vendredi 8 mai 2015

அழகின் சிரிப்பு - பகுதி 2



அழகின் சிரிப்பு - பகுதி 2
(காலையழகு, மாலையழகு, சோலையழகு, சாலையழகு)
தலைமைக் கவிதை

கவிஞர்களைக் கவிபாட அழைத்தல்

காலை அழகு

காலை யழகைப் பாடிடவே
     கவிஞர் சரோசா வருகின்றார்!
சோலை மலராய் இவர்பாக்கள்
     சொக்கச் செய்யும் நம்நெஞ்சை!
மேலை நாட்டில் தமிழ்பரப்பும்
     வேலை இவரின் முதல்வேலை!
ஆலை போன்று தமிழ்நெய்தே
     அவையை அசத்திப் பாடுகவே!

தேனாறு பாய்தோடும்! தீஞ்சோலை பூத்தாடும்!
     தெம்மாங்கு வண்டு பாடும்!
         தென்னாட்டுச் சீரேந்திச் செம்மாந்த நடையேந்திச்
              செய்கின்ற கவிதை ஆடும்!

மானாடும்! மயிலாடும்! மைனாக்கள் பலவாடும்!
     மனங்கொண்ட துன்பம் ஓடும்!
         மதுவூறும் கனியாடும்! மயக்கத்தைத் தந்தாடும்!
              மங்காத மாட்சி சூடும்!

கானாடும் புள்கூட்டம்! கவிபாடும் குயில்கூட்டம்!
     காலைக்கு வாழ்த்து கூறும்!
         கதிரென்னும் தேரோட்டிக் கவிழ்ந்துள்ள இருளோட்டிக்
              கடனாற்றப் பாதை போடும்!

ஊனூறும் வண்ணத்தில் உயிரூறும் எண்ணத்தில்
     உயர்காலை அழகைச் சொல்க!
         நானூறி உண்கின்ற மீனூறும் குழம்பாக
              நன்கீந்து சரோசா வெல்க!

பாடும் கவி.சரோசா வருகவே! - நெஞ்சம்
சூடும் தமிழ்..ரோசா தருகவே!

மாலை அழகு

மயக்கும் மாலை எழில்பாட
     மணக்கும் கவிஞர் வருகின்றார்!
வியக்கும் வண்ணம் இவர்பாட்டில்
     வேகம் இருக்கும் உணர்ந்திடுவீர்!
இயக்கும் இறையின் சீரேந்தி!
     இன்பத் தமிழின் இன்பேந்தி!
தயக்கம் இன்றித் துணிவேந்தி!
     தணிகா வருக அவையினிலே!

கவிதைக்குள் கணக்குகளைப் போட்டு - இவர்
     கட்டிவரும் எழுத்துக்குள் இருக்கும்அதிர் வேட்டு!
         கருத்தாக இருக்குமிவர் பாட்டு - அது
              காரமுடன் சமைத்திட்ட தமிழ்மொழியின் கூட்டு!

சுவையெழுகும் சந்தங்கள் கேட்டு - தூய
     மூளைக்குள் சிறையிட்டுப் போட்டிடுவார் பூட்டு!
         அவைமகிழ மாலையெழில் மீட்டு - தமிழ்
              அருளேந்தி அமுதேந்தி ஆழ்துயரை ஓட்டு!

தணிகா வந்திடுக அவையில் - கவியை
அணியாய்த் தந்திடுக சுவையில்!

சோலை அழகு

சோலை அழகைப் பாடிடவே
     துணிந்து வந்தார் மலர்வாணி!
மாலை வணங்கும் இவர்நெஞ்சம்
     வளமாய் விளையும் தமிழ்க்காணி!
பாலை நிகர்த்த பாக்களையே
     படைக்கும் இவரின் எழுத்தாணி!
சேலை மின்னும் அழகாகச்
     செலுத்த வருக கவித்தோணி!

கற்கண்டுக் கவிகொண்டு கருத்தோடு வருகின்றார்
     கவி.வாணி தாசன் பெயர்த்தி!
         கனியென்ன? கரும்பென்ன? கமழ்கின்ற மலரென்ன?
              கவிபாடித் தருவார் அசத்தி!

சொற்கொண்டு தருகின்ற சுடர்ச்சோலை அழகெல்லாம்
     சுரந்தூறும் தமிழை உயர்த்தி!
         சுகங்காணச் சுவைகாணத் தமிழன்னை நலங்காணத்
              துணிவோடு உழைக்கும் மறத்தி!

நற்றொண்டு புரிகின்ற நம்கம்பன் கழகத்தில்
     நறும்பாட்டுக் கற்கும் பயிற்சி!
         நல்லாற்றல் நனிமேவ நாடெங்கும் தமிழ்மேவ
              நலம்மேவும் உன்றன் முயற்சி!

விற்கொண்டு பகைசாய்த்து நிற்கின்ற திருராமன்
     வியன்தாள்கள் ஊட்டும் வளர்ச்சி!
         விழிகொண்ட தமிழேந்திப் பொழிற்கொண்ட அழகேந்தி
              விளையாடு பூக்கும் மலர்ச்சி!

இளையகவி மலர்வாணி வருகவே! - இனி
இனியகவி நலம்வாரித் தருகவே!

சாலை அழகு

நாட்டில் உள்ள சாலையெழில்
     நன்றே நவில வருகின்றார்
பாட்டில் வல்ல தேவராசர்!
     பசுமைத் தமிழின் சீர்நேசர்!
ஏட்டில் உள்ள இலக்கணத்தை
     என்றும் மறவா திவர்நெஞ்சம்!
காட்டில் மணக்கும் மல்லிகையாய்க்
     கட்டும் கவியுள் தமிழ்..கொஞ்சும்!

நல்ல தமிழ்க்காடு - நம்
தேவராசு கொண்டமனக் கூடு!
வல்ல தமிழ்நாடு - அதன்
வளமெண்ணித் துள்ளிவிளை யாடு!

வெல்லும் குறள்ஏடு - உன்
விழியாக ஏந்தியதைப் பாடு!
சொல்லும் கவி..பீடு - சுவை
சுரக்கின்ற தமிழுக்கே தீடு!

சாலை அழகெண்ணி - இவர்
சமைத்திடுவார் செந்தமிழைப் பின்னி!
சோலை எழில்நண்ணி - இவர்
சூட்டும்பா இளமையொளிர் கன்னி!

ஓடி வரும்பொன்னி - போன்றே
ஓங்கிவரும் உயர்அணிகள் மின்னி!
கோடிப் புகழ்..வன்னி - கொள்கைக்
கோலமொழி தரித்திடுக சென்னி!

கவிஞர் தேவராசு எழுக - இங்குக்
கவியாம் தேன்மழை பொழிக!

[தொடரும்]

21 commentaires:


  1. சந்தக் கவிதைகள் தந்த மகிழ்வுக்கே
    இந்த உலகை எழுதிடுவேன்! - சொந்தமென
    உன்றன் எழுத்தழகை ஓதிக் கவிகற்றேன்!
    என்றன் மனத்துள் இணைத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சந்தக் கவிகண்டு சாற்றிய உன்வெண்பா
      மொந்தை மதுவின் முழுச்சுவையே! - சிந்தையில்
      என்றும் நிலைக்கும் எழுத்தை அளிக்கின்றாய்!
      நன்றுன் கவிதை நடை

      Supprimer
  2. அழகோ அழகு
    சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அழகோ அழகென்று அளித்த கருத்துப்
      பழமோ பனியோ பகர்

      Supprimer
  3. அனைத்தும் அழகு ஐயா... ரசித்தேன்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அளித்த கவிகள் அனைத்தும்அழ[கு] என்றீர்!
      களிக்கும் மனமோ கனிந்து!

      Supprimer
  4. விழா அமர்வுகளை கவிதை நடையிலேயே நடத்தியுள்ள தங்களின் பாணி பாராட்டத்தக்கது, வித்தியாசமானது. பாராட்டுகள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வியப்புறும் வண்ணம் விளைந்ததமிழ் காத்தால்
      உயர்வுறும் வாழ்க்கை ஒளிர்ந்து!

      Supprimer
  5. வணக்கம்
    ஐயா
    ஒவ்வொரு தலைப்பிலும் சொல்லிய கவித்துவம் மிகஅருமையாக உள்ளது இரசித்து படித்து மகிந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கவித்துவம் உள்ள கவிதைகளை நாளும்
      சுவைத்தகம் மின்னும் சுடர்ந்து!

      Supprimer
  6. பன்முறை பாடிப் பயனுற்றேன்! தேன்கலந்த
    இன்னடை என்றே எடுத்துண்டேன்! - நன்னடையில்
    சந்தம் மிளிர்ந்தொலிரத் தந்து மகிழ்துள்ளீர்
    கந்தம் கமழும் கவி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கந்தம் கமழும் கவியென்று கண்டுணர்ந்தே
      எந்தம் எழுத்தை இசைத்துள்ளீர்! - உந்தம்
      உளங்கொண்ட பற்றை உவக்கின்றேன்! வாழ்க
      வளங்கொண்ட வாழ்வை வடித்து!

      Supprimer

  7. Renugadevi Velusamy இனிய வணக்கம் கவிஞர். தமிழ்கொண்டு தீட்டிய சொற்சித்திரம் அகம் முழுக்க அழகோவியமாய்க் காட்சி தருகிறது.அருமை அருமை!!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தமிழ்கொண்டு தீட்டிய தண்ணமுதப் பாவை
      இமைகொண்டு காப்பீர் இனி!

      Supprimer

  8. Asokan Radjou வணக்கம் ! காலையும் மாலையும் கரும்பாய் இனித்தது ! கிராமத்தின் சூழல் கண்முன்னே சிரித்தது ! சோலை சுளை பலாவாய் சுவைத்தது ! சாலை முதற்பாதி சுகம் பாடி ! சரிபாதி நிகழும் சோகத்தை படித்தது ! மொத்தத்தில் அறுசுவை அமுதளித்த ஐயாவுக்கு வாழ்த்துக்கள் .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருஞ்சுவை என்றீர்! அறுசுவை என்றீர்!
      பெருஞ்சுவை என்றீர் பிழிந்து!

      Supprimer

  9. Saran Alagu அழகுச்சோலையில்
    தமிழ்ப் பூக்கள்...
    அழகாய் பூத்தது
    க-விதையில்.
    வாழும் பொழுதே...இதைச் சூடி
    மகிழ்க.
    வண்ணமலர்தான்... நம்
    தமிழ்மணம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அழகாய் மலர்ந்த அருந்தமிழ்ப் பாக்கள்
      விழுதாய் இருக்கும் விளைந்து!

      Supprimer
  10. அசத்தும் உன் புலமை... அது தமிழுக்குக் கிடைத்த பெருமை...
    கவியரங்கத் தலைமை... அதில் காட்டும் திறமை...அருமை...!
    தமிழ்மணம் 10

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அசத்தும் புலமை! அருமை! பெருமை!
      வசமாய்த் தலைமை தாித்து!

      Supprimer
  11. வலைச்சர அறிமுகம் பார்த்து வந்தேன். கவிதைகள் ரசித்தேன் வாழ்த்துகள்

    RépondreSupprimer