கலிப்பா மேடை – 61
கலித்தாழிசை – 4
[இடைமடக்காய் வந்த கலித்தாழிசை]
வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறியெம்
கேள்வரும் போழ்தில் எழால்,வாழி வெண்திங்கள்!
கேள்வரும் போழ்தில் எழாதாய்க் குறாலியரோ
நீள்வரி நாகத்து எயிறே, வாழி வெண்திங்கள்!
[யாப்பருங்கலக் காரிகை - 34 மேற்கோள் பாடல்]
எண்ணங்கள் கூத்தாடும்! இன்பத்தைப் பூத்தாடும்!
வண்ணங்கள் பல்கோடி வார்த்தாடும்! என்செய்வேன்?
வண்ணங்கள் பல்கோடி வார்த்தாடும் நள்ளிரவில்
உண்ணுங்..கள் போதையினை
….......................உள்ளாவி உற்றாடும் என்செய்வேன்?
[பாட்டரசர்]
இவை வெண்டளையால் அமைந்த நான்கடிப் பாடல். ஒரே பொருள்மேல்
ஒன்றாய், ஈற்றடி மிக்கு, ஏனையடிகள் தம்முள் ஒத்து இடைமடக்காய் வந்த கலித்தாழிசையாகும்.
முதல் மூன்றடிகளில் நான்கு சீர்கள். ஈற்றடியில் ஐந்து சீர்கள். நான்கடியும் ஓரெதுகை.
சீர்கள் ஒன்றில் மூன்றில் மோனை.
இடையில் உள்ள இரண்டடிகள் அடியின் தொடக்கத்தில் மடக்குப் பெற்றன.
மேலுள்ள முதல் பாடலில் இடையில் உள்ள இரண்டு அடிகளில் ‘கேள்வரும் போழ்தில்’ என்ற
இருசீர்கள் அடியின் தொடக்கத்தில் மடக்காக வந்தன. இரண்டாம் பாடலில் ‘வண்ணங்கள் பல்கோடி
வார்த்தாடும்’ என்ற சீர்கள் மடக்காக வந்தன.
இரண்டாம் அடியின் ஈற்றுச்சீரும் நான்காம் அடியின் ஈற்றுச்சீரும்
மடக்காக அமைந்தன. முதல் பாடலில் ‘வெண்திங்கள்’ என்ற சீர் மடக்காக வந்தது. இரண்டாம்
பாடலில் ‘என்செய்வேன்’ என்ற சீர் மடக்காக வந்தது.
விரும்பிய பொருளில் இவ்வகைக் கலித்தாழிசை ஒன்று பாடுமாறு
அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
பாவலர் பயிலங்கம்
22.11.2024
Aucun commentaire:
Enregistrer un commentaire