dimanche 16 avril 2017

வெண்பா மேடை - 45



கரந்துறை வெண்பா

நிறைமொழி சூட்டி நிலமோங்கும் பெண்ணே!
மறைமொழி காட்டிமகிழ் மாதே! - துறைமொழி
யாளே! உயர்மாந்தர் ஏத்தும் பெருமையளே!
நாளே சுடர்விடும் நன்கு!

ஒரு செய்யுளில் மற்றொரு செய்யுள் மறைந்திருப்பது கரந்துறை செய்யுள் என்னும் மிறைக்கவியாகும். [மிறைக்கவி - சித்திரகவி]

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

இந்தக் குறளில் உள்ள அனைத்து சீர்களும் மேலுள்ள வெண்பாவில் மறைந்திருக்கிறது.

கண்டுகண் சொக்குதடி! காதல்மொழி கேட்டுமது
உண்டு கிடக்குதடி! பண்ணறியும் - ஒண்தொடியே!
இன்பம் உளமுயிர்த்து ஏங்குதடி ஐம்புலனும்!
அன்புற்றுப் பெண்ணே அணை!

இந்தக்  கரந்துறை வெண்பாவில்

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள!

என்ற குறட்பா மறைந்துள்ளது.

குறட்பா ஒன்று மறைந்திருக்கும் வண்ணம் கரந்துறை நேரிசை வெண்பா  பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.04.2017

1 commentaire:

  1. கரந்துறையை சொற்களிலும் தொடர்ந்து, எமது முக நூலாகிய செயல்மன்றத்தில் பதிந்து வருகிறேன் .
    கருத்துக்களை எதிர்பார்க்கும் அன்பன் ,
    தங்கவேலு சின்னசாமி .

    RépondreSupprimer