுத்தவள் அதில் ஒரு வினாவை எழுப்புவாள், மூன்றாமவள் விடை கூறுவாள். மூவர் பாடுவதும்,
இருவர் பாடுவதும், ஒருவரே பாடுவதும் உண்டு.
அம்மானைப்
பாடல் கலித்தாழிசையில் அமைதலும் உண்டு. வெண்டளை பயின்று வரும். முதல் மூன்றடிகள் அளவடியாய், ஈற்றடி எண்சீர்
அடியாய் வரும். இரண்டாம் அடி ஈற்றிலும், நான்காம் அடி ஈற்றிலும், அதன் அரையடி ஈற்றிலும்
அம்மானை என்ற சொல் அமையும். இரண்டாமடி மூன்றாமடியிலும் அந்தாதித்து வரும். நான்கடியும் ஓரெதுகை பெற்றுவரும். நாலாமடியின் முதற்சீருக்கு ஏற்ற மோனை அதன் செம்பாதியில்
அமையும். முன்னுள்ள மூன்றடிகளில் ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.
இப்பாடல்
அடிகள் வெண்டளை பொருந்தியே வரும் எனினும் முதலடி இறுதிச்சீருக்கும் அடுத்த அடி முதற்சீருக்கும்
தளைகோடல் கூடாது [வெண்டளை கட்டாயமில்லை], ஆனால் அவ்விடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளை
அமையாது.
அம்மானைப்பாட்டு
இசைப்பாட்டு ஆதலின் அம்மானை வரி எனவும்படும். இஃது ஒரு பொருள்மேல் மூன்றற்குக் குறையாமல்
அடுக்கிவரும்.
சோழன் புகழ்
அம்மானை
1.
வீங்குநீர்
வேலி உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணம்
காத்த உரவோன்யார் அம்மானை?
ஓங்கரணம்
காத்த உரவோன் உயர்விசும்பில்
துாங்கெயில்
மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை!
……
சோழன் புகார்நகரம் பாடலோர் அம்மானை!
புறவுநிறை
புக்குப் பொன்னுலகம் ஏத்தக்
குறைவில்
உடம்பெரிந்த கொற்றவன்யார் அம்மானை?
குறைவில்
உடம்பெரிந்த கொற்றவன்முன் வந்த
கறவை
முறைசெய்த காவலன்காண் அம்மானை!
……
காவலன் பூம்புகார் பாடலோர் அம்மானை!
3.
கடவரைகள்
ஓரெட்டும் கண்ணிமையா காண
வடவரைமேல்
வாள்வேங்கை ஒற்றினன்யார் அம்மானை?
வடவரைமேல்
வாள்வேங்கை ஒற்றினன்திக்கு எட்டும்
குடைநிழலில்
கொண்டளித்த கொற்றவன்காண் அம்மானை!
……கொற்றவன்தன்
பூம்புகார் பாடலோர் அம்மானை!
[சிலப்பதிகாரம்,
வாழ்த்துக் காதை – 16, 17, 18]
.
பாட்டரரசர்
அம்மானை!
1.
சீர்மணக்கப் பாட்டெழுதிச் சிந்தை கவர்கின்ற
பேர்மணக்கம் பாட்டரசர் பீடொளிரும் அம்மானை!
பேர்மணக்கம் பாட்டரசர் பீடொளிரும் நாடுண்டோ?
தார்மணக்கம் கோலுண்டோ? சாற்றுகவே அம்மானை!
……தமிழ்தந்த கோல்கொண்டு தாமாள்வார் அம்மானை!
2.
வெள்ளாடைப் பாட்டரசர் மேடை மணம்வீசம்!
முள்ளோடை மண்கூட முத்தாகும் அம்மானை!
முள்ளோடை மண்கூட முத்தாகும் நற்றொழில்
ஒள்ளாடை வீணாகி ஓய்வுறுமே அம்மானை?
……ஒண்டமிழர் நுாலாடை ஒளிவீசும் அம்மானை!
3.
வல்ல புகழ்மேவி வாழ்கின்ற பாட்டரசர்
சொல்லச் செவியுருகிச் சொக்கிடுவார் அம்மானை!
சொல்லச் செவியுருகிச் சொக்குவது மாமாயம்
நல்ல செயலாமோ நல்கிடுவாய் அம்மானை?
……நல்லார் நடையழகு சீருரைக்கும் அம்மானை!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
02.07.2022
அம்மானைப்
பாடலில் ஈற்றில் வரும் விடைமொழியுள் இருபொருள்படச்
சிலேடை அமைதல் சிறப்பாகும். முப்பொருள் நாற்பொருள்படச் சிலேடை அமைதல் மிகச் சிறப்பாகும்.
மேலுள்ள பாட்டரசர் அம்மானையில் முதல் பாடலில் [கோல் – பிரம்பு, எழுதுகோல்] இரண்டாம்
பாடலில் [நுாலாடை – ஆடை, நுால்கள்] மூன்றாம் பாடலில் [நடையழகு – பாட்டின் தொடையழகு,
வாழ்வின் ஒழுக்கம்] என இருபொருள் சிலேடை வந்தன.
விரும்பிய பொருளில் இவ்வகைக் கலித்தாழிசை அம்மானை ஒன்று பாடுமாறு
அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.11.2024
Aucun commentaire:
Enregistrer un commentaire