samedi 21 avril 2018

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
நொண்டிச் சிந்துப் பாடலில் ஒவ்வொரு சீரும் மூன்று உயிர்களைப் பெற்று வருமா?
  
கவிஞர் தென்னவன்
  
-----------------------------------------------------------------------------------------------
  
ஓரெதுகையில் அமைந்த இரண்டு அடிகளைப் பெற்றுவருவது நொண்டிச் சிந்தாகும். ஓர் அடியைப் பாடும்போது தாளத்தில் எட்டு எண்ணிக்கை விழுவதால் இதை எண்சீரடி எனலாம். 4 ஆம் சீர் தனிச்சொல், 3, 8 ஆம் சீர்களில் ஒரே உயிரும், மற்றச்சீர்களில் 4 உயிரும் இருக்கும். ஆனால் எல்லாச்சீர்களுமே ஒரே அளவாய் ஒலிக்கும்.
  
ஒருவனும் ஒருத்தியு மாய்... ..- மனம்
உவந்திடில் பிழையென உரைப்பதுண் டோ...?
அரசென ஒருசா. தி... .. - அதற்[கு]
அயலென வே.றொரு சா.தியுண் டோ...?
  
பாவேந்தர் பாரதிதாசனார், [புரட்சிக் கவி]
  
பாடும்போது இசை நீளும் இடங்களை மேலே புள்ளியிட்டுக் காட்டப்பட்டுள்ளன. ஆனால் எழுதும்போது இப்புள்ளிகள் இடுவதில்லை.
  
நொண்டிச் சிந்துவில் 1, 2, 5, 6, 7, ஆம் சீர்களில் மூன்று உயிர்களை உடைய சீர்கள் வந்தாலும் அவை, நான்கு உயிரின் இசைக்கு நீண்டு ஒலிக்கும்.
  
மேலுள்ள பாடலில் ஒருசா., வே.றொரு, சா.தியுண் ஆகிய சீர்கள் மூன்று உயிரைப் பெற்றிருந்தாலும் நான்கு உயிர் அளவைப் பெற்றிசைக்கும் என்பதற்காகப் புள்ளி இடப்பட்டுள்ளதைக் கண்டு உணர்க. இதன் இலக்கணத்தை என் ஆசிரியர் முனைவர் இரா. திருமுருகனார் எழுதிய சிந்துப் பாடல்களின் யாப்பிலக்கணம் என்ற நுாலில் காணலாம்.
  
எண்சீர் அடிகள் இரண்டோர் எதுகையாய்
ஐந்தாம் சீர்தொறும் மோனை அமைந்து
நான்மை நடையுடன் நாலாஞ் சீரில்
தனிச்சொல் தழுவி இனித்திட நடப்பது
நொண்டிச் சிந்தென நுவலப் படுமே.
  
நாலசைத் தனிச்சொல் நடுவே மடுத்தலும்
ஐந்தாஞ் சீரிலும் ஏழாஞ் சீரிலும்
எதுகை பெறுதலும் எழில்மிகத் தருமே.
  
முனைவர் இரா. திருமுருகனார்.
[சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம் 35 - 36]
  
நொண்டிச் சிந்து நான்மை நடையைப் [நான்கு உயிர்களை] பெற்று வரும். மேலும் ஐந்தாம் சீரும் ஏழாஞ் சீரும் எதுகை பெற்றும் வருவதுண்டு.
  
பஞ்சினை. நெருப்பரு கே... - ..வைத்துப்
பா.ர்ப்பவர் உறவினைச் சே.ர்ப்பவ ரோ...?
நெஞ்சினை இரும்பா.க் கி... - ..உயர்
நே.ர்மையைக் குலைப்பவர் சீ.ர்மைய ரோ...?
  
கலைமாமணி, கவிஞர் தே. சனார்த்தனன், புதுவை
  
மேலுள்ள பாடலில் ஐந்தாஞ் சீரும் ஏழாஞ் சீரும் எதுகை பெற்று வந்துள்ளதைக் காணவும். [பார்ப்பவர், சேர்ப்பவர்] [நேர்மையை, சீர்மையை]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம், பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

Aucun commentaire:

Enregistrer un commentaire