vendredi 24 août 2012

காதல் நாற்பது (நான்காம் பத்து)        காதல் நாற்பது (நான்காம் பத்து) 
       
        உன்மடியில் குழந்தையென நான் தவழ்ந்தால்
             உள்ளத்துள் இன்பத்தேன் ஊறு மன்றோ?
        என்மடியில் பூங்கொடியே நீயி ருந்தால்
             இவ்வுலகை மறந்துமனம் மயங்கு மன்றோ?
        பொன்னுடலாம் உன்னழகு மிளிரக் கண்டு
             போதையிலே என்றனுயிர் ஆடு மன்றோ?
        உன்னருளால் நல்லறமே மலருங் கண்ணே
             ஓங்குதமிழ் ஒண்டொடியே வாராய் முன்னே! 31

        கண்டவுடன் மயக்கமுறச் செய்யுங் கண்ணாள்
             காட்டுகின்ற வித்தைகளை என்ன வென்பேன்?
        தண்டையுடன் உன்னடிகள் நல்கும் ஓசை
             சந்தத்தில் பொழுதெல்லாம் சொக்கிப் போவேன்!
        கொண்டையுடன் பூமணக்கும் வடிவைக் காணக்
             குவலயத்தில் வேறழகோ இல்லை யென்பேன்!
        பண்டுதமிழ் நன்னெறியைக் காக்கும் பாவாய்!
             பாவலனின் ஏக்கத்தை உடனே தீராய்! 32

        பத்துவிரல் வந்தென்னைத் தடவட்  டும்மே!
             பாற்கடலின் நல்லமுதைப் பருகட் டும்மே!
        கத்துகடல் மணற்பரப்பில் ஒன்றாய்க் கூடிக்
             காதல்மொழி பேசியுயிர் களிக்கட் டும்மே!
        கொத்துமலர் பூத்தாடும் சோலை தன்னில்
             கொஞ்சிமகிழ்ந் தாடியுளம் குளிரட் டும்மே!
        முத்துமணி மாலையென என்னைச் சூடி
             முத்தமிட மறவாதே ஆசைப் பெண்ணே! 33

        கண்பெற்ற பெரும்பயனை அடைந்து விட்டேன்
             கட்டழகி கயல்விழியைக் கண்டு! வாழ்வில்
        புண்பட்டு வாடிநின்ற என்றன் நெஞ்சம்
             பூவாக மலர்ந்ததடி காதல் கொண்டு!
        எண்ணற்ற எண்ணங்கள் எளிதாய்த் தோன்றி
             என்னுயிரை வாட்டுதடி ஏனோ இன்று!
        மண்பெற்ற செல்வமென வந்து தித்த
             மணிமொழியே நல்லுறவைத் தாராய் நன்று! 34

        விண்ணோடு விளையாடும் நிலவே வாராய்!
             வேதனையைத் தீர்த்தருளி நலமே தாராய்!
        கண்ணோடு கதைபேசும் கண்ணே வாராய்!
             கவியெழுதக் கற்பனையாம் வளத்தைத் தாராய்!
        பொன்னோடு பதிந்தொளிரும் மணியே வாராய்!
             பொலிகின்ற நல்வாழ்வை இனிதே தாராய்!
        என்னோடு கலந்திடவே பிறந்திட் டாயே!
             எப்பிறவி எடுத்தாலும் மனையாள் நீயே! 35

        நாட்டிலெனை எல்லோரும் மதித்து வாழ
             நற்குடியின் பெருமைகளை வாழ்வில் கூட
        ஏட்டிலெனைப் புலவரெலாம் போற்றிப் பாட
             இனிமைதரும் செல்வங்கள் குன்றாய்ச் சேர
        வீட்டிலுள துயரங்கள் விலகி யோட
             வெற்றிமகள் நாடிவந்து மாலை சூடப்
        பாட்டினிலே வேண்டுகிறேன் இன்பப் பாவாய்!
             பாங்குடனே உன்னுறவை இனிதே தாராய்! 36

        உன்முகத்தைப் பார்க்காமல் இருந்த நாள்கள்
             உப்பில்லாப் பண்டம்போல் போகும் வீணே!
        என்னகத்தை நன்னெறியில் செலுத்தச் செய்யும்
             இளையவளே! இன்னமுதே! என்றும் உன்றன்
        தன்னலத்தை எண்ணாமல் சேவை செய்து
             தண்ணிலவாய் ஒளிர்பவளே! தெய்வப் பெண்ணாய்ப்
        பொன்னகத்தைப் பெற்றவளே! உன்னைப் போற்றிப்
             புகழ்வதிலே மகிழ்ச்சியுறும் என்றன் நெஞ்சே! 37

        சோலையிலே கமழ்கின்ற மணமே யாகும்
             சுந்தரியே உன்வரவு! மயக்கும் இன்ப
        மாலையிலே நினைவுகளைப் பெருகச் செய்து
             வாட்டுமெனை உன்னழகு! அணிந்து வந்த
        சேலையிலே மின்னுகின்ற பூக்கள் யாவும்
             சிந்தனையைத் தாக்குகின்ற வயது! தென்னம்
        பாளையிலே சுரக்கின்ற கள்ளாம் ஒப்பில்
             பருவமெனை மயக்குவதேன் சின்னப் பெண்ணே? 38

        நெடுநாளாய் யான்பாடும் பாட்டை நீயோ
             நிலம்நின்று கேட்காமல் போகின் றாயே!
        நடுநிலையாய் உள்ளத்தை வைத்துக் கொண்டு
             நற்பதிலை நவிலுகவே! உன்னை என்கை
        தொடுநாளே பேரின்பத் திருநா ளாகும்!
             தூயவளே உன்னுறவால் வாழ்வே யோங்கும்!
        விடுகதையாய்ப் பார்வையினை வீச வேண்டாம்!
             விரும்புமெனை வேதனையில் தள்ள வேண்டாம்! 39

        கொள்ளையிடும் பேரழகே! குளிர்ந்த காற்றே!
             கோடையிலே கிடைத்தஇள நீரே! காதல்
        எல்லையிட முடியாத இன்ப மன்றோ?
             இவ்வுலகை இயக்கிவரும் தெய்வ மன்றோ?
        தொல்லைதரும் சாதிகளைச் சொல்லிச் சொல்லித்
             தூய்மைமிகு பேரன்பைச் சாய்க்க எண்ணும்
        கள்ளமனக் காரர்களை எதிர்த்து நின்று
             கமழ்கின்ற நல்வாழ்வைக் காண்போம் கண்ணே! 40

2 commentaires:


 1. கொள்ளையிடும் வண்ணத்தில் கொட்டிய பாட்டழகை
  எல்லையிடும் ஆற்றல் எனக்கில்லை! - கொல்லையிடும்
  வன்னுரம்! வல்லகவி வாணா் வளங்காணும்
  சொன்மரம் என்பேன் சுவைத்து!

  RépondreSupprimer

 2. வணக்கம்!

  சொன்மரம் என்றுரைத்த துாய தமிழ்படித்து
  என்மனம் துள்ளி இசைபாடும்! - பொன்மனம்
  கொண்ட தமிழ்ச்செல்வா! கோடிமுறை என்வலையைக்
  கண்டு களித்தாய் கமழ்ந்து!  RépondreSupprimer