dimanche 19 août 2012

இன்பம் பொங்குக



இன்பம் பொங்குக


தமிழினத்தின் சால்புகளைச் சாற்றும்! இன்பத்
           தைத்திருநாள்! தமிழ்ப்பெருநாள்! உழவின் பொன்னாள்!
அமிழினத்தின் சொல்லெடுத்துக் கவிதை பாடி
         அருந்தமிழின் புத்தாண்டை அழைப்பீர்! இல்லம்
சிமிழ்மணத்தின் வாசமெனக் கமழ, மின்னும்
          சீர்மனத்து வள்ளுவனைச் சேர்வீர்! தண்ணீர்க்
குமிழ்கணத்தில் உடைந்துவிடும்! நெஞ்சுள் உற்ற
          குப்பைகளைக் கொளுத்திடுவீர்! போகி பொங்கும்!

ஒற்றுமையின் உயர்வுகளைப் பாடிப் பாடி
          உளஞ்சோர்ந்து போனதுதான் மிச்சம்! சேர்ந்த
நற்றுணையின் கால்களையே வாரி வாரி
          நாமடைந்த இழிவுகளே உச்சம்! அன்னை
பற்றினையும், செந்தமிழாம் நாட்டின் மேலே
          படர்ந்தொளிரும் அன்பினையும் வைப்பீர்! சீர்கள்
முற்றினையும் பெற்றிடுவீர்! நம்மின் மீது
          மூண்டபழி போக்கிடுவீர்! பொங்கல் பொங்கும்!

மாடுகள்தாம் தலையாட்டும்! ஓடும்! மேயும்!
          மனிதர்களும் தலையாட்டி மேயும் காலம்!
காடுகளும் தோற்றவிடும் வண்ணம் இன்று
          நாடுகளும் மாறிவரும் பொல்லாக் காலம்!
வீடுகளும் பொலிவுறவே மாற்றம் செய்து
          விரும்புகிற வண்ணத்தை இட்டோம்! நெஞ்சக்
கூடுககளில் குவிந்துள்ள குப்பை நீக்கிக்
          கொண்டொளிரச் செய்திடுவோம்! உழவு பொங்கும்!

காணுகின்ற பொங்களுண்டு! அந்நாள் தன்னைக்
          கவிஞன்நான் எதிர்கின்றேன்! அடிமை யென்று
கூணுகின்ற சிறுசெயலை வளர்க்கும் அந்நாள்!
          கூலியென்றும் கூனனென்றும் பேசும் அந்நாள்!
நாணுகின்ற செயற்போக்கிச் சாதி என்னும்
          நாறுகின்ற வெறிநீக்கிக் பிறப்பொக் கும்சீர்
பேணுகின்ற வள்ளுவனார் வழியை ஏற்பீர்!
          பெருமையெலாம் பந்தாடும்! இன்பம் பொங்கும்!

24.01.2011


உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளின்
எங்கள் இதயமலர் வாழ்த்துக்கள்! - சங்கமொளிர்
தங்கத் தமிழ்பரவத் தண்டமிழர் சீர்பரவ
எங்கும் உழைப்போம் இணைந்து


15.02.2011

2 commentaires:


  1. இன்பம் படைக்கின்ற ஈடில்லாத் தைப்பொங்கல்
    என்று வருமோ இனங்காண! - என்றென்றும்
    தன்னலம் ஓங்கித் தமிழன் இருந்திட்டால்
    இன்னலம் உண்டோ இயம்பு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தன்னலம் நீக்கித் தமிழன் செயற்பட்டால்
      பொன்னலம் பூத்துப் பொலிந்திடுமே! - என்தோழா!
      இந்தத் தமிழன் இருப்புச் செவிகொண்டான்
      எந்தப் பொழுதும் இழிந்து!

      Supprimer