dimanche 15 décembre 2024

கலித்தாழிசை - 8


 

கலிப்மேடை – 64

 

கலித்தாழிசை – 8

[இயற்சீர் வெண்டளையால் வந்த கலித்தாழிசை]

 

கலித்தாழிசை இரண்டு அடிகளிலும் வரும். பல அடிகளிலும் வரும். ஈற்றடியில் மற்ற அடிகளை விடச் சீர்கள் மிகுந்து வரும். மற்ற அடிகளின் சீர்கள் அளவொத்தும் வரும். அளவொவ்வாமலும் வரும். மடக்குப் பெற்றும் வரும்

 

இறைவா!  

 

கோடித் துயரெனைக் கொட்டி வதைப்பதோ?

தேடி வினையெனைத் தீண்டிச் சிதைப்பதோ?

கூடி உறவெனைக் குற்றிக் கிழிப்பதோ?

நாடிப் பழியெனை மூடி மறைப்பதோ?

……நலிவுறச் செய்தெனை மூடி மறைப்பதோ?

 

[பாட்டரசர்]

 

ஈற்றடி நீண்டு வருவது கலித்தாழிசையின் பொதுவிலக்கணமாகும். மேலுள்ள பாடல் இயற்சீர் வெண்டளையால் அமைந்தது.  [மா முன் நிரையும், விளம் முன் நேரும் வருதல் இயற்சீர் வெண்டளை] அடியின் ஈற்றிலிருந்து அடுத்த அடியின் தொடக்கத்திற்குத் தளை கோடல் இல்லை. நான்காமடி மற்ற அடிகளைவிட நீண்டிருப்பதால் நடுவில் துணித்து ஐந்தாம் அடிபோல் அமைக்கப்பட்டுள்ளது.  

 

முதல் மூன்றடிகளும் நான்கு சீர்களைப் பெற்றன. நான்காம் அடி எட்டுச் சீர்களைக் கொண்டது. நான்கடியும் ஓரெதுகை பெற்றுவரும். நாலாமடியின் முதற்சீருக்கு ஏற்ற மோனை அதன் செம்பாதியில் அமையும். முன்னுள்ள மூன்றடிகளில் ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

இறுதியடியின் முற்பாதியின் இறுதிச்சீர்க்கும் பிற்பாதியின் முதற்சீர்க்கும் இயற்சீர் வெண்டளை கட்டாயமில்லை. இறுதியடியின் முற்பாதியும் பிற்பாதியும் இறுதிப் பகுதியில் மடக்குப் பெறும். இப்பாடலில் “மூடி மறைப்பதோ“ என்ற சொற்கள் மடக்காய் வந்தன.

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலித்தாழிசை ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலங்கம்

15.12.2024

Aucun commentaire:

Enregistrer un commentaire