dimanche 16 octobre 2022

பாவலர் சரளா விமலராசா


 

பாவலர் சரளா விமலராசா
புகழ்ப் பதிற்றந்தாதி!

 

உலகு மகிழ்ந்தேத்த, ஓங்குநலஞ் சூழ,

அலகில் அகத்தன்பே ஆழக், - குலஞ்செழிக்க,

என்றைக்கும் பேர்நிலைக்க, இன்சரளா செந்தமிழாம்

அன்னைக்[கு] அரும்பணி ஆற்று!

 

ஆற்றல் தமிழ்ப்பெண்ணின் ஆளுமை நல்விருதை

ஏற்றுச் சிறந்த எழில்சரளா - போற்றுகிறேன்!

வண்ணக் கவியுலகில் மின்னும் மதியானாய்!

அண்ணல் அளித்த அருள்!

 

அருள்கமழும் உள்ளம், அறங்கமழுஞ் சிந்தை,

பொருள்கமழும் பாட்டின் புதையல், - உருள்திகழுந்

தேரழகு செய்கை, செழித்தோங்குந் தென்சரளா

பேரழகு பேணும் பிறப்பு!

 

பிறப்பின் பயனும் பெரியோர்தம் வாழ்த்தும்

சிறப்பின் தொடரும் செழிக்கும் - அறத்தினைக்

காக்குந் தமிழ்ச்செல்வி கன்னல் மொழிச்சரளா

பூக்கும் புதுமைப் பொழில்!

 

பொழின்மணக்கும் பாட்டும் புகழ்மணக்கும் தொண்டும்

எழின்மணக்கும் தோற்றமும் ஏந்தி - மொழிமணக்கும்
பற்றுப் படர்ந்தோங்கிப் பண்பார் பயன்சரளா!

கற்றுக் கமழுங் கவி!

 

கவியே உயிராகும்! கற்பே..வே ராகும்!

புவியே உறவாகும் பூத்துச் - செவியிரண்டும்

நல்ல தமிழ்கேட்டு நாளினிக்கும் நற்சரளா!

வல்ல மதியின் மகள்!

 

மதியின் மகளென்பார்! வாழ்வு கொழிக்கும்

நிதியின் மகளென்பார்! நெஞ்சம் - நதியென்பார்!

வள்ளல் மகளென்பார்! வண்ண மிகுசரளா

மள்ளல் மகளென்பார் வாழ்த்து!

 

வாழ்த்து மலையாகும்! வாழ்வு கலையாகும்!

காத்து மரபைக் கடனாற்றும்! - சாத்து

மணிச்சரமாய் மாண்பழகு வாய்த்த சரளா

அணிச்சரமாய் மின்னும் அறிவு!

 

மின்னும் அறிவொளியை மேவி நிலம்வாழப்

பின்னும் படைப்புகள் பேறருளும்! - என்றென்றும்

ஈசன் திருவடியை ஏத்தும் அருஞ்சரளா

பாசப் பொழிவெனப் பாடு!

 

பாடு நெறிசிறக்கும்! பண்பு வழிபழுக்கும்! 

தேடு பொருள்கொழிக்கும்! சீர்செழிக்கும்! - நீடுபுகழ்
நீதி நிறைகொடுக்கும் நெஞ்சச் சரளாவை
ஓதி மகிழும் உலகு!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்
16.10.2022

 

Aucun commentaire:

Enregistrer un commentaire