samedi 2 mai 2020

கேட்டலும் கிளத்தலும்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  
பெரும் வழக்கு, பெருவழக்கு - இவற்றில் எது சரியா?
மணம் முடிந்தது, மணமுடிந்தது - இவற்றில் எது சரியா?
  
பாவலர் இளமதி, சர்மனி.
  
----------------------------------------------------------------------------------------
  
பெரு என்ற பண்படி, வல்லினத்தின் முன்வரின் இனம் மிகும். [பெருங்கவி, பெருஞ்சால்பு, பெருந்திணை, பெரும்பாடல்]
  
உயிரின் முன்னும் யகரத்தின் முன்னும் முதல் நீளும். [பேராசிரியர், பேர்யானை]
  
மெல்லினத்தின் முன்னும் வகரத்தின் முன்னும் இயல்பாகவே வரும். [பெருநாரை, பெருவிழா]
பெரும்வழக்கு என்பது பிழை, பெருவழக்கு என்பதே சரி.
  
மகர ஈற்றுமொழி முன் மெல்லினம் வர இருவழியும் ஈறுகெட்டு முடியும்.
  
வேற்றுமை
  
மரம் + ஞாண் = மரஞாண்
மரம் + நுால் = மரநுால்
மரம் + மணி = மரமணி
  
அல்வழி
  
வட்டம் + ஞான்றது = வட்டஞான்றது
வட்டம் + நீண்டது = வட்டநீண்டது
வட்டம் + மாண்டது = வட்டமாண்டது
  
மணம் முடிந்தது என்பது பிழை, மணமுடிந்தது என்பதே சரி.
  
மகர ஈற்றுமொழி முன் இடையினம் வர மேற்றுமையில் ஈறுகெட்டு முடியும். அல்வழியில் உறழ்ச்சியுறும்.
  
வேற்றுமை
  
மரம் + யாழ் = மரயாழ்
மரம் + வேர் = மரவேர்
  
அல்வழி
  
வட்டம் + வலை = வட்டவலை [ஈறுகெட்டு முடிந்தது]
மரம் + வலிது = மரம் வலிது [இயல்பாய் முடிந்தது]
மரம் + யாது = மரம்யாது [இயல்பாய் முடிந்தது]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
02.05..2020

1 commentaire: