samedi 21 avril 2018

கவியரசர் கவியரங்கம் - 3


கவியரசு கண்ணதாசன் விழாப் பாட்டரங்கம்
[
தலைமைக் கவிதை]
 
தொடர்ச்சி
 
தெய்வம் இருப்பது எங்கே
என்ற தலைப்பில் பாட வருமாறு
பாவலர் மலர்வாணியை அழைத்தல்
 
இறைவன் இருக்கும் இடம்பாட
இனிய வாணி வந்திடுக!
நிறைவாய்த் தமிழின் சீர்பின்னி
நெஞ்சம் நிறையத் தந்திடுக!
 
வாணி தாசன் பரம்பரையில்
வந்த பெண்ணே பாடுகவே!
ஏணி கொண்டு தமிழ்நெறியை
ஏற்றிப் புகழைச் சூடுகவே!
 
யாப்புக் கலையை நன்றாக
இசைக்க இங்கே அழைக்கின்றேன்!
தோப்புக் கனிகள் கொடுத்திடவே
தொடக்கக் கவியாய் நுழைக்கின்றேன்!
 
அருமைக் கவியே! மலர்வாணி!
அழகாய் விடுக கவித்தோணி!
பெருமை யோடு தமிழ்க்காணி
பேணிக் காக்க வா..வா..நீ!
 
கவியேறு பேத்தி எழுகவே! - தமிழைப்
புவியேரு போன்றே உழுகவே!
 
--------------------------------------------------------------------------------------
  
செந்தமிழ்த் தேன்மொழியாள்
என்ற தலைப்பில் பாட வருமாறு
பாவலர் அன்பரசியை அழைத்தல்
 
தேன்மொழியாள் சீர்பாடத்
தென்றல் வருகவே!
வான்மழையாய்த் தமிழ்மழையை
மன்றில் தருகவே!
 
அன்பரசி! அருளரசி!
அவையில் எழுகவே!
இன்பரசி தமிழணங்கை
ஏத்தித் தொழுகவே!
 
சிரிப்பேந்தும் முகத்தாலே
சிந்து பாடுக!
பறித்தேந்தும் மலராகப்
பண்கள் சூடுக!
 
கலைமகளின் அருள்கொண்டு
கவிதை பொங்குக!
அலைமகளின் செல்வமென
அகத்துள் தங்குக!
 
அன்பின் அரசி அவையேறு! - இங்கு
அருமைத் தமிழின் சுவைகூறு!
--------------------------------------------------------------------------------------
 
கலங்காதிரு மனமே
என்ற தலைப்பில் பாட வருமாறு
பாவலர் மணியன் செல்வியை அழைத்தல்
 
கலஞ்கா திருப்பாய் மனமே என்று
கவிதை தீட்டிடவே - என்றும்
நலங்கா திருப்பாய்! நாடி உழைப்பாய்!
நன்மை காட்டிடவே!
 
மணியன் செல்வி! மலரின் செல்வி!
மன்றம் காணுகவே! - பொன்
அணிகள் மின்னம் அடிகள் பின்னி
அழகைப் பூணுகவே!
 
வீரம் விளையும் ஈழப் பெண்ணே
வெற்றிக் கவிபாடு! - தே
வாரம் போன்றே அமுதத் தமிழை
ஆக்கிப் புகழ்சூடு!
 
என்றன் இடத்தில் யாப்பைக் கற்றே
எழுதும் பெண்மணியே! - என்றும்
உன்றன் இடத்தில் ஒளிர்வாள் அன்னை
ஓங்கும் தமிழ்ப்பணியே!
 
மணியன் செல்வி மன்றம் வருகவே! - நீ
அணிவாய் கவிகள் நெஞ்சம் உருகவே!
--------------------------------------------------------------------------------------
 
காவிரித் தாயே பூவிரித்தாயே
என்ற தலைப்பில் பாட வருமாறு
பாவலர் கவிப்பாவையை அழைத்தல்
 
காவிரித் தாயைப் பூவிரித் திங்குக்
கவிதை படைத்திடுவார்! - நம்மின்
செவியை அழைத்திடுவார்!
நாவிரி தமிழால் நரிகள் முகத்தை
நாடி உடைத்திடுவார்! - நன்றே
ஓடி உழைத்திடுவார்!
 
தண்ணீரை மறுத்தல் தரணியில் உண்டோ?
தாவிக் குதித்திடுவார்! - சீரை
மேவிப் பதித்திடுவார்!
புண்னுடை நெஞ்சர் புதைந்திடும் வண்ணம்
போட்டு மதித்திடுவார்! - தீதை
ஓட்டி எதிர்த்திடுவார்!
 
அன்பொளிர் வள்ளல் அடிகளைத் தொழுதே
ஆக்கம் அளித்திடுவார்! - மன
ஊக்கம் விளைத்திடுவார்!
இன்பொளிர் தமிழைத் தன்னுயிர் என்றே
ஏந்திக் களித்திடுவார்! - கவியுள்
நீந்திக் குளித்திடுவார்!
 
கண்ணனின் தாசன் காவிரி ஆற்றைக்
காட்ட அழைக்கின்றேன்! - கவி
சூட்ட அழைக்கின்றேன்!
தண்டமிழ்ப் பாவை வெண்கதிர் ஒளியை
நாட்ட அழைக்கின்றேன்! - புகழ்
ஈட்ட அழைக்கின்றேன்!
 
இனிய கவிப்பாவை வருகவே! - தமிழைக்
கனியக் கனியத் தருகவே!
 
--------------------------------------------------------------------------------------
 
அன்று ஊமைப் பெண்ணல்லோ
என்ற தலைப்பில் பாட வருமாறு
பாவலர் சிரீதரனை அழைத்தல்
 
ஊமைப் பெண்ணின் உள்ளம் பாட
உள்ஊர் கவி..வருக! - நல்
ஆமை யாக அகமே அடங்க
அருமைக் கவி..தருக!
 
பெண்ணில் ஊறிப் பண்ணில் ஊறிப்
பிரண்ட கவியரசை - உன்
கண்ணில் ஊறும் கன்னல் கருத்தில்
காட்டு கவிமுரசை!
 
புதுவை வாணி புகழை காக்கப்
புலமை சேருகவே! தமிழ்
மதுவை நல்கும் மங்கை மாண்பை
மன்றில் கூறுகவே!
 
உங்கள் கவியை உவந்து அழைத்தேன்
ஓங்கித் தட்டுகவே - கைகள்
ஓங்கித் தட்டுகவே!
சங்கத் தமிழின் சால்பைக் கேட்டுச்
சந்தம் கொட்டுகவே! - பனிபோல்
கந்தம் கொட்டுகவே!
 
பாவலர் சிரீதரன் பாடுக! - கேட்டுப்
பாவையர் நடனம் ஆடுக!
 
--------------------------------------------------------------------------------------
 
நெஞ்சம் மறப்பதில்லை
என்ற தலைப்பில் பாட வருமாறு
பாவலர் ஆடலரசனை அழைத்தல்
 
திருத்தில்லைக் கூத்தனவன் பேரைச் - சூடிச்
செலுத்துகிறார் செந்தமிழின் தேரை!
பெருங்கொல்லை மலர்ந்தாடும் பூக்கள் - போன்று
பெருமையுடன் படைத்திடுவார் பாக்கள்!
 
ஆடுவதில் வல்லமையும் உற்றார்! - இவர்
அருந்தமிழை என்னிடமே கற்றார்!
பாடுவதில் நெஞ்சுருகி நின்றார்! - கையால்
பறையொளியைத் தந்துசபை வென்றார்!
 
பற்றுடனே பாடுகின்ற பாட்டு! - அது
பழுத்தபலாத் தேன்கலந்த கூட்டு!
பொற்புடனே ஆற்றுகின்ற தொண்டு! - அது
பொலிந்திடுமே நன்மைகளைக் கொண்டு!
 
மெலிந்துள்ள உருவுடையான் இங்கு - நன்றே
மீட்டுகவி ஊதுகின்ற சங்கு!
மலிந்ததுயர் நீங்கப்..பாப் பொங்கு! - உன்
மனமுழுதும் காய்த்தகுளிர் நுங்கு!
 
ஆடல் அரசே! பெருந்தகையே! - இங்கு
அளிப்பாய் தமிழின் அருங்கொடையே!
 
தொடரும்.....
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

Aucun commentaire:

Enregistrer un commentaire