வாணிதாசன் பாடல்களில்
(புரட்சி - எழுச்சி - மலர்ச்சி - மகிழ்ச்சி)
தலைமைக் கவிதை
தமிழ் வணக்கம்
அருள்பொங்கும்! அறம்பொங்கும்! அன்பும் பொங்கும்!
அடுப்பின்மேல் பால்பொங்கும்! அறிவும் பொங்கும்!
பொருள்பொங்கும்! புனல்பொங்கும்! காதல் வீசும்
புன்னகையில் மனம்பொங்கும்! வஞ்சம் என்னும்
இருட்பொங்கும் இடத்தினிலே இழிவே பொங்கும்!
இந்நாட்டில் மதுபொங்கும்! மகிழ்வு பொங்கும்!
பொருட்பொங்கும் வண்ணத்தில் புலமை பொங்கப்
புகழ்பொங்கும் பூந்தமிழே விரைந்து வாராய்!
இறை வணக்கம்
சீர்பொங்கும் திருவரங்கா! இந்த மன்றில்
பேர்பொங்கும் வண்ணத்தில் பெருமை சேர்ப்பாய்!
கார்பொங்கும் மழையாகக் கவிதை பொங்கிக்
கரம்பொங்கும் பேரொளியை முழங்கச் செய்வாய்!
போர்பொங்கும் வேகமெனச் சொற்கள் வேண்டும்!
போர்..அடிக்கச் செய்யாத புலமை வேண்டும்!
பார்பொங்கும் இனிமையினை என்றன் பாட்டில்
படைத்திடவே பரம்பொருளே பறந்து வாராய்!
அவையடக்கம்
பெண்ணுக்கும் பொன்னுக்கும் அடங்குவார் உள்ளார்!
பொருளுக்கும் புகழுக்கும் அடங்குவார் உள்ளார்!
எண்ணுக்கும் எழுத்துக்கும் அடங்குவார் உள்ளார்!
ஏறுகின்ற முதுமைக்கே அடங்குவார் உள்ளார்!
மண்ணுக்கும் மாண்புக்கும் அடங்குவார் உள்ளார்!
மதுவுக்கும் மகிழ்வுக்கும் அடங்குவார் உள்ளார்!
பண்ணுக்கும் பாட்டுக்கும் அடங்கி நிற்கும்
பாட்டரங்க அவையோர்முன் அடங்கு கின்றேன்!
புலவர் வ. கலியபெருமாள்
கவியேறு மருமகனார்! கவிதை வாணர்!
கால்தொட்டு வணங்குகிறேன்! தமிழால் இந்தப்
புவியேறும் வண்ணத்தில் பாக்கள் தீட்டும்
புலமையினை வணங்குகிறேன்! புலவோர் தம்மின்
செவியேறும் வண்ணத்தில் சொற்போர் ஆற்றும்
செம்மையினை வணங்குகிறேன்! இந்த மேடை
சுவையேறும் என்றெண்ணித் தலைமை தந்தார்
சுரக்கின்ற அன்பேந்தி வணங்கு கின்றேன்!
இவ்வூரில் இனியதமிழ்ப் பணிகள் ஆற்றும்
ஈடில்லா நெடுமாறன் வாழ்க! வாழ்வில்
எவ்வூரில் இருந்தாலும் தமிழை எண்ணி
இயக்கமுறும் பிரபுராம் வாழ்க! செல்வச்
செவ்வூரில் வாழ்ந்தாலும் தமிழர் சீரைச்
செப்புகின்ற இம்மன்ற அன்பர் வாழ்க!
சவ்வூறி என்கவியைக் கேட்டு நிற்கும்
சான்றோர்கள் ஆன்றோர்கள் வாழ்க! வாழ்க!!
கவியேறு வாணிதாசனார்!
புதுவைக்குப் புகழ்கொடுத்த வாணி தாசர்!
புதுமைக்குத் தோள்கொடுத்த வாணி தாசர்!
பொதுமைக்குக் குரல்கொடுத்த வாணி தாசர்!
புரட்சிக்கு உளங்கொடுத்த வாணி தாசர்!
எதுகைக்கும் மோனைக்கும் எழிலைக் கோர்த்தே
இணையில்லா நூல்கொடுத்த வாணி தாசர்!
மதுவுக்கும் போதைவரச் சந்தம் சிந்து
வகைபடைத்து வளங்கொடுத்த வாணி தாசர்!
பாவேந்தர் உடனிருந்து பணிகள் செய்த
பாட்டாளி! பண்பாளி! இனத்தைக் காக்க
நாவேந்தர் பலரோடு நட்பு கொண்டு
நடைபோட்ட போராளி! சங்கம் காத்த
மூவேந்தர் அவையினிலே முன்னே நின்ற
முதுநெறியார் போல்வாழ்ந்த நற்சீ ராளி!
பூவேந்திப் புகழேந்திப் போற்று கின்றேன்
பொங்குதமிழ்க் கவியாழி வாணி தாசர்!
புன்னைமரம் பூத்திருக்கும்! புறாவின் கூட்டம்
பொய்யின்றிக் கலந்திருக்கும்! கலத்து மேடு
தன்னைமறந்(து) இசைபடிக்கும்! வானம் பாடி
தமிழறிந்து கவிவடிக்கும்! மீன்கள் துள்ளும்!
அன்னைமனம் தாலாட்டும்! அல்லி முல்லை
அழகூட்டும்! அமுதூட்டும்! எந்த நாளும்
என்னைமறந்(து) இசைக்கின்றேன்! கவிஞ ரேறின்
எழில்விருத்த நூலுக்கே இணையும் உண்டோ?
வயல்வரப்பை வான்வெளியைக் கவியில் தீட்டி
வன்கம்பன் தமிழ்போன்றே இனிமை தந்தார்!
உயிர்ப்பரப்பை நன்றாக உற்று நோக்கி
உவமையுடன் கவிபொழிந்தார்! மரபைக் காத்தார்!
குயிலழகை, மயிலழகைக் குழைத்துத் தந்து
குடிப்புகுந்தார் நம்மனத்துள்! இயற்கை தந்த
உயர்விரிப்பை உளத்துடிப்பாய்ப் பாடி வைத்த
ஒப்பில்லாக் கவியேறு வாணி தாசர்!
தென்னாட்டுத் தாகூர்என்று இயம்பு கின்றேன்!
தேன்தமிழின் புதையலென மகிழு கின்றேன்!
என்..நாட்டுக் கவிஞர்களின் இதயக் கூட்டில்
இனியதமிழ் இசைத்தவரை ஏத்து கின்றேன்!
பன்னாட்டுப் பாவலரும் வியந்து நிற்க
படைப்பாற்றல் பெற்றவரைப் போற்று கின்றேன்!
பொன்னேட்டுக் கவியேறு வாணி தாசர்!
புவியினிலே இயற்கையெழில் புனைந்த நேசர்!
[தொடரும்]
RépondreSupprimerகொஞ்சும் இயற்கையெழில்! கூவும் குயிற்கூட்டம்!
நெஞ்சம் கவர்கின்ற நீர்நிலைகள்! - விஞ்சிவரும்
ஆற்றழகில் ஆழும் அரும்வாணி தாசரைப்
போற்றழகு செய்யும் புவி!
Supprimerவணக்கம்!
போற்றும் புவியென்று பூத்த கவிகண்டேன்!
ஊற்றும் மதுவின் உவப்புண்டேன்! - சாற்றுகின்றேன்
என்மன நன்றியை! இன்றமிழ்ச் செல்வனே
பன்மலர் உன்றன் படைப்பு!
நிகழ்வினைப் பாடி நினைவினில் நின்ற
RépondreSupprimerபுகழ்மிக்க வேந்தன் புகழினைப் பாடினீர்
தேனாய் இனிக்கும் தெவிட்டாத கானத்தில்
மானெனத் துள்ளும் மனம்.
பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.
Supprimerவணக்கம்!
துள்ளி மகிழ்ந்தே தொடுத்த கவிகண்டேன்!
அள்ளி மகிழ்ந்தே அமுதுண்டேன்! - வெள்ளிமலர்
வெண்பா விளைத்தாய்! வியன்தமிழ்த் தென்றலே!
ஒண்பா விளைத்தாய் உவந்து!
மீண்டும் மீண்டும் படித்துக் கிறங்கினேன்
RépondreSupprimerபகிர்வுக்கு தொடரவு நல்வாழ்த்துக்கள்
Supprimerவணக்கம்!
மீண்டும் படித்துவக்கும் மேன்மைத் தமிழழகு
துாண்டும் மனத்தைத் துளைத்து!
ஒவ்வொரு வரிகளும் சிறப்பு ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
ஒவ்வொரு சொல்லையும் ஓதும் மனமுணரும்
வெவ்வேறு பூவின் விளைவு!
வாணிதாசன் வரலாற்றை கவிதையில் பாடும் தொடருக்கு வாழ்த்துக்கள்! நன்றி!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வரலாற்றைத் தாங்கும் தமிழளித்த வாணி
அரும்பேற்றைக் கற்றல் அழகு!
கவிஞர் வாநிதசனின் பாடல்கள் ஒன்றிரண்டை படப் புத்தகங்களில் படித்ததாக நினைவு இருக்கிறது. அன்னாரின் பெருமையை தங்கள் கவி மூலம் அறிந்துகொண்டோம் நன்றி
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
புதுவை புலவர் புகழ்வாணி தாசர்
பொதுமை நெறிகளைப் போற்று!
பாரதி தாசரே இன்று முதல் நீங்கள் வாணி தாசராகவும் ஆனீர்!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
பாவேந்தர் காட்டிய பாதையைக் காக்கின்றோம்!
பூவேந்தும் பாக்கள் பொழிந்து!
செந்தமிழின் சீமையிலே செழித்து நிற்கும்
RépondreSupprimer.........சிறப்புடைய கவியாளன் வாணி தாசர்
சிந்தைமகிழ் நினைவெல்லாம் செதுக்கித் தந்த
.........சீர்கமழும் கவிதையிலே மகிழ்ச்சி பொங்கக்
கந்தமிகுங் காட்டுமலர் அணைக்கும் தென்றல்
.........கண்ணிரண்டில் இதமூட்டிச் சென்றார்ப் போலே
எந்தனது நெஞ்சத்தில் இன்பம் பொங்க
.........எழுதுகிறேன் உயிர்மொளியின் ஏற்றம் கொண்டு !
அருமை அருமை கவிஞர் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு
Supprimerவணக்கம்!
கவியாளர் நம்வாணி தாசர்! கவிகள்
புவியாளும் என்றும் பொலிந்து!
மின்னுபுகழ் ஓங்க மிளிர்ந்த கவித்துவம்
RépondreSupprimerகண்டு மலைத்தேனே குண்டுமல்லி போல்கோர்த்து
வண்டமிழ் மாலை வழங்கி உவப்புற
மேன்மையுறும் வாழ்வுமே லும்!
அருமை கவிஞரே ! மேலும் தொடர என் வாழ்த்துக்கள் ...!
Supprimerவணக்கம்!
கண்டுக் கவிகளைக் கண்டு களிப்புற்றீர்
விண்டுப் புகழை விளைத்து
கவிதை ஊடாக எங்களை நிகழ்விடத்திற்கு அழைத்துச் சென்றுவிடும் தங்களது பாணி போற்றுதற்குரியது. வாழ்த்துக்கள். அண்மையில் விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன், காண வாருங்கள்.
RépondreSupprimerhttp://drbjambulingam.blogspot.com/2015/06/200-5000.html
Supprimerவணக்கம்!
வாழ்த்து மலர்கள் வழங்குகிறேன்! நல்லறிவில்
ஆழ்த்தும் அழகை அறிந்து!
கன்னல் உடன்சேர் கற்கண்டு சொல்லழகுப்
RépondreSupprimerபின்னல் தமிழினிமைப் பூந்தோப்பு - மின்னல்
கிளையுதிர்க்கும் தூறல் கிறுகிறுப்பாய் இன்ப
வளைபடுத்தும் உம்பா வலை.
அருமை ஐயா.
தொடர்கிறேன்.
நன்றி.
Supprimerவணக்கம்!
விறுவிறுப்பு ஊட்டும்! வியன்கவிகள் பாடிக்
கிறுகிறுப்பு ஊட்டும்! கிளைமேல் - சறுசறுக்கு
ஆட்டம் நடத்தும் அணில்நான்! தமிழன்னை
மூட்டும் மொழியென் முதல்!
ஐயா வணக்கம்.
Supprimerஎன் வெண்பாவின் முதல் அடியின் இரண்டாம் சீரான
“உடன்சேர்” என்பதை “உடன்சேரும்” எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.
பிழைக்கு வருந்துகிறேன்.
நன்றி.