தமிழா...நீ பேசுவது தமிழா
அன்னையைத் தமிழ்வாயால் "மம்மி" என்றழைத்தாய்...
அன்னையைத் தமிழ்வாயால் "மம்மி" என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை "பேபி" என்றழைத்தாய்...
என்னடா தந்தையை "டாடி" என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைக் கொன்றுதொலைத்தாய்...
- உணர்ச்சிக் கவிஞர் காசி
ஆனந்தன்
எது தமிழ்ச்சொல்? எது அயற்சொல்? பாமரத் தமிழர்கள் பலர் தம் தாய்மொழியின்
பெயர் என்ன என்று தெரியாமல் வாழ்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் உங்கள்
தாய்மொழியின் பெயர் என்ன என்று கேட்டால் "தோ.. பேசறமே இதான்.." என்று மண்மணத்தோடு
பதில் கிடைக்கும். தமிழே உலகின் முதன்மொழி என்பதைக் குறித்தும், தமிழே திராவிட
மொழிகளின் தாய் என்பதைக் குறித்தும், தமிழில் கலந்துள்ள அயற்சொற்களைக் குறித்தும்
அவர்கள் அறிந்திலர்.
நன்கு கற்றவர்கள் வாழ்வில் தாய்மொழியாகிய தமிழ் காணாமல் போவதைப்
பார்த்து வருகிறேன். இன்றைய ஊடகங்கள் தாய்க்கொலையை முன்னிருந்து நடத்துகின்றன. ஆங்கிலம்
கற்றுக்கொள்ள விரும்பினால் இன்றைய தொலைக் காட்சிகளைத் தொடர்ந்து பார்த்துவந்தால்
போதும், ஆங்கில மொழியைத் தானாக நாம் பேசக் கற்றுக்கொள்ளலாம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழில் பிறமொழிச் சொற்கள்
கலந்து தமிழ்போலவே உடையணிந்து கொண்டன. தமிழை அழிக்க வேண்டும் என்று செயற்பட்ட மொழி
அழிந்து போனது என்று நான் எண்ணுவதுண்டு.
எந்த மொழியும் அழிந்துபோகக் கூடாது. இரசியாவைக் கட்டமைத்த
இலெனின் அவர்கள் அந்நாட்டில் வாழ்ந்து வந்த மொழிகளைக் காக்கும் வண்ணம் சட்டங்கள்
செய்தார். மக்களுடைய மொழியிலேயே நாம் (அரசு) பேச வேண்டும் என்ற பொன்மொழியை உலக்கு
அளித்து அந்நாட்டு மொழிகளின் உரிமையைப் பாதுகாத்தார்.
"மெல்லத் தமிழினிச் சாகும்" என்ற அடியைப் படித்த
நாம், மெல்லத் தமிழினி வாழும் என்று பாடியும் ஆடியும் வருகிறோம். மகாகவி பாரதியின்
அடிகளை ஆராய்ந்து இன்றைய தமிழின் நிலையை எண்ணிப் பார்த்தோம் என்றால் அடுத்த
தலைமுறைக்குத் தமிழ் இருக்குமா என்ற கேள்வியே எழுகிறது. தாய்மொழியைக் குறித்த
விழிப்புணர்வு தமிழர்களிடம் இல்லவே இல்லை என்று சொல்லலாம். தமிழைச் சொல்லிச்
சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் வாழ்ந்தார்கள், வாழ்கின்றார்கள், வாழ்வார்கள்.
"தாய் மொழி வளராத நாடு ஒரு நாளும் உரிமை பெறாது. தாய்மொழி நாட்டம் உரிமை நாட்டமாகும். உரிமைக்கு முதற்படி தாய் மொழி ஓம்பும் முயற்சி. தமிழ் நாட்டார் தாய்மொழி மீது கருத்தைச் செலுத்துவாராக" என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க உரைக்கின்றார்.
"தாய் மொழியில் பற்றில்லாதவரையில் தமிழர்கள் முன்னேற்றம் அடைய மாட்டார்கள்" என்று தந்தை பெரியார் அவர்கள் பகர்கின்றார்.
"தாய்மொழியையும் அதிலுள்ள இலக்கியங்களையும் மதிக்காமல் வேற்று மொழிக்குத் தங்களை அடிமையாக்கிக் கொண்டவர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் அளவிற்கு வேறு எந்த நாட்டிலும் இல்லை" என்று தாகூர் மொழிகின்றார்.
தமிழினத்தார் தன் தாய்மொழியைப் பேணுவதை விட அயல்மொழி மீது
ஆசையும் மோகமும் உடையவர்கள். தாம் இன்பமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தாயை மறக்கக்
கூடியவர்கள். ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அந்நாட்டின் மொழியை அழித்துவிடு.
பின் அந்நாடு தானாகவே அழிந்துவிடும் என்பர். தமிழர்களே தமிழை அழிக்கும் பகைவராய்
ஆகிவிட்டனர்.
தமிழர்களால், தமிழன்பர்களால், தமிழ்ப் புலவர்களால், தமிழ்
அறிஞர்களால் நடத்தப்படும் மின்வலைப் பூக்களில் தமிழின் நிலை என்ன என்று ஆராய்ந்து
பார்த்தால் 90 விழுக்காடுகள் அழிவிற்கான வழிகளைக் கண்டுணரலாம்.
என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய வலைப்பூக்களில் பிறமொழிச்
சொற்களின் ஆட்சி அதிகமாக இருப்பதைக் கண்டு அவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல நான் தயங்கியதில்லை.
நண்பர் துளசி அவர்கள் நடத்தும் இதம் என்ற வலைப்பூவைக்
கண்ணுற்றேன். இதம் என்பது வடசொல் என்பதால் கருத்துரையில் பின் வரும் குறளை எழுதி
விளக்கம் அளித்தேன்.
இதம்எனும் சொல்லை இனிமையெனச் சொல்க
மதுரத் தமிழில் மகிழ்ந்து!
இதம் பிறமொழிச் சொல்
இதம் = இனிமை, இன்பம், நன்மை, இசைவு
நல்ல தமிழில் தலைப்பிட்டால் நான்மகிழ்வேன்
வல்ல கவிஞன்என் வாழ்த்து!
மதுரத் தமிழில் மகிழ்ந்து!
இதம் பிறமொழிச் சொல்
இதம் = இனிமை, இன்பம், நன்மை, இசைவு
நல்ல தமிழில் தலைப்பிட்டால் நான்மகிழ்வேன்
வல்ல கவிஞன்என் வாழ்த்து!
தமிழ்ப் பற்றுடைய நண்பர் துளசி அவர்கள், இதம் என்ற தன் வலையின்
பெயரை "மயிலிறகு" என்று மாற்றி அமைத்துள்ளதை இன்று கண்டு துள்ளிக்
குதித்து மகிழ்ந்தேன். அவருக்கு என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
களிக்கின்றேன்.
வலைப்பூக்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவது, பதிவுகளில்
கொச்சை மொழியில் எழுதுவது, தேவையின்றி அயற்சொற்களைக் கலந்து எழுதுவது (சந்தோஷப் புன்னகை, நல்ல ட்யூப் லைட் மாதிரி பிரகாசமாயிடுச்சு) இவையனைத்தும்
தாய்க்கொலைக்கு ஒப்பாகும்.
கடல்பறித்துத் தின்றும்! கனல்பறித்துத் தின்றும்!
இடர்வகுத்துத் தீயோர் இருந்தும்! - சுடராக
மின்னும் தமிழின் வியன்வாழ்வை நம்தமிழர்
இன்னும் உணர்ந்தார் இலை!
மேல் படத்தில் எழுதியுள்ள சொல்விற்பனம் என்பது தமிழா?
நாளைய பதிவில் பார்ப்போம்.
தமிழின் மேன்மை அறியாத தமிழர்கள் மிகுந்து விட்டனர் ஐயா
RépondreSupprimerதம 2
Supprimerவணக்கம்!
தாயை மறந்தவன் வாழ்வு தழைத்திடுமோ?
நாயைத் துரத்துவோம் நாம்!
வெண்பா வேந்தே! தங்கள் உணர்வுகள் உண்மையானவை!
RépondreSupprimerதமிழைச் சொல்லிச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் வாழ்ந்தார்கள், வாழ்கின்றார்கள், வாழ்வார்கள். ! முற்றிலும் இது மறுக்க முடியாத உண்மை!
Supprimerவணக்கம்!
வெள்ளையா் சென்றாா்! விடுதலை பெற்றபின்
கொள்ளையா் சூழ்ந்தாா் கொழித்து!
நல்ல பதிவு ஐயா! தமிழ் அறிந்தவர்கள் என்றாலும், நல்ல தமிழைக் கற்று வருகின்றோம்!. நடைமுறையில் தமிழில் பல அயல் மொழிச் சொற்கள் கலந்து பிறந்த நாள் முதல் பேசியும், கேட்டும் வருவதால்....அப்படியே மனதில் பதிந்து விட்டது! மெதுவாகத்தான் அதை மாற்ற முடியும் என்று தோன்றுகின்றது. முயற்சி திருவினையாக்கும்!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
நல்ல தமிழை நலமுறக் காத்திட்டால்
வல்ல வளம்பெறும் வாழ்வு!
வணக்கம்
RépondreSupprimerஐயா
சரியான அறைகூவல்.. படித்த போது பல தகவலை புரிந்து கொண்டுடேன்.. பகிர்வுக்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
வயலில் வளா்ந்த களைகளைப் போன்றே
அயற்சொல் அகற்றல் அழகு!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerநல்லதொரு விளக்கப் பதிவிடுகை இங்கு கண்டு மகிழ்கின்றேன்.
இந்த அயல்மொழிக் கலப்பு என்னிடமும் இருக்கின்றது. சமயத்தில் இந்தச் சொல் தூய தமிழ்தானா இல்லை அயல்மொழிக் கலப்பா என்று அதைத் தேடுவதிலேயே எனது கால நேரம் அதிகம் செலவாகியுள்ளது. இருப்பினும் கண்டு பிடிக்கவே முடியாமற் போகும் அளவிற்கு இரண்டறக் கலந்து இருக்கும் நிலையெண்ணி வேதனைப்பட்டதுண்டு. ஆயினும் சுட்டிக் காட்டப்படுமிடத்தில் திருத்திக் கொள்கிறேன்.
இன்றைய உங்கள் இப்பதிவு மிக அவசியமானது. அயல்மொழிச் சொற்களின் மயக்கம் எம்மிடம் வரவிடாதிருக்க நீங்கள் தொடர்ந்து இப்படியான விளக்கப் பதிவுகளையும் தர வேண்டும் ஐயா!
தொடரும் ’சொல்விற்பனம்’ பற்றியும் அறிய ஆவல்…
மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!
Supprimerவணக்கம்!
இன்மொழி நம்மொழி! ஈடிலாச் செம்மொழி!
பொன்மொழி என்றதைப் போற்று!
பின்னூட்டம் இடத் தயக்கமாகவே உள்ளது. :)))
RépondreSupprimerமிகவும் சுத்தத் தமிழில் எழுதுவது சற்றுக் கடினமான செயலே. எங்கள் வலைப்பக்கம் பெயரே ஆங்கிலம் கலந்ததுதான். பேச்சு வழக்கில் நிறையவே பதிவுகள் எழுதியும் உள்ளோம்.
Supprimerவணக்கம்!
மாற்றம் வரவேண்டும்! மாறாச் செயற்கண்டு
துாற்றும் உலகம் தொடா்ந்து!
//"தாய் மொழியில் பற்றில்லாதவரையில் தமிழர்கள் முன்னேற்றம் அடைய மாட்டார்கள்" என்று தந்தை பெரியார் அவர்கள் பகர்கின்றார்.// மிக உண்மை.
RépondreSupprimerதேவையான இடுகை.
நீங்கள் சொல்வதுபோல் பதிவர்களில் சிலர் திட்டமிட்டு தமிழை அழிக்கவேண்டும் என்ற நோக்கில் செயல்படுவது பற்றி அறிந்திருப்பீர்கள்.
திரு இராம.கி ஐயாவின் வளவு பதிவை அவருடைய தனித்தமிழ் நடைக்காகவும் அவருடைய தமிழ் சொல் ஆராய்ச்சிக்காகவும் விரும்பி படிப்பதுண்டு. சில ஆண்டுகள் முன்பு போற்றவேண்டிய அவருடைய எழுத்தை சிலர் வஞ்சகமாக எதிர்த்து எழுதினர். அவரும் சரியான பதிலடி கொடுத்து இருந்தார்.
இனி உங்கள் பதிவையும் படித்து உங்கள் பரிந்துரைகளைப் பயன்படுத்திக்கொள்கிறேன். நன்றி.
Supprimerவணக்கம்!
திட்டங்கள் தீட்டியே கொட்டமிடும் தீயவரைப்
பட்டென்று அழிப்போம் பறந்து
RépondreSupprimerகாய்மொழி பற்றிக் களிக்கும் நபா்திருந்த
தாய்மொழி மேன்மையைத் தந்துவந்தீா்! - ஆய்துரைத்த
சீரேற்று வாழ்ந்தால் சிறப்படைவோம்! இல்லையெனில்
பாா்துாற்ற ஏற்போம் பழி!
Supprimerவணக்கம்!
ஊா்துாற்றும்! உண்மை நெறிதுாற்றம்! சுற்றிவரும்
பார்துாற்றும்! பொல்லாப் பழிதுாற்றும்! - கார்துாற்றும்
ஆழி அலைதுாற்றம் அன்னை மொழிமறந்தால்!
ஊழி துயராம் உணா்!
RépondreSupprimerவணக்கம்!
தங்கத் தமிழ்சிறக்கச் சங்கக் குறள்சிறக்க
எங்கும் பிறக்கும் இனிப்பு!
விற்பன்னத்துக்கும் விற்பனத்துக்கும் என்ன வேறுபாடென்பதை தயவு செய்து விளக்கவும், நன்றி.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
விற்பனம் என்றால் அறிவென்க! கல்விமான்
விற்பன்னன் ஆவான் விளம்பு!
உறைக்கும் படியாய் உரைத்தீர் உரக்கவே
RépondreSupprimerநற்றமிழ் காக்கவே நலியும் கவிஞர்?
அந்நிய மொழியின் ஆதிக்கம்
மோகம் அடியோடு அழியட்டும்!
நானும் இதற்கு விதி விலக்கல்ல குற்ற உணர்வில் மனம் வேதனை கொள்கிறது.
சூழ் நிலைகளும் சாதகமாய் அமைந்து விட்டது.
இப் பதிவு அவசியமான ஒன்றே. தொடருங்கள் மாற்றிட வழி வகுக்கும்.
வாழ்த்துக்கள் ஐயா ...!பதிவிற்கு மிக்க நன்றி !
Supprimerவணக்கம்!
அன்னிய மோகத்தில் ஆழ்ந்த தமிழனை
எண்ணிப் படைத்தேன் இதை
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஉயா்திணை முன் வல்லினம் மிகாது. தாய்க்கொலை என்று மிகுத்து எழுதியுள்ளீா். விளக்கம் தர வேண்டுகிறேன்.
மிக்க நன்றி ஐயா!
Supprimerவணக்கம்!
சிறந்த வினாவைத் தொடுத்தமைக்குப் பாராட்டுகள்!
நாளைய பதிவில் விளக்கம் தருகிறேன்!
நல்ல வினாவைத் தொடுத்தீா்! மகிழ்கின்றேன்!
வல்ல மதிக்கெனது வாழ்த்து!
RépondreSupprimerநற்றமிழைக் காக்க நயமாய்க் கருத்தெடுத்துக்
கற்றறிய வைத்தீர்! கரம்குவித்தேன்! – பற்றிருக்கு!
சிற்றறிவில் கற்றதெல்லாம் சிக்கிக் கலந்ததையே!
முற்றறிய சொல்வீர் முனைந்து!
04.08.2014
Supprimerவணக்கம்!
அன்னைத் தமிழிடத்தல் அன்பு மிகுத்தோங்கி
என்னை அளித்தே எழுதுகிறேன்! - என்றென்றும்
பின்னும் படைப்புகளில் மின்னும் தனித்தமிழால்
மன்னும் மகிழ்வு மலா்ந்து!
நல்ல தமிழில் எழுதவேண்டும் அதை
RépondreSupprimerநலமுடனே பகிர வேண்டும்.
நன்றி ஐயா.
Supprimerவணக்கம்!
நல்ல தமிழில் நடைபோட்டால் உன்பெயரைச்
சொல்லும் உலகம் சுடா்ந்து!
வணக்கம்
RépondreSupprimerஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
பார்வையிட முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/10/blog-post_3.html?showComment=1412301499933#c6597964411133375369
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் அய்யா,
RépondreSupprimerஉங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் கோர்த்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்..நன்றி.
வணக்கம்...அற்புதம்...தமிழ் தங்களிடம் கொஞ்சி விளையாடுகிறது
RépondreSupprimer