மரபுமாமணி அருணாசெல்வம்
பிறந்தநாள் வாழ்த்து!
அருணா செல்வம் அகவை நன்னாள்
அருமைத் தமிழே மலர்பொழிவாய்!
கருணா கரனே! கங்கை யரனே!
காத்தே என்றும் புகழ்பொழிவாய்!
இரு..நா முந்நா எனக்குத் தந்தே
இன்றேன் வாழ்த்து மழைபொழிவாய்!
வரு..மாச் சீர்போல் வாழ்க்கை இனிக்க
வடிமேல் முருகா அருள்பொழிவாய்!
அண்ணல் இராமன் அரங்கம் போற்ற
அல்லும் பகலுங் கவிபாடிக்
கண்ணன் மீதுங் கம்பன் மீதுங்
காதல் கொண்டு விளையாடி
எண்ணம் யாவும் எழுதுந் தொழிலில்
என்றும் நிறுத்தி அணிசூடி
வண்ணம் மின்ன அருணா செல்வம்
வாழ்க வாழ்க பல்லாண்டு!
கண்ணைக் கவரும் கலையைக் கற்றுக்
கட்டி முடித்த சித்திரநுால்
மண்ணை யறிந்து மரபை யுணர்ந்து
வடித்த முன்னை மின்னணிநுால்
விண்ணைத் தவழும் தண்மை நிலவாய்
மின்னும் நாவல் சிறுகதைநுால்
பண்ணை யாளும் பாட்டின் அரசன்
படித்தேன்! வியந்தேன்! வாழ்த்துகிறேன்!
தேடித் தேடி நுால்கள் வாங்கித்
தேவன் அருளால் தினங்கற்றே!
ஓடி யோடி உதவும் நெஞ்சுள்
ஒளிரும் அன்னைத் தமிழ்ப்பற்றே!
பாடி ப் பாடிப் படைத்த ஆக்கம்
பாரில் வெல்லும் புகழ்பெற்றே!
கோடி கோடிப் புலமை கொண்டே
அருணா செல்வம் வாழியவே!
பாட்டின் அரசன் பண்பின் தாசன்
பகன்ற நெறியைப் பற்றுடனே
நாட்டின் மக்கள் நன்றே வாழ
நற்றொண் டாற்றும் பொற்புடனே
காட்டின் மலர்கள் கமழும் வளமாய்க்
கவிகள் பாடும் வளமுடனே
ஆட்டம் ஆடும் கூத்தன் அருளால்
அருணா செல்வம் வாழியவே! [5]
பாட்டடரசர் கி. பாரதிதாசன்
03.11.2024
Aucun commentaire:
Enregistrer un commentaire