mardi 19 mai 2015

ஓரெதுகை வெண்பா!




ஓரெதுகை வெண்பா!

அஞ்சாத செஞ்சியவள்! பிஞ்சிளம் வஞ்சியவள்!
எஞ்சாத மஞ்சுமவள்! பஞ்சமிலாத் - தஞ்சையவள்!
பஞ்சியை மிஞ்சியவள்! மஞ்சத்தில் விஞ்சியவள்!
கெஞ்சியே தஞ்சமிடும் நெஞ்சு!

கட்டழகு கொட்டமிடும்! தொட்டுமனம் வட்டமிடும்!
மொட்டழகு கட்டியெனைச் சட்டமிடும்! - பட்டழகே!
சுட்டுவிழி முட்டியெனை வெட்டவரும்! எட்டியுள
வட்டநிலாத் தட்டோ? உன் பொட்டு!

கட்டிக்கொள் சிட்டென்னை! கட்டழகுப் பெட்டகமே
ஒட்டிக்கொள் பொட்டென்னை! கட்டரும்பே! - தட்டாமல்
முட்டிக்கொள் சட்டென்று! சட்டத்தால் திட்டத்தால்
வட்டி..கொள் பட்டென்று தொட்டு!

18 commentaires:

  1. Réponses

    1. வணக்கம்!

      பேரழகைக் கொண்டுள்ள பெண்போன்று மின்னுமே
      ஓரெதுகை வெண்பா உணர்!

      Supprimer
  2. மெட்டிட்ட பாட்டழகு மீட்டும் நடையழகு
    கட்டி இழுக்கும் கவி.

    ஓரெதுகை கண்டு வியந்தேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கட்டி இழுக்கும் கவியென்று நற்புகழைக்
      கொட்டிக் கொடுத்தீர் குவித்து!

      Supprimer


  3. மலர்சரம் போன்றும் மணிச்சரம் போன்றும்
    நிலவுரம் போன்றும்என் நெஞ்சுள் - நிலைக்கும்
    எதுகை இனிக்கும் எழிற்றமிழ் என்பேன்!
    புதுமைப் புலமை பொலிந்து!

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      அன்பு நிறைந்தோங்கும்! பண்பு படர்ந்தோங்கும்!
      இன்பம் நிறைந்தேங்கும் உன்னெழுத்தில்! - என்நண்பா!
      கொஞ்சும் தமிழைக் கொடுக்கின்ற பாச்செல்வா!
      நெஞ்சம் மகிழும் நினைந்து!

      Supprimer
  4. வணக்கம் !

    சொல்லத்தான் வார்த்தையில்லை சொக்கவைக்கு தப்பனே!
    வெல்லம்போல் இங்கினிக்கும் வெண்பாவும் !-நல்ல
    கவிஞனுனை வாழவைப்பாள் வண்டமிழாள் நாளும்
    புவிமேல்பூக் கட்டும் புகழ் !

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புவிமேல் பொலிக புகழென்று போற்றிக்
      கவிமேல் கருணைக்கண் கொண்டீர்! - செவிமேல்
      அணிந்த நகையாக அந்தமிழ்ப்பா மின்னும்!
      தணிந்த மனத்தினைத் தந்து!

      Supprimer

  5. சின்னயிடை மின்னவிழி முன்னசைந்து நன்னிவரும்
    அன்னமிவள் என்னுயிரின் முன்னலே - என்றென்றும்
    புன்னைவனத் தென்றலிவள் இன்றமிழின் கன்னலிவள்
    புன்னகையும் நன்றுதிர்க்கும் அன்பு !


    வணக்கம் கவிஞர் அண்ணா மூன்றும் முத்தான வெண்பாக்கள்
    படித்து ரசித்தேன் ....அதே படத்திற்கு நானும் எழுதிப்பார்த்தேன் நன்றி
    வாழ்க வளமுடன்
    தம 7

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அன்றே அருங்கவி என்றே உனையழைத்தேன்!
      நன்றே புனைந்தீர் நறுபாட்டு! - குன்றேபோல்
      உன்றன் தமிழாற்றல் ஓங்கிச் செழிக்கட்டும்!
      என்றும் புகழை இசைத்து!

      Supprimer
  6. தங்களது கவிதைகள் எங்களை வேறொரு உலகிற்கே அழைத்துச்சென்று விடுகின்றன. வழக்கம்போல் புகைப்படம் அருமை.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வண்ண

      எதுகை மணக்கும் இனிய கவிதை!
      பொதிகை மணமெனப் போற்று!

      Supprimer
  7. வெண்பா விதையில்
    வார்த்தை சுழற்றியிருகிரீர்கள்...
    அருமை
    தம +

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வெண்பா விதையில் விளைந்த கவிதையிது!
      உண்பால் சுவைதரும் ஊற்று!

      Supprimer
  8. அன்புள்ள அய்யா,

    ஓரெதுகை வெண்பா! அருமையிலும் அருமை. உந்தன் பெருமை!

    த.ம. 10.


    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஓரெதுகை வெண்பா! உயர்சுவை தானேந்திப்
      பேரினிமை கூட்டும் பிணைந்து!

      Supprimer
  9. அடுத்துவரும் ஓரெதுகையால்
    தொடுத்துவர பாப்புனைந்தீர்
    படித்தால் இசையெழுப்பும் - உங்கள்
    ஓரெதுகை வெண்பா!

    RépondreSupprimer