samedi 21 avril 2018

ஆசிரியப்பா மேடை - 5



ஆசிரியப்பா மேடை - 5

 சீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா

அதிராச் சிறப்பின் மதுரை மூதுார்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தோன்
ஆரஞர் உற்ற வீர பத்தினிமுன்
............................................................
முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்து

[சிலப்பதிகாரத்தில் சீரெதுகையில் அமைந்த ஆசிரியப்பா அடிகள்]

கோதை வாழ்கவே!

பிறைசேர் வண்ணம் நிறைசேர் நெற்றி!
கெண்டை மீன்கள் சண்டைக் கண்கள்!
தோகை இமைகள் வாகை அழைப்பு!
பூக்கும் எள்பூ மூக்கின் அழகு!
ஆம்பல் இதழோ கூம்பும் உதடு!
பல்லின் வரிசை முல்லைப் பூக்கள்!
பேழை நாக்கு வாழைக் குருத்து!
நாவின் சொற்கள் மாவின் இனிமை!
கன்னம் மீது மின்னும் கோவை!
கோங்கு போன்றே வீங்கும் மார்பு!
தும்பைக் காடாய்ச் செம்மை உள்ளம்!
காந்தள் அழகை ஏந்தும் கைகள்!
சண்பக மென்மை தண்மலர் மேனி!
வஞ்சிக் கொடியை விஞ்சும் மெல்லிடை!
வாழைத் தொடையும் தாழை மணமும்
பெற்ற பாவை! கற்பின் கனலி!
மாமறை மாதின் தாமரைத் தாள்கள்
போதை ஏற்றும்! மேதை யாக்கும்!
பாதை காட்டும் கோதை வாழ்கவே!  

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

அடியெதுகை, சீரெதுகை என எதுகை இருவகையாகும். அடிகளின் முதல் சீர்களில் அமைவது அடியெதுகையாகும்.  ஓரெடியின் சீர்களில் அமைவது சீரெதுகையாகும்.
மேலுள்ள நிலைமண்டில ஆசிரியப்பாவில் அடிதோறும்  முதல் சீரும் மூன்றாம் சீரும் எதுகை பெற்று வந்துள்ளது.
இப்பாடலைச் சீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா என்பர்.
சீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா ஒன்றை விரும்பிய பொருளில் பன்னிரு அடிகளுக்குள் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.04.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire