mardi 12 mai 2020

இலாவணி   



சிந்துப்பா மேடை - 9
  
இலாவணி
  
புலவர் இருவர் எதிரெதிரே அமர்ந்து கொண்டு "டேப்" எனும் ஒருவகைத் தோற்கருவியை அடித்துப் பாட்டுப் பாடுவார். ஒரு புலவரின் வினாவுக்கு எதிரே உள்ள புலவர் விடை சொல்வதாக இந்நிகழ்ச்சி அமையும். [சக்கரவர்த்தி திருமகன் திரைப்படத்தில், புரட்சித் தலைவரும், என் எச். கிருட்டினனும் பாடும் பாடல் காட்சி இவ்வகையைச் சற்றே ஒத்திருக்கும்]
  
அடி: ஆதிதாள வட்டணையில் அடங்கும் எண்சீரடி.
சீர் : நான்மை நடையது.
இயைபு : அடியிறுதிகளில் அடுக்குத் தொடராக இயைபுத்தொடை அமைவது இதன் தனியியல்பு.
  
ஏட்டினிலே வீரத்தமிழ் தீட்டிவைத்துப் பாவரசன்
என்றபுகழ் பெற்றவனும் யாருயா ரு...?
நாட்டுரிமை வேட்டினிய பாட்டினிலே போர்தொடுத்த
நல்லகவி பாரதியாம் பேருபே ரு...!
  
[கலைமாமணி, கவிஞர் தே. சனார்த்தனன்]
  
ஒரடி எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். [ 'ஏட்டினிலே' என்பது முதல் 'யாரு' என்பது வரையில் ஓரடி]
  
முதல் 6 சீர்களில் ஒவ்வொன்றிலும் 4 சிந்தசைகள் வரவேண்டும். [நான்கு எழுத்துக்கள்] [ஏட்/டி/னி/லே - நான்கசை உள்ளசைக் காண்க] சிந்துப்பா அசைகள் இரண்டு. அவை, குறிலசை, நெடிலசை எனப்படும்.
  
குறிலசை
  
தனிக் குறில் [அ] [க]
  
நெடிலசை
  
தனி நெடில் [ஆ] [கா]
குறில் ஒற்று [அல்] [கல்]
நெடில் ஒற்று [ஆல்] [கால்]
  
7, 8 ஆம் சீர்கள் அடுக்குத்தொடராக அமையும். [யாருயாரு - பேருபேரு] 8 ஆம் சீரில் ஓரசையுடன் இசை நீட்டம்பெறும். இசை நீட்டத்தைப் புள்ளியிட்டுக் காட்டியுள்ளேன்.
[யா.ருயா ரு...] [பே.ருபே ரு...]
  
முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனைபெறும் [ஏட்டினிலே - என்றபுகழ்]
  
முன் அரையடியில் பொழிப்பெதுகை அமையும் [ஏட்டினிலே - தீட்டிவைத்து] [நாட்டுரிமை - பாட்டினிலே]
  
இப்படி வரும் இரண்டடிகள் ஓரெதுகையில் அமைய வேண்டும். [ஏட்டினிலே - நாட்டுரிமை]
  
இரண்டு அடிகளிலும் இறுதிச்சீர்கள் இயைபு பெறவேண்டும் [யாருயாரு - பேருபேரு]
    
இதுவே இலாவணியின் ஒரு கண்ணியாகும்.
  
விரும்பிய பொருளில் 'இலாவணி'யில் முக்கண்ணிகள் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
12.05.2020.

Aucun commentaire:

Enregistrer un commentaire