கலிப்மேடை - 59
கலித்தாழிசை - 2
கலித்தாழிசை இரண்டு அடிகளிலும் வரும்.
பல அடிகளிலும் வரும். ஈற்றடியில் மற்ற அடிகளை விடச் சீர்கள் மிகுந்து வரும். மற்ற
அடிகளின் சீர்கள் அளவொத்தும் வரும். அளவொவ்வாமலும் வரும். மடக்குப் பெற்றும் வரும்.
கலித்தாழிசை தனிப்பாட்டாகவும் வரும்.
ஒரு பொருளில் மூன்று பாடல்கள் அடுக்கப்பட்டும் வரும். ஒரு பொருண்மேல் மூன்றாய் வருவனவற்றைக்
கலியொத்தாழிசை என்பர்.
கலியொத்தாழிசை - 1
வெண்டளையால் வந்த கலியொத்தாழிசை
திருநாள் ஒருகேடா?
1.
ஈழ உடன்பிறப்பின் இன்னல்களைக் கண்டும்தன்
வாழ்வே பெரிதென்று வாய்மூடிக் கொண்டிருப்பான்!
கோழையாய் வல்லாரைக் கும்பிட்டு வாழ்ந்திடுவான்!
தாழ்பிறவி யாம்அவற்குத் தைந்நாள் ஒருகேடா?
……தன்மானம் இல்லாற்குத் தைந்நாள் ஒருகேடா?
2.
பட்டமே யென்று பறப்பான்! பதிவியென்றால்
கட்டித் தழுவியெவன் காலும் பிடித்திடுவான்
எட்டாப் பரிசுகளுக் கேங்கும் அவனுடைய
திட்டமிலா வாழ்வில் திருநாள் ஒருகேடா?
……திருந்தாதான் வாழ்வில் திருநாள் ஒருகேடா?
3.
மானமே இன்றி வடமொழியில் போற்றிசெய்வான்!
ஆனவரை தாய்த்தமிழில் ஆங்கிலத்தைப் பெய்திடுவான்!
தேனின் இனிதான செந்தமிழுக்கே கூற்றாகிப்
போன அவனுக்குப் பொங்கல் ஒருகேடா?
……புழுப்பிறவி யாம்அவற்குப் பொங்கல்
ஒருகேடா?
[முனைவர்
இரா. திருமுருகனார்]
எனைவிட்டுப் பிரிந்ததுமேன்?
1.
கண்ணே! கனிச்சாறே! கற்கண்டுக் காவியமே!
மண்ணே மணக்கின்ற மல்லிகையே! மாங்கனியே!
பண்ணே படைக்கின்ற பாட்டரசன் வாடுகிறேன்!
பெண்ணே எனைவிட்டுப் போனதுமேன்?
……பெருந்துயரை இங்கிட்டுப் போனதுமேன்?
2.
வாசமிகு வண்டமிழே! வண்ணமிகு மாமகளே!
நேசமிகு நேரிழையே! நெஞ்சமிகு பேரழகே!
பாசமிகு பாட்டரசன் பாழ்பட்டு வாடுகிறேன்!
மோசமிகு வாழ்விட்டுப் போனதுமேன்?
……மோகமிகு தீயிட்டுப் போனதுமேன்?
3.
சீர்போற்றும் வாழ்வளித்தாய்! சிந்தனையாம்
தேனளித்தாய்!
ஊர்போற்றும் மாண்பளித்தாய்! உள்ளொளியாய்
நீயிருந்தாய்!
பார்போற்றும் பாட்டரசன் பாழ்பட்டு வாடுகிறேன்!
பேர்போற்றும் வாழ்விட்டுப் போனதுமேன்?
……கார்மூட்டும் துன்பிட்டுப் போனதுமேன்?
[பாட்டரசர்]
இது வெண்டளையால் அமைந்த நாலடிப் பாடல்தான்.
நான்காமடி மற்ற அடிகளைவிட நீண்டிருப்பதால் நடுவில் துணித்து ஐந்தாம் அடிபோல் அமைக்கப்பட்டுள்ளது.
என்னாசிரியர் முனைவர் இரா. திருமுருகனார்
பாடலில் முதல் மூன்றடிகளும் நான்கு சீர்களைப் பெற்றன. நான்காமடி எட்டுச் சீர்களைக்
கொண்டது. என் பாடலில் நான்காம் அடி ஆறு சீர்களைக் கொண்டது. நான்கடியும் ஓரெதுகை பெற்றுவரும்.
நாலாமடியின் முதற்சீருக்கு ஏற்ற மோனை அதன் செம்பாதியில் அமையும். முன்னுள்ள மூன்றடிகளில்
ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும். இறுதியடியின் முற்பாதியின் இறுதிச்சீர்க்கும்
பிற்பாதியின் முதற்சீர்க்கும் வெண்டளை கட்டாயமில்லை. இறுதியடியின் முற்பாதியும் பிற்பாதியும்
இறுதிப் பகுதியில் மடக்குப் பெறும்.
விரும்பிய பொருளில் இவ்வகைக் கலியொத்தாழிசை
ஒன்று பாடுபாடு அன்புடன் வேண்டுகிறேன.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
பாவலர் பயிலங்கம்
09.11.2024
Aucun commentaire:
Enregistrer un commentaire