lundi 11 mai 2015

அழகின் சிரிப்பு - பகுதி 3அழகின் சிரிப்பு - பகுதி 3
(காலையழகு, மாலையழகு, சோலையழகு, சாலையழகு)
தலைமைக் கவிதை

நிறைவு கவிதை

காலை அழகு!

எழுகின்ற பொற்கதிர்கள் எழுதும் கோலம்!
     ஏற்றமுடன் குரல்கொடுக்கும் சேவல்! நெஞ்சம் 
தொழுகின்ற திருக்கோயில் பாடல்! தோட்டத்
     தொழுவத்தில் பால்கொடுக்கும் பசுக்கள்! காளை
உழுகின்ற வயல்நாடிச் செல்லும் காட்சி!
     ஒற்றுமையாய்க் கரைகின்ற காகம்! துள்ளி
விழுகின்ற அணில்பிள்ளை! வீசும் காற்று!
     வியன்காலை எத்திசையும் அழகே காட்டும்!

தலைகுளித்துக் குழல்முடியும் காதல் கன்னி!
     தம்மீது பனிமுத்தைத் தாங்கும் புற்கள்!
கலைவிரித்து வைத்ததுபோல் மலர்ந்த காடு!
     கை..குழைத்துத் தருகின்ற கூழு! பச்சை
இலைவிரித்து வரவேற்கும் வாழைத் தோப்பு!
     இன்பூட்டும் கிளிப்பேச்சு! குருவிக் கூட்டம்!
வலைவிரித்து நம்மனத்தைக் கொள்ளை கொள்ளும்!
     விலைகொடுக்க முடியாத அழகே காலை!

மாலை அழகு

பொன்மஞ்சள் முகம்காட்டிக் காதல் பெண்போல்
     புகழ்ப்பரிதி உடல்மறைக்கும்! புவியே மாறும்!
இன்கொஞ்சும் பொழுதென்று பறவைக் கூட்டம்
     இணைதேடிக் கூடடையும்! உழைத்து வந்த
வன்நெஞ்ச மறவர்களின் எண்ணம் எல்லாம்
     வான்மதியின் மேலிருக்கும்! காதல் பொங்கும்!
நன்னெஞ்ச வீட்டுக்குள் செல்வச் செல்வி
     நல்லாட்சி விளக்கெரியும் அழகே மாலை!

மதுகொடுத்து மகிழ்வுற்ற மலர்கள் எல்லாம்
     மனம்மயங்கிச் சாய்ந்திருக்கும்! கொடிகள் கொண்ட
புதுமொட்டு மணமல்லி பெண்ணின் கூந்தல்
     பேயடைய தவமிருக்கும்! குளத்தில் அல்லி
பொதுச்சொத்து வான்மதியை உறவாய் எண்ணிப்
     புன்னகையால் தன்னகத்தைத் திறந்து காட்டும்!
எதுகொடுத்தும் எழில்மங்கை இதயம் புக்க
     இளையவரை விழிப்பூட்டி இனிக்கும் மாலை!

சோலை அழகு!

தேனொழுகும் கவியெழுதத் தென்றல் வீசும்!
     தேவியெழில் முகமாகப் பூக்கள் பேசும்!
ஊனுருகும் வண்ணத்தில் குயில்கள் பாடும்!
     உலாவந்து வண்டினங்கள் மதுவுண் டாடும்!
வானொழுகும் ஒளிர்கதிர்கள் செடியைச் தொட்டு
     வளங்கேட்டுக் கை..குலுக்கும்! துள்ளி ஓடும்
மானிருக்கும்! மயிலிருக்கும்! அழகை ஏந்தி
     மனமிருக்கும் மலர்ச்சோலை அழகின் ஊற்று!

புல்..மெத்தை போலிருக்கும்! புறா இருக்கும்!
     புதருக்குள் முயலிருக்கும்! அமர்ந்து பேசக்
கல்லிருக்கும்! காதலர்கள் மறைவாயச்; சென்று
     கதையெழுத இடமிருக்கும்! கனி இருக்கும்!
பல்லிருக்கும் வடிவாக வழி இருக்கும்!
     பன்மலர்கள் படந்திருக்கும்! கம்பன் பாட்டின்
சொல்லிருக்கும் அமுதாகச் சொக்கச் செய்யும்
     சோலையெழில் புலவர்களின் கவிதை ஊற்று!

சாலை அழகு!

நேர்வழியில் வாழ்கின்ற வாழ்வே சோலை!
     நேர்க்கோட்டில் அமைந்ததுதான் அழகு சாலை!
சீர்நெறியில் கவிபடைக்கும் புதுவை மண்ணில்
     செல்..பாதை சொக்கட்டான் கோட்டை ஒக்கும்!
பார்மொழியில் தமிழைப்போல் இனிமை இல்லை!
     பாரீச்போல் பாதையெழில் எங்கும் இல்லை!
ஓர்மொழியில் உரைக்கின்றேன்! வீதி கொண்ட
     ஒளிவிளக்காய் நாட்டுக்கு நன்மை செய்வீர்!

பாதையிலே ஓடேந்தும் வறியர்! தாலி
     பறிக்கின்ற பெருங்கொடியர்! வேலி ஓரம்
போதையிலே உருளுகின்ற குடியர்! நாற்றப்
     பொருள்குப்பை கொட்டுகின்ற பொடியர்! மேலாம்
கீதையிலே இருக்கின்ற நெறியைக் கற்றும்
     கீழ்மையிலே நடக்கின்ற வெறியர் இன்றி
வாதையிலே செல்லாத ஆட்சி கண்டால்
     சாலையெலாம் சோலையென மணக்கும் என்பேன்!

கவிஞர் சரோசாவின் கன்னல் கவிகள்
புவியிற் பெறுமே புகழ்!
அணியாய் அழகூட்டும்! ஆரமுதை சூட்டும்!
தணிகா அளித்த தமிழ்!

மலர்வாணி பாக்கள் மணம்வீசக் கண்டேன்
நிலம்மீதில் வாழ்க நிலைத்து!

நற்கவி வாணராம் நம்தேவ ராசரின்
பொற்கவி வெல்க பொலிந்து!

நாய்நக்கித் தன்னன்பைக் காட்டும் என்று
     நல்லுரையை நன்களித்தீர்! என்னை எந்தப்
பேய்நக்கும் பாக்கியமும் வாழ்வில் என்றும்
     பிடியளவும் கிடைக்கவில்லை! தமிழாம் இன்பத்
தாய்நக்கிக் கொடுத்திட்ட அமுதை உண்டேன்!
     தமிழரங்கில் தலைமைபெற்றேன்! அறியா இந்தச்
சேய்நக்கிக் கொடுக்கின்ற கவிகள் தம்மைச்
     செவிநக்கிச் சுவைப்போரை வணங்கு கின்றேன்!

மதுகொடுக்கும் சுவையறியேன்! ஒருநாள் கூட
     மதிமயங்கும் நிலையறியேன்! வாழ்வில் இன்பம்
அதுகொடுக்கும் இதுகொடுக்கும் என்றே எண்ணி
     அலைகின்ற கலையறியேன்! மகிழ்ச்சி வேண்டி
பொதுக்கொடுகும் மனைநாடிப் புழுவை போன்று
     புரல்கின்ற பொழுதறியேன்! தமிழைப் போன்று
எதுகொடுக்கும் சுவையென்று வாழ்ந்து விட்டேன்!
     இவ்வுலகின் பாட்டரசாய் ஆட்சி கொண்டேன்!

நீடுபுகழ் நெடுந்தமிழின் அழகைச் சூடி
     நெஞ்சினிக்கக் கவிதந்த கவிஞர் வாழி!
காடுகமழ் மணமுடைய கவிகள் கேட்டுக்
     கையொளியைத் தந்திட்ட அன்பர் வாழி!
பாடுபுகழ்த் தமிழொளிரப் பாட்ட ரங்கைப்
     படைத்திட்ட மன்றத்தார் வாழி! வாழி!!
நாடுபுகழ் பாரதிநான் நன்றி சொன்னேன்!
     நலமோடும் வளமோடும் வாழி! வாழி!!

03.05.2015

17 commentaires:

 1. அழகுக்கு அழகு செய்த விதம்
  மிக மிக அழகு

  RépondreSupprimer

 2. காலைக் கதிரழகை! மாலை மதியழகை!
  சோலை மலரழகை சூட்டினீர்! - சாலையின்
  நேரழகைச் சாற்றினீர்! நேயத் தமிழணங்கின்
  சீரழகைக் காட்டினீர் தேர்ந்து!

  RépondreSupprimer

 3. Mariappan Premanathan அழகின் சிரிப்பு மூன்று பாகமும் வாசித்து மகிழ்ந்தேன். காலை அழகு, மாலை அழகு, சோலை அழகு எல்லோரும் காண்பது. ஆனால் சாலையிலும் அழகு கண்ட கவிதைகள் மிக அருமை.

  RépondreSupprimer

 4. Saran Alagu அழகின் சிரிப்பாய்... மகிழ்ந்தது மனம்
  கவிதைச்சோலையில் வளர்த்தீர் தமிழைச் செழித்து.
  மிக அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். இனிய காலை வணக்கம் தமிழ்ப் பாவேந்தரே...!!!

  RépondreSupprimer

 5. கவிக்கோ ஞானச்செல்வன் அருமை அருமை. தமிழாம் இன்பத்தாய் நக்கிக்கொடுத்திட்ட அமுதை உண்டேன்-அழகு!

  RépondreSupprimer

 6. Renugadevi Velusamy இனிய வணக்கம் கவிஞர். தமிழ்கொண்டு தீட்டிய சொற்சித்திரம் அகம் முழுக்க அழகோவியமாய்க் காட்சி தருகிறது. அருமை அருமை!!

  RépondreSupprimer

 7. Balasubramanian Munisamy காலை எழில் மாலை எழில் சாலை எழில். கற்கண்டாய் இனித்தது உன் கவிதை எழில். சோலை எழில் சொற்கட்டு பாபடிக்கச் சொக்கித்தான் போனேன் வாழ்க குயில்

  RépondreSupprimer

 8. Kavingnar Pasupathy Pachu
  அழகின்சி ரிப்(பு)"பென் னும் தலைப்பில் பூத்த
  அன்னைதமிழ்க் கவியரங்கம் தன்னில் தாங்கள்
  எழில்பொங்கு தலைவராய் யாத்தப் பாக்கள்
  எல்லாமே தேன்சொட்டும் மலரே யாகும்

  RépondreSupprimer

 9. Aroumougam Peroumal
  சொல்வேந்தருடன் கவிவேந்தர் அருமை அண்ணா

  RépondreSupprimer

 10. Tamil Nenjam
  அழகின் சிரிப்பைப் படித்து மகிழ்ந்தேன்! காலை அழகு, மாலை அழகு, சோலை அழகு, சாலையும் அழகு. ஏனாம்? பாட்டரசாய் ஆட்சி கொண்ட பாரதிதாசன் பாடலே மிக அழகு!!! வாழ்த்துகிறேன் வாழி!

  RépondreSupprimer

 11. கவிஞர் சுபபாலா
  கம்பனின் குழந்தையே! கம்பனின் புகழ்பாடப் பிறந்த பாரதியே! தமிழால் புரட்சி செய்யும் பாரதி தாசனே! பாரிசிலும் பாண்டிசேரியிலும் முத்திரை பதித்த முத்தமிழே! உன்தன் ஒற்றை வாழ்த்துக்கு ஒரு கோடி நன்றி ஐயா

  RépondreSupprimer


 12. நிறைவு கவிதைகள் நெஞ்சுள் புகுந்தே
  உறவென ஆடும்! ஒளிரும்! - இறைவனின்
  நல்லருள் பெற்ற நறுங்கவியே! வாழ்கவே
  சொல்லரும் பாக்கள் சுரந்து!

  RépondreSupprimer
 13. நீடுபுகழ் நெடுந்தமிழின் அழகைச் சூடி
  நெஞ்சினிக்கக் கவிதந்த கவிஞர் வாழி!
  காடுகமழ் மணமுடைய கவிகள் கேட்டுக்
  கையொளியைத் தந்திட்ட அன்பர் வாழி!
  பாடுபுகழ்த் தமிழொளிரப் பாட்ட ரங்கைப்
  படைத்திட்ட மன்றத்தார் வாழி! வாழி!!
  நாடுபுகழ் பாரதிநான் நன்றி சொன்னேன்!
  நலமோடும் வளமோடும் வாழி! வாழி!!

  நிறைவு கவிதை! முடித்த இக்கவிதை வரிகள்! அருமை! நலமா?

  RépondreSupprimer
 14. நிறைவுக் கவிதை நெஞ்சத்தில்
  நிறைந்து போனது நித்தியமாய் !

  அருமை கவிஞர் அண்ணா காலை மாலை சோலை சாலை எல்லா அழகும்
  கண்ணால் காண்பதைவிட இந்தக் கவிதையில் காண்பதுதான் அழகாய் இருக்கிறது

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  தம +1

  RépondreSupprimer
 15. தங்களின் நடையில் வழக்கம்போல அருமையாக இருந்தது கவிதை. நன்கு ரசித்தேன். பாராட்டுக்கள்.

  RépondreSupprimer