dimanche 10 novembre 2019

விளக்கு ஓவியக்கவிதை


காமாட்சியம்மன் விளக்கு ஓவியக் கவிதை
  
மனமே விளக்கு!
[நேரிசை யாசிரியப்பா]
  
வெளியின் பெருவொளி! வேதத் திருவொளி!
களிப்பின் கருவொளி! கருணை கமழொளி!
உலகே பாடித் தொழுமொளி! உயிரொளி!
நிலமே யுறுவெறி நீக்குந் தகையொளி!
தாளச் சபையிற் றேமா வணங்கு
கோலக் குங்குமங் கூட்டிய நோக்கொளி!
அன்பொளி வாழ்வின் வளத்தொளி! பண்பொளி
இன்பொளி! அறிவி லெழுமொளி சீரொளி!
தாயே! நீலி! வேணியே! தீமே!
தேயா வாறு தேனே மா..தா!
மானே! தேறு வாயா தேமே
தீயேணி வேலி நீயே தா..தா!
வினைவிளை விதியை மாற்றி யெனைக்..கா!
உனையே மகிழ வோது கின்றேன்!
புனலே! என்றன் பொன்..மா
மனமே விளக்கு! மாதா வெழுகவே!
  
அருஞ்சொற்பொருள்
  
தேமா வணங்கு - தேமாவாக இனிக்கும் அணங்கு
நோக்கு - அழகு
நீலி - பார்வதி
வேணி - வானம்
தீம் - இனிப்பு
தீ - அறிவு, விளக்கு
தேம் - மணம்
மா - பெருமை, அழகு
தேறு - தெளிவு
புனல் - ஆறு, குளிர்ச்சி
  
கருத்துரை
  
ஒளியின் சிறப்பினைப் போற்றியும், உயிரொளியைச் சாற்றியும், மனமே விளக்காக ஏற்றியும் இப்பாடல் ஒளிர்கிறது.
  
தாயே! நீயே வெளியின் பெருவொளியாகவும், வேதத்தின் திருவொளியாகவும், இன்பத்தின் கருவொளியாகவும், உலகைக் காக்கும் கருணையொளியாகவும், மக்கள் பாடித் தொழுமொளியாகவும், உயிரொளியாகவும், நிலமுறும் வெறியை நீக்கும் தகையொளியாகவும், திகழ்கின்றாய்.
  
ஆடற்கூத்தனுடன் அரங்கில் ஆடும் அணங்கே! உன் குங்கும வொளியே அழகின் பேரொளியாக மிளிர்கின்றது.
  
அன்பொளியே வாழ்வின் வளத்தொளியாகும். பண்பொளியே இன்பொளியாகும். அறிவொளியே சீரொளியாகும்.
  
பார்வதியே! வானே! இனிப்பே! தேனே! வாழ்வு தேயாத வண்ணம் பெருமையை எனக்குத் தருவாய்.
  
மானே! தேறுகின்ற நல்லுரை வழக்கும் என் வாய்மொழி மலராக மணக்க, அறிவேணியும் காக்கின்ற வேலியும் அளிப்பாய்.
  
முன்வினையால் விளையும் விதியை மாற்றி என்னைக் காப்பாய். உன்னை மகிழ்ந்து ஓதுகின்றேன். உயிர்களின் தாகத்தைத் தீர்க்கும் ஆறே! தமிழைப் படித்துப் படித்துப் பொன்னாக மின்னுகின்ற என்னுடைய அழகிய மனத்தை விளக்காக ஏற்றுகிறேன். தாயே! என்னிதயக் வீட்டில் எழுந்தொளிர்கவே.
  
காமாட்சியம்மன் விளக்கு அடிப்பகுதி 17 கட்டங்களும், அதற்கு மேலே 15, 13, 11, 9, 7, என்ற கணக்கில் கட்டங்களும், மீண்டும் 9, 11, 13, 15, 17 என்ற கணக்கில் கட்டங்களும், மேற்பகுதியில் அரை வட்டமாக உள்ள விளிம்பினைப் பக்கத்திற்கு 12 கட்டங்களும், மேல் அரை வட்டத்தைத் தாங்கும் இடத்தில் 4 கட்டங்களும் கொண்டு இவ்வோவியம் அமையும்.
  
இப்பாடல், விளக்கின் அடியின் இடப்பக்கத்தில் தொடங்கி நேரே சென்று மேலேறி, நேரே சென்று மறுபடியும் மேலேறி, நேரே சென்று இவ்வாறே இடப்பக்கம் வலப்பக்கம் என மாறி மாறி மேலேறி விளக்கின் சுடரொளிரும் மேற்பகுதியில் வலப்பக்க இறுதிக் கட்டத்தை அடைந்து, அங்கிருந்து மீண்டும் வந்த வழியே திரும்பி மேல் கட்டங்களின் இடது இறுதிக் கட்டத்தை அடைந்து, விளக்கின் அரைவட்டத்தைச் சுற்றி, பாடலின் இறுதியடியின் முதல் எழுத்து விளக்கின் மேல் நுனியிலும், இரண்டாம் எழுத்துச் சுடரிலும், அடுத்துள்ள எழுத்துக்கள் கீழே இறங்கி இறுதிவரை உள்ள கட்டங்களில் அமைவதைக் காணலாம். செய்யுள் 203 எழுத்துக்களைப் பெறும், ஓவியம் 171 எழுத்துக்களைப் பெறும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
10.11.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire