jeudi 16 août 2012

வள்ளுவர் ஊட்டும் பண்புடைமை



தமிழ் வணக்கம்

அம்மா! தாயே! என்றுன்முன்
      அடியேன் பிச்சை ஏந்துகிறேன்
சும்மா என்னை அனுப்பாமல்
      சொற்கள் தந்து பசிதீர்ப்பாய்!
தம்மா தோண்டு கொடுத்தாலும்
      தமிழே! அமுதே! என்னுள்ளம்
கும்மா குத்துத் தாளமெலாம்
      கொட்டி ஆடி மகிழ்ந்திடுமே!

இறை வணக்கம்!

செம்மான் சீதை கேட்டவுடன்
      அம்மான் பின்னே சென்றவனே!
எம்மான் இராமா! வில்லழகா!
      எளியோன் பிச்சை ஏந்துகழிறேன்!
செம்மாந் தொளிரும் செந்தமிழை
      சிறியோன் எனக்கும் ஈந்திடுலாய்!
இம்மா நிலத்தில் உனைத்தவிர
      என்னைக் காப்பார் யாருள்ளார்?

வள்ளுவர் வணக்கம்!

அம்மன் என்பேன்! எனைக்காக்கும்
      அய்யன் என்பேன்! வள்ளுவனே!
எம்மின் இதயம் உனைநாடி
      ஏந்தும்! முப்பால் ஊட்டிடுவாய்!
இம்மண் உதித்த தவபேறே!
      இன்பத் தமிழின் தேனாறே!
செம்மண் மழைநீர் கலந்ததுபோல்
      செம்மைக் குறளில் எனைச்சேரே!

கம்பன் வணக்கம்!
 

கம்பா! கவிதை பெருங்கடலே!
       கைகள் ஏந்தி நிற்கின்றேன்

தெம்பா நானும் கவிபாடத்
      திறனைக் கொஞ்சம் ஆருளுகவே!
தும்பாய் என்னை எண்ணாமல்
      தூயா என்னுள் அமருகவே!
செம்பால் குடிக்க உன்வீட்டில்
      சொம்பாய் வந்து பிறப்பேனே!

தலைவர்  வணக்கம்!

தம்பால் தமிழைத் தரித்தவரே!
      தாழ்ந்து கைகள் ஏந்துகிறேன்!
எம்பால் இருந்து இயங்கிடுக!
      இன்னல் தீர மருந்திடுக!
சிம்பாய்க் கிடக்கும் சிறியோன்நான்
      செப்பும் கவியில் பிழையிருந்தால்
கம்பால் மெல்லத் தட்டிடுக!
      கவிதை நிறைத்து அமர்ந்திடுவேன்!

அவையோர் வணக்கம்

அம்பாள் முன்னே கைகுவித்து
      அடியார் கெஞ்சிம் நிலையைப்போல்
நம்மாள்  இவர்கள் என்றெண்ணழி
      நானும் அவையில் கைகுவித்தேன்!
எம்மால் படைக்கும் கவிதைகளில்
      இனிமை சற்றே இருக்கமெனில்
உம்மால் முடிந்த கையொளியை    
      உடனே தட்டி உசுப்புகவே!

பொன்னும் பொருளும் உடைமைகளா?
      மண்ணும் மணியும் உடைமைகளா?
கன்றும் குன்றும் உடைமைகளா?
      கனிசேர் மரங்கள் உடைமைகளா?
வென்றும் கொன்றும் சேர்த்துலகில்
      விளையும் பயன்கள் உடைமைகளா?
அன்றும் இன்றும் என்றென்றும்
      பண்பே வாழ்வின் தனியுடைமை!

உயிரைக் காக்கும் உடைமைகளை
      உரைக்கும் எங்கள் திருக்குறளே!
வயிறைக் காக்கும் நிலைமாற்றி
      வாழ்வைக் காக்கும் வழிகாட்டும்!
துயரைக் காக்கும் பெருங்கொடுமை
      தொடரும் வாழ்வு பழிதீட்டும்!
பயிரைக் காக்கும் வேலியெனப்
      பண்பைக் காத்துப் பயனுறுக!

இரண்டே அடிகள்! இவ்வுலகின்
      எல்லை உரைக்கும்! நல்லமுதம்
திரண்டே பொங்கும் திருக்குறளைத்
      தினமும் கற்பீர்! தீதகலும்!
இருண்டே கிடக்கும் இதயத்துள்
      இன்பம் விளைய இடமுண்டோ?
விருந்தே ஆகும்! மக்களுடன்
      விரும்பிப் பழகும் பண்புடைமை!

சொல்லச் சொல்லச் சுவையூறும்!
      தூய வாழ்வின் நிலைகூறும்!
அள்ள அள்ள அறிவூறும்!
      ஆன்ற குடியின் அறஞ்சேரும்!
மெல்ல மெல்ல உயிரேட்டில்
      வெல்லும் குறளைப் பதித்திடுவீர்!
நல்ல நெறிகள் அத்தனையும்;
      வல்ல தமிழின் பண்புடைமை!

மலைபோல் செல்வம் பெற்றாலும்
      மக்கள் பண்பு மனத்துள்ளே
இலையேல் என்றால் பாழ்கலத்தில்
      இட்ட பால்போல் வீணாகும்!
கலைபோல் கமழ, முற்றியுள
      கனிபோல் இனிக்கத் திருக்குறளைத்
தலைமேல் தரித்துக் காத்திடுவீர்!
      தமிழே உலகின் பண்புடைமை!

கூர்மை மின்னும் அறிவென்ன?
      கூட்டிச் சேர்த்த பொருளென்ன?
சீர்மை மின்னும் வாழ்வென்ன?
      செழித்து மின்னும் புகழென்ன?
நேர்மை மின்னும் நன்னெறிகள்
      நெஞ்சுள் இலையேல் மரம்போல்வார்!
நீர்மை மின்னும்! நிலஞ்செழிக்கும்!
      நேய தமிழே பண்புடைமை!
 
பெருத்த ஓசை எழும்முன்னே,
      பெரியோர் நெளிந்தே எழும்முன்னே,
உரித்த நிமிடம் வரும்முன்னே
      உடனே நிறுத்த சொல்முன்னே
விருத்தக் கவிதை அவையோர்கள்
      வெறுக்கும் முன்னே! நிறைகவியைப்
பொருத்த மாக முடிப்பதுவே
      புலவன் என்றன் பண்புடைமை! 



பிரான்சு கம்பன் கழகத்தின் பொங்கல் விழா 26.02.2011

2 commentaires:


  1. வள்ளுவா் நல்கும் வளர்தமிழ்ப் பண்புகளை
    அள்ளி அணிந்தால் அறுந்துயரே! - உள்ளத்துள்
    நல்லொளி தோன்றும்! நறுந்தமிழ் நா..அமர்ந்து
    சொல்லொளி தோன்றும் சுடா்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வள்ளுவர் தந்த வளர்தமிழ்ப் பண்புகளை
      உள்ளுவர் ஓங்கி உயா்வாரே! - தெள்ளேந்தி
      மன்பதை கற்க வழிசெய்வீா்! இங்கினி
      வன்வதை நீங்கும் மடிந்து!

      Supprimer