vendredi 24 mai 2019

சிலேடை வெண்பா




சிலேடை வெண்பா
  
கலிப்பாவும் கண்ணனும்
  
பத்துருவும், பண்ணிசையும், பாக்கடலும், பாடுதலும்,
சிற்றுருவும், சீருடைய பேருருவும், - கொச்சகமும்,
பற்றுடையோர் பற்றலும், உற்ற கலிநிகராய்ப்
பொற்புடைய கண்ணனைப் போற்று!
  
கலிப்பா
  
பத்துவகைப்படும் [1.கலிவெண்பா, 2.வெண்கலிப்பா, 3.மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, 4.பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, 5.சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, 6.தரவிணைக் கொச்சகக் கலிப்பா, 7.தரவு கொச்சகக் கலிப்பா, 8.நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா, 9.அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, 10. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா]. இசைப்பா வகையைச் சாரும் [தாழிசையைப் பெறும்]. அம்போதரங்கம் என்ற உறுப்பை ஏற்கும் [தரங்கம் என்றால் அலை. கடல் அலைகள் கரையை அடைகையில் சுருங்குவதுபோல் இவ்வுறுப்பும் முதலில் அளவடிகளாலும், பின் சிந்தடி குறளடிகளாலும் குறைந்து வருவதால் அம்போதரங்கம் என்ற பெயர் பெற்றது]. போற்றும் மரபைக் கொள்ளும். பேரெண், சிற்றெண் என்ற உறுப்புகளைப் காணும். கொச்சகக் கலிப்பாவில் ஐந்து வகைகள் உள்ளன. வல்ல தமிழ்ப்புலமை கொண்டோர் இவ்வகையைச் சிறப்பாகப் பாடுவா்.
  
கண்ணன்
  
பத்துத் தோற்றரவை உடையவன். புல்லாங்குழல் வாணன். [பா - பாம்பு] பாற்கடலில் பாம்பணையில் துயில்பவன். ஆழ்வார்களால் போற்றிப் பாடப்பட்டவன், அடியார்களால் புகழ்ந்து பாடப்படுபவன். வாமனனாய் வந்தவன், நெடியவனாய் உலகை அளந்தவன். [கொச்சகம் - சேலை மடிப்பு] பாஞ்சாலிக்குச் சேலை அளித்துக் காத்தவன். பெண்ணுருக் கொண்டு சேலை அணிந்தவன். தன்னைச் சரணடைந்த அடியார்களைப் பற்றிக் காப்பவன்.
  
எனவே, தமிழன்னை உற்ற கலிப்பாவிற்குப் பொற்புடைய கண்ணனை ஒப்பாகப் போற்றுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
24.05.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire