mercredi 2 octobre 2019

கவியரங்கம் 2019 பகுதி 1


கம்பன் விழாக் கவியரங்கம்
தலைமைக் கவிதை
  
பகுதி - 1
  
திருமால் வாழ்த்து!
    
கடல்மீது பாலுாறும்! கண்மீது அருளுாறும்!
காக்கின்ற திருமாலே வாராய்!
கரைமீது நண்டூரும்! கனிமீது வண்டூரும்!
கவிமீது நீ..யூர வாராய்!
  
மடல்மீது மணமூறும்! மலர்மீது மதுவூறும்!
மனமீது நீ..யூற வாராய்!
வான்மீது கோலுாரும்! தேன்மீது தமிழூறும்!
மாமாயா ஒருபார்வை பாராய்!
  
சுடர்மீது ஒளியூரும்! தொடர்மீது வாழ்வூறும்!
சொன்மீது நீ..யூற வாராய்!
தொகைமது புவியூரும்! நகைமீது நெஞ்சூறும்!
தகைமீது நான்..ஊறச் சேராய்!
  
திடல்மீது மறமூரும்! படம்மீது காலுாரும்!
திறமூறும் அரங்கா..நீ வாராய்!
தித்திக்கத் தித்திக்கச் சித்திக்கச் சித்திக்க
முத்தாகத் தமிழள்ளித் தாராய்!
  
தமிழ் வாழ்த்து!
    
நீரோங்கும் மண்மீதே ஏரோங்கும் வளமாகச்
சீரோங்கும் தமிழே..நீ வாராய்!
தேரோங்கும் நெறிகொண்டு நிறையோங்கும் செயற்கொண்டு
நெஞ்சோங்கும் கவியே..நீ தாராய்!
  
சீரோங்கும் தொடைகொண்டு பேரோங்கும் நடைகொண்டு
சிங்காரத் தமிழே..நீ வாராய்!
தேரோங்கும் எழிற்கொண்டு தேனோங்கும் பழங்கொண்டு
தெம்மாங்குச் சந்தங்கள் தாராய்!
  
ஊரேங்கும் அருள்கொண்டு பாரோங்கும் பொருள்கொண்டு
உயர்வோங்கும் தமிழே..நீ வாராய்!
உயிரோங்கும் அறங்கொண்டு பயிரோங்கும் உரங்கொண்டு
உணர்வோங்கும் உள்ளத்தைத் தாராய்!
  
கூரோங்கும் வேல்கொண்டு தாருாங்கும் படைகொண்டு
கொழித்தோங்கும் தமிழே..நீ வாராய்!
போரோங்கும் களங்கொண்டு வேரோங்கும் புகழ்கொண்டு
புவியோங்கும் பொன்வாழ்வைத் தாராய்!
  
அவையோர் வாழ்த்து!
  
இன்போதைத் தமிழ்நாடி, மென்போதைக் கவிநாடி
எழுந்துள்ள அவையோரே வணக்கம்!
இளையோரே! இனியோரே! இணையில்லாச் சான்றோரே!
என்பாட்டுச் செவிமேவி மணக்கும்!
  
பொன்போதைப் பெண்டீரே! கண்போதை கொண்டீரே!
பண்போதை நெஞ்சத்தின் வணக்கம்!
பொருள்போதை பெற்றோரே! அருள்போதை யுற்றோரே!
புதுப்போதை என்பாட்டுக் கொடுக்கும்!
  
வன்போதை மதுவாக, மென்போதை மாதாக
மயக்கத்தை என்பாட்டுப் படைக்கும்!
துன்போதைத் தீயோரைத் தொடர்போதைப் பகையோரைத்
துாள்துாளாய் என்பாட்டு உடைக்கும்!
  
நன்போதை நடையேந்தி நறும்போதை தொடையேந்தி
நலமேந்தி என்பாட்டு நடக்கும்!
நற்போதைத் தமிழ்காக்கும் கற்றோரின் முன்னாலே
பற்றோடே என்னெஞ்சம் அடங்கும்!
  
தொடரும்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தலைவர்
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
22.09.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire