jeudi 27 avril 2017

கவியரசர் - பகுதி

கவியரசு கண்ணதாசன் விழா [ பகுதி - 3]
கவியரங்கம்
[தலைமைக் கவிதை]
 
நிறைவு கவிதை
 
வட்டிக் கணக்கெழுதி வாழ்க்கை நடத்துகின்ற
செட்டியார் குடும்பத்தின் சீரொங்க வந்தகவி!
பட்டியெனும் தொட்டியெலாம் பாட்டு மணவீசக்
கட்டு மலராகக் கவிதைகளைத் தந்தகவி!
கொட்டும் மழையாகக் கோலத் தமிழ்மொழியை
இட்டு மகிழ்ந்திடவே இங்குதித்த வல்லகவி!
 
துட்டுக்குப் பாடியதும் மெட்டுக்குப் பாடியதும்
பொட்டுச் சுடராகப் பொலியும் திரையுலகில்!
 
எட்டுத் திசைகொண்ட இயற்கையெழில் கைவிரல்
கட்டுக்கு வந்து கவியாகி ஒளிவீசும்! [10]
 
பிட்டுக்கு மண்சுமந்த பெருமான் கவிதைகளும்
கட்டித் தயிருண்ட கண்ணன் கவிதைகளும்
எட்டிநமைப் போக்காமல் இன்பம் அளித்தனவே!
 
புட்டிதரும் போதையில் புரண்டு கிடந்தாலும்
குட்டிதரும் போதையில் கூடிக் கிடந்தாலும்
பட்ட சுகம்யாவும் பாட்டாக மலர்ந்துவரும்!
கெட்ட மனத்திற்குக் கொட்டியே புத்திதரும்!
 
முட்டும் பகைவரும் முத்தையா பாட்டுக்குச்
சட்டென்[று] அடங்கிச் சரண்புகுந்து சுவைத்திடுவார்!
 
கட்டில் குமரிக்கும் தொட்டில் குழைந்தைக்கும் [20]
அட்டில் அமுதாக அளித்திட்ட அரும்பாக்கள்
சுட்டபொன் னாகச் சுடரேந்தி மின்னினவே!
 
பட்டியின் காட்டானும் பட்டணத்து மாந்தனும்
பட்டதுயர் போக்கும் மருந்தாகும் பசும்பாக்கள்!
 
சட்டியே சுட்டதுவும் கைநழுவி விட்டதுவும்
ஒட்டியே உறவாடி உணர்வூட்டும் வாழ்வுக்கு!
பட்டை அடித்தவனும் பட்டை அடித்தவனும்
மொட்டை அடித்தவனும் கொட்டை தரித்தவனும்
சட்டை இழந்தவனும் சந்தி சிரிச்சவனும்
மட்டையென வாகி மயங்கிக் கிடப்பாரே! [30]
 
ஒட்டுத் துணியோ[டு] உழல்கின்ற ஏழைக்கும்
பட்டுத் துணிமேல் படுத்துறங்கும் செல்வர்க்கும்
ஒட்டி உறவாடக் கவிதைகளைத் தந்தவனே!
 
பெட்டிக் கடைக்காரர்! பேரிக்காக் கடைக்காரர்!
தட்டிக் கடைக்காரர்! தங்கக் கடைக்காரர்!
மட்டிக் கடைக்காரர்! மணக்கும் மலர்க்காரர்!
சட்டிக் கடைக்காரர்! சாறு கடைக்காரர்!
வட்டிக் கடைக்காரர்! வளையல் கடைக்காரர்!
வெட்டும் கடைக்காரர்! ஒட்டும் கடைக்காரர்!
தட்டும் கடைக்காரர்! முட்டும் கடைக்காரர்! [40]
பட்டுக் கடைக்காரர்! பொட்டுக் கடைக்காரர்!
தட்டுக் கடைக்காரர்! தகரக் கடைக்காரர்!
கட்டி உறவாடும் காதல் சுகமாகத்
தட்டிச் சுவைக்கின்ற தமிழிசையைத் தந்தவனே!
 
எட்டி உதைத்தவனும் இன்னல் கொடுத்தவனும்
தொட்டுச் சுவைக்கின்ற இன்னிசையை ஈந்தவனே!
 
சிட்டுக் குருவிக்கும் சிங்கார மயிலுக்கும்
அட்டிகை போல்தமிழை அணிந்து மகிழ்ந்தவனே!
 
கிட்டிய செல்வத்தை விட்டுத் தொலைத்தாலும்
கட்டிய கவியோடு களித்திங்கு வாழ்ந்தவனே! [50]
 
பட்டம் பதிவிக்கே சுற்றும் உலகத்தின்
கொட்டம் அடங்கிடவே கூவிக் கொதித்தவனே!
 
திட்டம் அறியாமல் திரிகின்ற என்றனுக்குச்
சட்டம்உன் வரலாறு! தாழ்ந்து பணிகின்றேன்!
 
வட்டமெனும் மேடையிலும் வானளந்த மேடையிலும்
கொட்டும் மலர்மழையில் கோலப் புகழ்மழையில்
கட்டுமென் பாக்கள் களித்தாட வேண்டுகிறேன்!
எட்டுத் திசைகளிலும் என்கவியைப் போற்றிடவே
பட்டுப் பளபளப்பைப் பழங்கொண்ட நல்லினிப்பை
இட்டு மகிழ்வாய் எனக்கு! [60]
 
அன்பரசி கவிதையைக் குறித்து
குருவாம் என்றன் கொழுத்த கால்களைத்
திருவாய் எண்ணித் தியானம் செய்து
தொட்டுத் தொழுது கூட்டிய கவிதை
பட்டுக் கவிதை! பசுந்தேன் கவிதை!
ஆனால்
மாலின் அடியை மனத்தால் வணங்கு!
ஆளின் அடியை ஆழ்ந்து வணங்கும்
காலம் இனிமேல் கனவிலும் வேண்டாம்!
ஞாலம் துாற்ற நம்மண் ஆளும்
அரசியல் தலைவர் அனுதினம் அனுதினம்
வளைந்து வளைந்து வடிவை இழந்தார்!
குனிந்து குனிந்து குள்ளம் ஆனார்!
இனிமேல் தமிழர் யாருடைப் பாதமும்
வணங்கா திருக்க வகையாய்ச் சட்டம்
இனமுயர் வண்ணம் இயற்ற வேண்டும்!
புன்மை நீங்கிப் வன்மை அடைய
என்றன் மொழியை ஏற்பாய் பெண்ணே!
 
காவியத் தாயின் மைந்தன்!
  கமழ்ந்திடும் காதல் மன்னன்!
ஓவியம் போன்றே பாக்கள்
  ஒளிர்ந்திடத் தந்த தாசன்!
மேவிய புகழை இங்கு
  மீட்டிய சுமதி வாழ்க!
பாவியப் பெண்கள் போன்று
  பார்புகழ் பெற்று வாழ்க!
 
மலர்வாணி கவிதையைக் குறித்து
 
முன்தலை முழுமதி! பின்தலை பேரரண்!
உன்தலை ஆசைக்கு அளவும் உண்டோ?
என்றன் தலையை வைரம் என்றாய்!
மின்னும் வைரமாய் எண்ணிப் பல்லோர்
என்றன் தலையை ஏலம் கேட்பார்!
நன்றே பெருத்த நற்றலை என்பதால்
ஏலம் விட்டே ஏறும் பணத்தால்
கோலம் கொள்வாள் என்குண சுந்தரி!
 
வாணி நீ.என் எழுத்தாணி ஆனால்
காணிப் பயிர்போல் கவிதை செழிக்கும்!
கலைமகள் நீ.என் கைப்பொருள் ஆனால்
அலைகடல் கூட என்கை அடங்குமே!
 
திருச்சுழி ஏந்தும் கையன்
  தேமலர்த் தாள்கள் போற்றி
அரும்மொழிப் பாடல் தந்த
  அணிமலர் வாணி வாழ்க!
பெரும்பொழில் தமிழைப் பேணிப்
  பீடுயர் வாழ்வைக் காண்க!
வரும்வழி வாழ்த்துப் பாட
  வளர்புகழ் பெற்றே வாழ்க!
 
அருணாசெல்வம் கவிதையைக் குறித்து!
 
தலைவா உன்றன் தலையை வாரித்
கலையாய்க் சீவச் கமழ்முடி இல்லை!
என்றன் மீதே என்ன கோபம்?
ஒன்றும் இல்லா மண்டை என்றே
இன்று பல்லோர் முன்னே சொன்னாய்!
அன்பில் சிறந்த அருமைக் கவியாய்
உன்னை எங்கும் உரைத்து மகிழ்வேன்!
இன்றேன் மாற்றம்? ஒன்றும் அறியேன்?
 
சீவி விட்டே சிரிக்கும் செயலும்,
ஏவி விட்டே ஏய்க்கும் செயலும்,
ஆவி விட்டே அடிக்கும் செயலும்,
தாவித் தாவித் தாண்டும் செயலும்,
கூவிக் கூவிக் குழப்பும் செயலும்,
அறியா என்றனுக்[கு] அழகை ஏந்தி
நெறியாய்த் சீவ நீள்முடி இல்லை!
ஊன முடிகள் உதிர்ந்து போயின!
ஞான முடியை நற்றமிழ் தந்தாள்!
பாட்டின் அரசாய்ப் பாராண் டிங்கே
யாப்பின் முடியை ஏந்துமென் தலையே!
 
வண்ணம் மின்னும் தமிழேந்தி
  வடிவாய் மின்னும் நடையேந்திக்
கண்ண தாசன் கவிதைகளின்
  கடமை அழகை வடித்திட்டார்!
உண்ணும் தேனார் சுளையாக
  உரைத்த கவிகள் இனித்தனவே!
எண்ணம் மின்னும் கவியருணா
  இன்பத் தமிழ்போல் வாழியவே!
 
கவிப்பாவை கவிதையைக் குறித்து!
 
என்றன் நெஞ்சைத் திறந்திட்டால்
  இன்பத் தமிழே இருக்குமென
அன்பின் நிறைவால் கவிபாடி
  அடியேன் உயிரைக் குளிர்வித்தாய்!
என்புள் ஓடும் குருதிக்கே
  உன்றன் பாடல் உரமூட்டும்!
நன்றே யாப்புக் கலைகற்று
  நாடு போற்ற வாழியவே!
 
கம்பன் இடத்தில் கவியரசர்
  காதல் கொண்டு வாழ்ந்ததையும்!
செம்பொன் இராமன் சீரடியைச்
  செப்பி நாளும் மகிழ்ந்ததையும்
இம்மண் உணரும் வண்ணத்தில்
  இசைத்த பாவை வாழியவே!
அம்மன் அருளால் தமிழ்ச்செல்வம்
  அடைந்து வாழ்க பல்லாண்டே!
 
வாழி! வாழி! வாழி
 
கவியரசர் நற்புகழைப் படைத்தோர் வாழி!
  காதுக்குள் கவியமுதைக் கொண்டோர் வாழி!
புவியரசர் போன்றிங்குத் தமிழைக் காக்கப்
  பொற்புடனே பணியாற்றும் தொண்டர் வாழி!
சுவையரசு செய்கின்ற கவியை, வண்ணச்
  சுடர்விழியால் பேசுகின்ற பெண்கள் வாழி!
தவமரசு செய்கின்ற தமிழ்த்தாய் வாழி!
  தழைத்தோங்கித் தமிழனத்தார் வாழி! வாழி!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
23.04.2015

Aucun commentaire:

Enregistrer un commentaire