samedi 21 avril 2018

கவியரசர் கவியரங்கம் - 2


கவியரசு கண்ணதாசன் விழாப் பாட்டரங்கம்
[
தலைமைக் கவிதை]
  
தொடர்ச்சி
  
கவியரசர் கண்ணதாசன்
  
திரையிசை வானில் செந்தமிழ்ப் பாக்கள்
தீட்டிய கவியரசர்! - தந்த
நிறையிசை கேட்டு நிம்மதி யுற்று
நின்றனர் புவியரசர்!
  
அரசியல் வானில் அறநெறி பாடி
அருள்தரும் கண்ணனவர்! - நாளும்
முரசென ஓங்கி முத்தமிழ்ச் சீரை
மொழிந்திடும் மன்னனவர்!
  
கலையொளி வானில் சிலையொளிர் வண்ணம்
காதலைத் தீட்டியவர்! - முன்னீர்
அலையொளிர் மங்கை அழகினைப் பாடி
அமுதினைக் கூட்டியவர்!
  
தமிழ்மொழி வானில் தனிச்சுடர்க் கதிராய்ச்
சால்புடன் மின்னியவர்! - சிறு
உமியெனப் பகையை ஊதிட வேண்டி
உயர்கவி பின்னியவர்!
  
கவியொளிர் வானில் கதையொளிர் வானில்
கன்னலை ஊற்றியவர்! - இப்
புவியொளிர் மாண்பை, புகழொளிர் சால்பை,
புரிந்துளம் மாற்றியவர்!
  
இறையொளி வானில் இணையிலாத் தமிழை
இசையுடன் மீட்டியவர்! - வான்
மறையொளி ஆக்கம்! நிறைமொழி பூக்கும்
வாழ்வினைக் காட்டியவர்!
  
பெண்ணெழில் வானில் பண்ணெழில் கூட்டிப்
பெருமையைச் சாற்றியவர்! - பொன்
விண்ணெழில் மேவ மண்ணெழில் சூழ
அன்பினைப் போற்றியவர்!
  
தென்றலை வீசிச் செம்மொழி பேசிச்
சிந்தையை வென்றவராம்! - திரு
மன்றலைப் பாடி மகிழ்வினைச் சூடி
மலையென நின்றவறாம்!
  
போதையுள் ஆடிப் புலம்பிய சொற்கள்
பாதையைக் காட்டுதடி! - நற்
கீதையுள் கூடிக் கிடந்தவர் நுால்கள்
கீர்த்தியை நாட்டுதடி!
  
கண்ணனின் தாசன்! கவிதையின் தாசன்!
காலத்தின் தாசனடி! - இந்த
மண்ணுள வரையில் மன்னவன் புகழைத்
தண்டமிழ் பேசுமடி!
  
தொடரும்.....
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

Aucun commentaire:

Enregistrer un commentaire