samedi 25 décembre 2021

விருத்த மேடை - 61

 


விருத்த மேடை - 61

 

எண்சீர் விருத்தம் - 14

 

விளம் +  விளம் + விளம் + மா

விளம் +  விளம் + விளம் + மா

 

கூவின பூங்குயில்! கூவின கோழி!

  குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்!

ஓவின தாரகை ஒளியொளி உதயத்

  தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்

  திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

யாவரும் அறிவரி யாய்!எமக் கெளியாய்!

  எம்பெரு மான்!பள்ளி எழுந்தரு ளாயே!

 

[மாணிக்கவாசகர், திருப்பள்ளியெழுச்சி]

 

கதிரவன் குணதிசை சிகரம்வந் தணைந்தான்

  கனவிருள் அகன்றது காலையம் பொழுதாய்

மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்

  வானவர் அரசர்கள் வந்துவந் தீண்டி

எதிர்திசை நிறைந்தனா் இவரொடும் புகுந்த

  இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலில் அலைகடல் போன்றுள தெங்கும்

  அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே!

 

[தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பள்ளியெழுச்சி]

 

புள்ளினம் ஆர்த்தன, ஆர்த்தன முரசம்,

  பொங்கிய தெங்குஞ்சு தந்திர நாதம்?

வெள்ளிய சங்கம்மு ழங்கின கேளாய்!

  வீதியெ லாமணு குற்றனர் மாதர்,

தெள்ளிய அந்தணர் வேதமும் நின்..தன்

  சீர்த்திரு நாமமும் ஒதிநிற் கின்றார்!

அள்ளிய தெள்ளமு தன்னையெம் அன்னை!

  ஆருயி ரே!பள்ளி யெழுந்தரு ளாயே!

 

[மகாகவி பாரதியார், பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி]

 

காலை மலர்ந்தது! கடற்பரப் பெங்கும்

  கதிரவன் பொன்னொளி கலந்தது காணாய்!

சோலையில் புள்ளினம் சொலுந்தமிழ் இசையும்

  துாயவ! நின்திருச் செவிவிழ விலையோ?

சீலமிக் கவர்களுன்  திருவடி தொழவே

  செஞ்சொலால் கவிதொடுத் திங்குவந் துள்ளார்!

கோலநல் விழிதிறந் தருளுக! கம்ப!

  குருமணி யே!பள்ளி எழுந்தரு ளாயே!

 

[பாவலர்மணி சித்தன், கம்பன் திருப்பள்ளியெழுச்சி]

 

தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி

 

 பொன்னிறக் கதிரொளி பொலிந்தது வானில்

  புவிமகள் புத்துடை பூண்டிடக் கண்டோம்!

பன்னிற அழகினைப் பண்ணுமே பூக்கள்!

  பண்ணிசை பாடிட எண்ணுமே ஈக்கள்!

இன்னிறச் சேவலும் எழுப்பிசை மீட்டும்!

  இளம்பசு கன்றுற எழின்மடி காட்டும்!

நன்னிற மனத்தினர் நற்றவம் வெல்ல  

  நற்றமிழ் அன்னையே விழிமலர் திறவாய்!

 [பாட்டரசர்]

 

ஓவ்வோர் அரையடியும்  விளம் +  விளம் + விளம் + மா என்ற வாய்பாட்டில் அமையும்.

 நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனையுறும்.

திருப்பள்ளியெழுச்சிப் பாடலை இவ்வகையில் எழுதுதல் மரபாக உள்ளது.

மேலுள்ள விருத்தங்களில் சில இடங்களில் விளம் வரும் இடத்தில் காய் வந்துள்ளது. [மான்!பள்ளி, சிகரம்வந், அரசர்கள், அரங்கத்தம், மா!பள்ளி, ரே!பள்ளி] கருவிளம் வரவேண்டுமிடத்தில் புளிமாங்காய் வரும். கூவிளம் வரவேண்டுமிடத்தில் தேமாங்காய் வரும். இவை ஒற்று நீங்க எண்ணப்படும் எழுத்தெண்ணிகையில் ஒத்த சீர்களாதலின் இவ்வமைதியைச் சான்றோர் ஏற்றனர். இதனைத் தொல்காப்பியரும் 'வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே' [தொல். செய். - 29] என்ற நுாற்பாவால் விளக்கியுள்ளார்.

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
25.12.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire