jeudi 30 août 2012

சம்..போ(டு) இராமாநு சம்!


வீரத்தில் வாய்கிழியும்! விஞ்சும் பெரும்தொந்திப்
பாரத்தில் மண்கிழியும்! சாப்பாட்டு - நேரத்தில்
உம்மோடு சண்டையேன்? நம்கையில் ஓர்ரசம்,கி
சம்..போ(டு) இராமாநு சம்!

நடமிடாப் பூச்சிகள்! நற்றம் தொலையும்!
கடமுடா என்று கழுவும்! - கடைத்தோப்பில்
சொம்போடு நான்..குந்த! இன்னும் மிளகு,
சம்..போ(டு) இராமாநு சம்!

திருமால் அடியார் திருமணம் என்றால்
ஒருநாள் சிறுவயிற்றுக் கோய்வு - பெரும்பசி 
எம்மோ(டு) இருந்தகள இன்னோர் முறை,பாய
சம்..போ(டு) இராமாநு சம்!

சுண்டல் புளியோதரை சூப்பர்! இனிக்கின்ற
வெண்பொங்கல் வானமுதை விஞ்சுமே! - உண்டுவக்க
நம்மோ(டு) அவர்வருவார்! நன்றே குழம்பில்,வா
சம்..போ(டு) இராமாநு சம்!

கட்டைத் துறவிகள் கொட்டமிடும் காட்சிகளை,
அட்டைத் தலைவர்தம் புண்ணகத்தை - மொட்டையடி
கும்,ஊரு கொன்னரியைத் தோலுறித்துக் காட்ட..வே
சம்..போ(டு) இராமாநு சம்!

ஆடுடா ஆடு!கோல் தாண்டிக் கரணங்கள்
போடுடா போடு! புகழேந்திப் - பாடுடா
சம்போ சிவமென்று! தாழ்ந்து வணக்கம்..கொஞ்
சம்..போ(டு) இராமாநு சம்!

அயன்மண்ணில் வந்தேறி அல்லும் பகலும்
புயற்கண்ணில் ஆட்பட்ட போதும் - வயற்றன்னில்
கம்போடு போராடிக் கையோங்கும்! கூழின்..மிச்
சம்,போ(டு) இராமாநு சம்!

இன்றுபோய் நாளை..வா என்றவன்! புல்லர்களை
வென்று..போய் நன்மை விளைத்தவன்! - அன்பேந்தி
அம்போடு வந்தகதை! ஆழ்ந்ததை நீ..கேட்(டு)..உச்
சம்..போ(டு) இராமாநு சம்!

போண்டா! மெதுவடை! பட்சி!பூ போல்வர
வேண்டா மனமும் விரும்பிடும்! - மாண்புடன்
நம்பே(ரு) உரைத்திடும்! நற்சோடா உப்பில்..வீ
சம்..போ(டு) இராமாநு சம்!

மாத வருவாய் குறைந்ததென உள்நொந்து
வேத நெறியை வெறுக்காதே! - மோதுகின்ற
வம்போடு பார்க்காதே! மாயனுக்கு மல்லியில்..மஞ்
சம்..போ(டு) இராமாநு சம்!

4 commentaires:

 1. அடடா என்னவென சொல்வது ஐயா... சம்..போ(டு) இராமாநு சம்!... இத்தனை பாக்களா? அருமை. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை மிஞ்சிநிற்கின்றதே...

  நகைச்சுவைப்பாக்களும் வெகு அருமையாக, படித்ததை நினைத்துச் சிரிக்கும்படியும் அற்புதமாக இருக்கிறதே... சொற்கள் மிக அநாயாசமக துள்ளிவிளையாடுகிறது உங்களிடம்... மிகவும் ரசித்தேன்.

  என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இளமதி வந்தார்! இனியகவிச் சீரை
   உளமதில் பொங்க உரைத்தார்! - வளமெல்லாம்
   வந்து விளையாட வண்ணக் கவிபாடத்
   தந்து மகிழ்ந்தார் தமிழ்!

   Supprimer

 2. கண்ணும் கருத்துமாய்க் கன்னல் தமிழ்வளர்த்தால்
  விண்ணும் பொிதோ? வியக்கின்ற - பண்ணிசை
  பாடிப் படைக்கின்ற பாவலனே! உன்நட்பை
  நாடி நலமுற்றேன் நான்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   வரலாறு காட்டும் வளர்தமிழ் நட்பை
   உரமாக உற்றோம் உவந்து! - மரமாக
   வாழும் தமிழனை மாற்றி உயிர்கொடுப்போம்!
   வீழும் பகைவர் விழி!

   Supprimer