mercredi 15 août 2012

உயா்தமிழ் காப்பாய் உடன்!


வள்ளுவன் தந்த வளா்மறைக் கீடாக
உள்ளதோ ஓா்நுால் உலகினிலே! - துள்ளும்
கயல்விழிப் பெண்ணே! அயல்மொழி நீக்கி
உயா்தமிழ் காப்பாய் உடன்!

முன்னே பிறந்ததமிழ்! முத்தாய் ஒளிர்ந்ததமிழ்!
என்னே உரைப்பேன் இணையாக? - பின்னே
மயா்நிலை ஏனோ? மதியொளி ஏற்றி
உயா்தமிழ் காப்பாய் உடன்!

சற்றே அயா்ந்திடில் முற்றும் இழந்திடுவாய்!
பற்றே இலையெனில் ஏதுபயன்? - நற்றேன்
நயக்கும் நறுந்தமிழின் நண்ணுநிலை எண்ணி
உயா்தமிழ் காப்பாய் உடன்!

எங்கும் தமிழே! எதிலும் தமிழே!என்(று)
தங்கும் உணா்வுடல் தாங்குக! - பொங்கும்
புயலெனச் சீறுக! போந்தபகை வீழ்த்தி
உயா்தமிழ் காப்பாய் உடன்!

உயிர்த்தமிழ் என்றும் உடல்தமிழ் என்றும்
குயில்தமிழ் கூவிய கொள்கை! - துயா்சோ்
அயல்மொழி நீக்கி அருந்சுவை தேக்கி
உயா்தமிழ் காப்பாய் உடன்!

இயற்கை எழில்மணக்கும்! இன்தேன் சுரக்கும்!
செயற்கை இலாது சிறக்கும்! - இயக்கும்
வியன்தமிழ் தன்னை விரைந்தர(சு) ஏற்றி
உயா்தமிழ் காப்பாய் உடன்!

சந்தம் ஒலித்திடச் சிந்தும் செழித்திடத்
தந்த தனத்தன தாளமிட! முந்தும்
இயலிசை நாடகம் இன்மரபு ஓங்க
உயா்தமிழ் காப்பாய் உடன்!

அன்னை அறமோங்க, ஆற்றல் நிறைந்தோங்கப்
பொன்னை நிகா்த்த புகழோங்க! - உன்னைத்
துயா்வழி தள்ளியே துள்ளுபகை நீங்க
உயா்தமிழ் காப்பாய் உடன்!

கம்பன் படைத்த கனித்தோட்டம்! பூத்தாடும்
செம்பொன் மலா்க்கூட்டம்! செந்தமிழா! - செம்மை
வயல்வெளி பேரழகு வாய்த்தநம் தாயாம்
உயா்தமிழ் காப்பாய் உடன்!

பருகுநீா்! நல்லுணவு! பற்றிப் படா்ந்து
பெருகும் இனிமை!பே(று) எல்லாம் - அரிய
கயல்.வில் புலிக்கொடி கண்ட மொழியாம்
உயா்தமிழ் காப்பாய் உடன்!


கவிஞா் கி. பாரதிதாசன்

தலைவா். கம்பன் கழகம் பிரான்சு

(18.05.2012 புதுவைப் பாவலா் பயிற்சிப்
பட்டறை நடத்திய கவியரங்கத்
தலைமைக் கவிதை)

தொடரும்

2 commentaires:


  1. உயர்தமிழ் காத்திடவே ஓங்கும் பணிகள்
    அயர்விலா தாற்றுகின்ற அன்பா! - துயரினைப்
    போக்கும் கவிபடைத்தாய்! போற்றி வணங்குகிறேன்!
    பூக்கும் மகிழ்வைப் புனைந்து!

    RépondreSupprimer

  2. வணக்கம்!

    மொழியினைக் காக்காமல் முன்னேற்றம் உண்டோ?
    பழியினை ஏய்துவதேன்? பாரில் - அழியும்
    நிலையை அறிந்தும் நெடுந்துாக்கம்! நற்றாய்க்
    கொலையைப் புாிவதோ கூறு?

    RépondreSupprimer