samedi 21 avril 2018

ஆசிரியப்பா மேடை - 3



ஆசிரியப்பா மேடை - 3

இணைக்குறள் ஆசிரியப்பா

ஆட்சி பிடிக்க அலைந்தே வந்தார்!
மாட்சி மொழியை வடித்தார்!
உயிரே! உறவே! என்றார்!
பயிர்போல் பசுமை படைப்போம் என்றார்!
ஊழல் யாவும்
வீழும் என்றார்!
நலமே இங்கு நாடும் என்றார்!
இலவய மாகப் பொருள்கள் ஈந்தார்!
வாங்கிக் கொண்டு வாக்கும் இட்டோம்!
ஏங்கி இன்று துாக்கம் கெட்டேம்!
வாயில் வந்து வாக்குப் பெற்றார்
நாயாய் நம்மை நடத்து கின்றார்!
பொல்லார் இங்கே
நல்லார் போன்றே
காதி அணிந்து காட்சி தருகிறார்!
நீதித் தாயின் நெஞ்சைப் பிளக்கிறார்!
மாற்றம் எந்நாள் வருமோ?
போற்றும் புலமை புலம்பும் இங்கே!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

நேரிசை யாசிரியப்பாவின் இடையிடையே குறளடியும் சிந்தடியும் கலந்து இப்பா நடக்கும். நேரிசை யாசிரியப்பாவில் சிந்தடி வருகிறது. சிந்தடியோடு  குறளடியும் வருவதால் இணைக்குறள் ஆசிரியப்பா எனப் பெயர் பெற்றது.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைப் பெற்று, முதலடியும் ஈற்றடியும் நாற்சீர் கொண்ட அளவடியாகவும், இடையில் நாற்சீர் அடிகளாகிய அளவடியோடு இருசீராகிய குறளடியும், முச்சீராகிய சிந்தடியும், ஒரோ வழி ஐஞ்சீராகிய நெடிலடியும் கலந்து வரும்.  [ஈற்றயல் அடி முச்சீரை பெற்று வரும்]  

இலக்கண விளக்கம்

முதல் அடியும் ஈற்றடியும் நான்கு சீர்களைப் பெற்றிருக்க வேண்டும். ஈற்றயலடி முச்சீரைப் பெற்று வரவேண்டும்.

இடையில் இருசீர் அடியும் முச்சீர் அடியும் கலந்து வரும்.

ஈசைச்சீர்கள் நான்கும் பயின்று வரும். [தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்]

இரண்டடி ஓரெதுகைப் பெற்று வரும்.

ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை பெறும். [மூன்றில் அமையவில்லை யெனில் இரண்டாம் சீரில் அல்லது நான்காம் சீரில் மோனை அமையவேண்டும்] [இருசீர் அடியில் மோனை கட்டாயமில்லை]

மூன்றடிக்குக் குறையாமல் எத்தனை அடிகளிலும் வரலாம். [சிற்றெல்லை 3 அடி, பேரெல்லை அளவில்லை]

ஈற்றடியின் கடைசி ஏகாரத்தில் முடிய வேண்டும்.  

நேரொன்றிய ஆசிரியத் தளையும், நிரையொன்றிய ஆசிரியத்தளையும், இயற்சீர் வெண்டளையும் கலந்து நடக்கும்.

இணைக்குறள் ஆசிரியப்பாவின் நுாற்பாக்கள்

[யா. கா - 28]
இடைபல குன்றின் இணைக்குறள்.

இணைக்குறள் இடைபல குறைந்திறின் இயல்பே.
 [யா.வி - 74]

இடைபல குறைவது இணைக்குறள் ஆகும்.
[அவிநயனார்]

இடையிடை சீர்தபின் இணைக்குறள் ஆகும்.
[சிறுகாக்கை பாடினியார்]

அளவடி அந்தமும் ஆதியும் ஆகி
குறளடி சிந்தடி என்றா இரண்டும்
இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும்.
[காக்கை பாடினியார்]

ஈற்றயல் குறைந்த நேரசை யிணையாம்
ஏற்ற அடியின் இடைபல குறைந்தன.
[மயேச்சுரம்]

அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக்
குறளடி சிந்தடி என்றா இரண்டும்
இடைவர நிற்பின் இணைக்குறள் ஆதலும்.
[இலக்கண விளக்கம் 734]

ஆதியும் அந்தமும் அளவடி யாகிக்
குறளடி சிந்தடி என்றாங்கு இரண்டும்
இடைவரல் இணைக்குறள் ஆசிரி யம்மே.
[முத்து வீரியம் 25]

இணைக்குறட்பா
ஏற்ற குறள்சிந்து இடையே வரும்.
[வீரசோழியம் 115]

இணைக்குறள் முதல்ஈற்று ஈரடி அளவடி
இடைக்குறள் சிந்தடி இணையப் பெறுமே.
[தொன்னுால் விளக்கம் 225]

'இன்றைய அரசியலார் போக்கை உரைக்கும் வண்ணம் இணைக்குறள் ஆசிரியப்பா  ஒன்றை 12 அடிக்கு மிகாமல்  பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
17.03.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire