samedi 22 décembre 2018

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
முடுகு வெண்பா என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்கம் தர வேண்டுகிறேன்.
  
பாவலர் தென்றல், சென்னை
  
------------------------------------------------------------------------------------------
  
வணக்கம்!
  
சந்த முடுகுடைய வெண்பாவை, முடுகு வெண்பா என்றுரைப்பர். வெண்பாவின் பின்னிரண்டு அடிகளில் உள்ள ஏழு சீர்கள் ஒருவகைச் சந்தத்துடன் நடப்பது பின்முடுகு வெண்பா. வெண்பாவின் முன்னிரண்டு அடிகளில் உள்ள ஏழு சீர்கள் ஒருவகைச் சந்தத்துடன் நடப்பது முன்முடுகு வெண்பா. வெண்பா முழுமையும் பதினைந்து சீர்களும் சந்தத்துடன் நடப்பது முற்று முடுகு வெண்பா.
  
பின்முடுகு வெண்பா
  
சீர்மணக்கும் வாழ்வொளியைச் செல்லும் இடமெல்லாம்
பேர்மணக்கும் மாண்பொளியைப் பெற்றிடவே - தார்மணக்கும்
அத்தனரு ளுற்றதமிழ்! சித்தமொளி யிட்டதமிழ்!
கற்புமரு ளுற்றதமிழ் பற்று!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இந்த நேரிசை வெண்பாவின் முன்னிரண்டு அடிகளும் வழக்கம்போல் அமைந்துள்ளன. பின்னிரண்டு அடிகள் 'தத்ததன' என்ற ஒருவகைச் சந்தத்தில் 6 சீர்களும், இறுதிச்சீர் 'தத்த' என்ற சந்தமுடைய உகரவீற்றுச் சீரும் பெற்று வந்தன. இப்படி அமையும் பாடலுக்குப் பின்முடுகு வெண்பா என்று பெயர். அச்சீர்களின் சந்தம் தானதத்த, தானதன, தாதந்த, தத்தந்த, தந்ததன என்பன போலப் பலவகையாகவும் அமையலாம்.
  
முன்முடுகு வெண்பா
  
மஞ்சமிகு வஞ்சியிடை! தஞ்சமிடு நெஞ்சினிடை!
பஞ்சமிலை! கொஞ்சலிடு வஞ்சமிலை! - இஞ்சி
இடுப்பழகில் ஏங்கி இளைக்கின்றேன்! உன்றன்
உடுப்பழகில் உள்ளம் உடைந்து!
    
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இந்த நேரிசை வெண்பாவின் தனிச்சொல்லும் பின்னிரண்டு அடிகளும் வழக்கம்போல் அமைந்துள்ளன. முன்னிரண்டு அடிகளிள் உள்ள 7 சீர்கள் 'தந்ததன' என்ற ஒருவகைச் சந்தத்தில் வந்தன. இப்படி அமையும் பாடலுக்குப் முன்முடுகு வெண்பா என்று பெயர்.
    
முற்று முடுகு வெண்பா
  
பொன்னொளி மின்னிட அன்புள[ம்] இன்புற,
நன்னெறி தந்திடு[ம்] என்கவி! - நம்மொழி
செம்மொழி! மென்மொழி! வன்மொழி! தென்மொழி
எம்மொழி இங்கிணை எண்?
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
    
இந்த நேரிசை வெண்பாவின் நான்கடிகள் 'தந்தன' என்ற தந்தத்தில் வந்தன. ஈற்றுச்சீர் 'தந்' எனும் சந்தத்தில் வந்தது. இப்படி அமையும் பாடலுக்குப் முற்று முடுகு வெண்பா என்று பெயர்.
  
'இருளறும் ஒளிபெற இனிதுறும் அருளற'
  
இவ்வாறு, முடுகு அமைகின்ற அடிகளில் வெண்டளை இன்றிச் சிலர் பாடியுள்ளனர். வெண்டளையுடன் முடுகு பெற்று வருவதுதான் சிறப்புடைய முடுகு வெண்பா என்றுணர்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
22.12.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire