lundi 31 décembre 2018

சிந்துப்பா மேடை - 3


சிந்துப்பா மேடை - 3
  
புலிக்கண்ணி
  
ஈழமெனும் பொன்னாடு!
எங்களுயிர் வாழ்கூடு!
சூழுமுயர் மாவீரர் - புலியே!
தோன்றுபுகழ்ப் பாக்காடு!
  
மண்ணைப் பிடித்தவனை,
வஞ்சம் நிறைந்தவனை,
பெண்ணைக் கெடுத்தவனைப் - புலியே!
பிளந்து புதைத்திடுவோம்!
  
குருதி பெருமழையைக்
கொண்ட தமிழ்நிலமாம்!
பரிதி எழுநிறமாய், - புலியே!
பாயும் படைமறமாம்!
  
பனங்காடு சூழுநிலம்!
பகைவரை ஆடுகளம்!
இனங்காத்த நற்றலைவன்! - புலியே!
என்றும் எமக்கிறைவன்!
  
சுற்றி வளைத்திடவே
சூழ்ந்தபன் னாடுகளைப்
பற்றியிலை ஓரச்சம் - புலியே!
பாவையரைப் பார்..மெச்சும்!
  
கார்த்திகைப் பூமணக்கும்!
கன்னல் தமிழ்மணக்கும்!
பார்..அரும் வீரர்களைப் - புலியே!
பாடி உளஞ்சிலிர்க்கும்!
  
வீர விதைகளையே
விதைத்த தமிழினமாம்!
ஆரப் புகழ்தழுவி, - புலியே!
ஆளுந் தமிழ்நிலமாம்!
  
தாங்கும் விழுதுகளாய்த்
தாயகம் காத்திடுவார்!
துாங்கும் துயின்மனையைப் - புலியே!
தொழுது வணங்கிடுவோம்!
  
வானில் பறந்திடுவாய்!
மார்பில் தவழ்ந்திடுவாய்!
ஊனில் கலந்திடுவாய் - புலியே!
உலகை வலம்வருவாய்!
  
ஆண்ட தமிழ்மரபின்
ஆற்றல் முழங்கிடவே
வேண்டிக் கவிபுனைந்தேன்! - புலியே!
வெற்றிப் பணிபுரிந்தேன்!
  
கிளிக்கண்ணி போன்று, புலியை முன்னிலை கொண்டதால், இது புலிக்கண்ணி ஆனது. பாடலின் கருத்திற்குத் தகுந்தால்போல் மான், மயில், குயில், மலர்.. ஆகியவற்றை முன்னிலையாகக் கொண்டு புதிய வகையைப் பாடித் தமிழுக்கு வளஞ்சேர்ப்போம்.
  
இக்கண்ணி, நேரசையில் தொடங்கும் அரையடி 7 எழுத்துக்களையும், நிரையசையில் தொடங்கும் அரையடி 8 எழுத்துக்களையும் பெற்றுவரும். ஒற்றுகளை நீக்கி எழுத்துகளை எண்ண வேண்டும். [இரண்டாம் அரையடிக்குப் பின் 'புலியே' எனத் தனிச்சொல் வந்துள்ளது. இச்சொல்லைக் கணக்கில் சோ்க்கவேண்டாம்]
  
இந்த வகையில் விரும்பிய ஒன்றை முன்னிலையாக்கி ஐந்து கண்ணிகளைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
30.12.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire