mercredi 22 août 2012

காதல் நாற்பது (இரண்டாம் பத்து)


காதல் நாற்பது (இரண்டாம் பத்து)

சீர்பாடும் தேன்சிட்டே! என்னுள் வாழும்
    சிங்காரத் தேவதையே! பெற்ற இன்பப்
பேர்பாட மாட்டாயோ? கேட்டு வந்த
    பெருமைகளைக் கூறாயோ? மின்னும் தங்கத்
தேரோடும் பேரழகைப் பார்த்து விட்டால்
    தேன்கூடக் கசந்திடுமே! அன்பே உன்றன்
மார்போடு தலைவைத்தே உறங்கா விட்டால்
    மனஏக்கம் தீரவழி உண்டோ கண்ணே? 11

தேன்கொடுக்கும் பூங்கொடியே! தெவிட்டா இன்பத்
    தினைகொடுக்கும் பொன்மகளே! வையம் வாழ
வான்கொடுக்கும் பொன்மழையே! என்றன் வாழ்வில்
    வளங்கொடுக்கும் வடிவழகே! அழகு கொஞ்சும்
மீன்னிருக்கும் விழியாளே! மயக்கம் தீர
    விருந்தளிக்கும் மொழியாளே! கற்கண் டாக
நான்தொடுக்கும் பாக்களிலே நாடி வந்து
    நலங்கொடுக்கும் நல்லவளே அருகே வாராய்! 12

ஊற்றாக இன்பத்தைச் சுரந்தாள்! ஈடில்
    உணவாகி மடிமீது கிடந்தாள்! ஓடும்
ஆற்றாக நன்மைகளைக் கொடுத்தாள்! காமன்
    அம்புகளை என்மார்பில் தொடுத்தாள்! நன்கு
பூத்தாடும் சோலையெனச் சிரித்தாள்! வண்ணப்
    புன்னகையால் உள்ளத்தைப் பறித்தாள்! நாற்றுக்
கூத்தாடும் வயலருகே இருந்தாள்! அங்கே
    கூடிமனம் களித்ததனை மறக்கப் போமோ? 13

ஏதேதோ எண்ணங்கள் என்னுள் தோன்றி
    என்னுயிரை வாட்டுதடி! இனிமை பொங்க
ஓகோகோ என்றாடும் இளமைக் காலம்
    உணர்ச்சிகளை ஊட்டுதடி! மயக்கம் தந்தே
ஆகாகா என்றொளிரும் பருவச் சிட்டே!
    ஆசைகளை மொழிந்திட்டேன் தமிழ ணங்கே!
ஈகீகீ என்றென்னை இளித்தல் வேண்டாம்
    இளங்கொடியே நீயின்றி வாழ்வே இல்லை! 14

ஆத்தாடி செய்கின்றாய் வம்பு! ஆசை
    அத்தானை எப்போதும் நம்பு! கண்ணே
கூத்தாடிப் புரியாதே தொல்லை! உன்னைக்
    கொஞ்சாமல் கண்ணுறங்க வில்லை! நெஞ்சம்
காற்றாடி போல்வானில் பறக்கும்! உன்றன்
    கட்டழகில் மனமேங்கிக் கிடக்கும்! அன்பே
நேற்றோடி வாந்தாயே ஏனோ இன்று
    நெருங்காமல் இருக்கின்றாய் நேர்மை தானா? 15
 
அச்சாணி வண்டியினைக் காக்கும்! உன்றன்
    அழகன்றோ என்பசியைப் போக்கும்! ஆசை
மச்சானின் மார்பின்மேல் சாய்ந்து நாளும்
    மகிழ்ந்திடுவாய் மஞ்சத்துள் மானே! மின்னும்
முத்தாகத் திகழ்கின்றாய் மாதே! வாழ்வில்
    முத்தமிழாய் இனிக்கின்றாய் தேனே! இன்ப
வித்தாக வந்துதித்தாய்! மண்ணில் காணும்
    வெண்ணிலவே! உன்னருளால் வாழ்கின் றேனே! 16

அச்சத்தைத் தவிர்த்திடுவாய்! அத்தான் கொண்ட
    ஆசைக்கே இணங்கிடுவாய்! மறைவாய் உள்ள
மச்சத்தைக் காட்டிடுவாய்! மன்னன் உற்ற
    மயக்கத்தைத் தீர்த்திடுவாய்! சுகத்தை நல்கும்
முத்தத்தைக் கொடுத்திடுவாய்! முல்லை மொட்டின்
    முகத்திரையை விளக்கிடுவாய்! இன்பம் கூட
மிச்சத்தை வைத்திடுவாய்! நாளை வந்து
    விரும்பியதைப் பெற்றிடுவாய் வேண்டும் மட்டும்! 17

கண்ணுக்குள் கலந்துள்ள பெண்ணே வாராய்!
    கருத்துக்குள் நடனமிடும் கவிதை தாராய்!
விண்ணுக்குள் விளையாடும் நிலவே வாராய்!
    விருப்புக்குத் தடையின்றிப் பதிலைக் கூறாய்!
பொன்னுக்குள் பதித்திட்ட முத்தே! மாலைப்
    பொழுதுக்குப் பொலிவூட்டும் அழகே! இந்த
மண்ணுக்குள் மறைகின்ற வரையில் என்றன்
    மனதுக்குள் நீமட்டும் வாழ்வாய் மானே! 18

முகத்துக்கே முன்னூறு கவிகள் தந்தேன்!
    முத்துதிரும் சிரிப்புக்கோ விலையே இல்லை!
அகத்துக்கே அருந்தமிழை அளித்தேன்! உன்றன்
    அழகுக்கே நானடிமை யானேன்! மின்னும்
நகத்துக்கே சுடர்கின்ற மணிகள் ஈந்தேன்!
    நல்லமிழ்தப் பேச்சுக்கே தவமி ருந்தேன்!
உதட்டுக்கே ஒருகோடி கொடுத்தேன்! உன்றன்
    உறவுக்கே என்னுயிரைப் பரிசாய்த்; தந்தேன்! 19

கொட்டுகின்ற வெண்பனியின் குளிருங் கூடக்
    கொஞ்சுகின்ற நம்முறவால் வெப்ப மாகும்!
வெட்டுகின்ற பார்வையினை வீசு கின்றாய்
    விறகாக என்னெஞ்சம் பிளந்து போக!
கிட்டுகின்ற நல்லமுதோ வேண்டாம்! வேண்டாம்!!
    கிடைத்திட்ட உன்னிதழ்கள் போதும் போதும்!
முட்டுகின்ற ஆசைகளை அடக்க போமோ?
    முக்கனியே! முத்தொளியே! முன்னே வாராய்! 20

2 commentaires:


 1. கற்கண்டு மாமலையைக் கண்முன் அளித்துள்ளீா்!
  நற்றொண்டு செய்தீா் நறுந்தமிழ்ப் - பற்றேந்தி!
  காதல் கமழ்கின்ற காட்சிகளைக் கற்றுமனம்
  வேதமெனச் சொல்லும் வியந்து!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   காதல் இலையென்றால் சாதல் நலமென்றான்
   வேதம் அறிந்த வியன்கவிஞன்! - ஆதலினால்
   இன்றேன் விருத்தத்தில் ஈந்த கருத்துகளைத்
   தின்றே கிடப்பாய் தினம்!

   Supprimer