mardi 5 mai 2020

ஓரடி நொண்டிச் சிந்து!

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஓரடி நொண்டிச் சிந்து!
  
பெரும்பாலும் நொண்டிச்சிந்து ஈரடிக் கண்ணிகளாக வரும். சிறுபான்மை நாலடிக் கண்ணிகளும், அருகி ஓரடிக் கண்ணிகளும் வருதல் உண்டு.
  
1.
வீட்டறையில் வாடுநிலை யேன்... -.?நோய்வந்து
வெந்துதினம் துன்பநிலை முந்துவது மேன்...?
  
2..
முற்றொடிக்கி மேவுதுயர் ஏன்... - .?வந்தெம்மை
மூட்டுவலி மூச்சுவலி வாட்டுவது மேன்...?
  
3.
பிள்ளைகளின் ஆட்டமிலை யே... - ..!நாளும்
கொள்ளையிடும் நோய்க்கொடுமை எல்லையிலை யே...!
  
4.
வேலையிலை சோறுமிலை யே... -..!கொல்லும்
வேதனையை ஓட்டவொரு பாதையிலை யே!
  
5.
காத்தருளும் எம்முயிர்ஈ சா... - .உன்மலர்க்
கால்பிடித்தோம் நோயகற்றும் பால்கொடுப்பா யே...!
  
[பாட்டரசர்]
  
நொண்டிச்சிந்துவின் இலக்கணத்தைச் சிந்துப்பா மேடை - 6, 7 ஆம் பகுதிகளில் விரிவாகக் கண்டோம். இங்கு ஓரடியின் இலக்கணத்தைச் சுருக்கமாகக் காண்போம்.
  
ஓரடிக்கு எட்டுச் சீர்கள் வரவேண்டும்.
  
அடியின் பிற்பாதிகளில் பொழிப்பெதுகை அமைய வேண்டும்.
  
அடியின் ஒவ்வொரு சீரில் நான்கு அசை இருக்கும். [இப்பாடல் நான்மை நடைக்குரியது]
  
மூன்றாம் சீரிலும், எட்டாம் சீரிலும் ஒரே உயிர் இருக்கும், அவ்வுயிர் அளபெடுத்து நீண்டு ஒலிக்கும். [அளபெடுக்கும் ஒவ்வோர் எழுத்தும் ஓரசையாகும்]
  
ஒவ்வோர் அடியிலும் நான்காம் சீராக வரும் தனிச்சொல் மூவசைச் சீராக வரும். சிறுபான்மை நாலசையும், ஈரசையும், அருகி ஓரசையும் பெறும். இவ்விடங்களில், மூன்றாம் சீரின் ஈற்றசை நீண்டு நான்காம் சீரும் நாலசையைப் பெற்றொலிக்கும்.
  
விரும்பிய பொருளில் ' ஓரடி நொண்டிச் சிந்து' ஐந்து பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
05.05.2020.

Aucun commentaire:

Enregistrer un commentaire