lundi 25 août 2014

தாய் உள்ளம்'என்றன் தலையின் எழுத்து' என்ற கவிதையைப் பதிவேற்றிய ஐந்தாம் நிமிடத்திலேயே என் இனிய நண்பர் மணிவண்ணன் அவர்கள் தொலைபேசியின் வழியாக என்னை அழைத்தார்! என்ன பதிவிது? ஏன் இப்படி? உடனடியாகப் பதிவை நீக்க வேண்டும் என்று அன்புடன் வாதாடினார். இப்படி அவலச்சுவையுடன் எழுதலாம், தவறன்று! இலக்கியச் சான்றுகளை எடுத்துக் காட்டினேன். சில சொற்களை நீங்கள் நீக்க வேண்டும் என்றார். நண்பரின் அன்பின் மிகுதியை எண்ணி அவர் சொல்லிய வண்ணம் சில சொற்களை மாற்றி அமைத்தேன்.

அடுத்துச் சில நொடிகளில் என் மாணவி இளமதி அவர்கள் அன்புடன் இப்பதிவை நீக்க வேண்டுமெனக் கருத்திட்டார். அவருக்கும் விளக்க அளித்ததேன்.

அடுத்த சில மணி நேரங்களில் ஊமைவிழிகளின் வலைப்பதிவர் பேராசிரியர் கவிச்செல்வர் சோசப் விசி அவர்கள், நான் எழுதிய 'என்றன் தலையின் எழுத்து' வெண்பாக்களின் துயர்நிலை எண்ணி மனம் தாங்காமல் தாயுள்ளம் கொண்டு இன்பச்சுவையும் வீரச்சுவையும் விளைக்கும் வண்ணம் 'உன்றன் தலையின் எழுத்து' என்ற தலைப்பில் பன்னிரண்டு வெண்பாக்களைப் படைத்தார்! கருத்து வளமும் கற்பனை வளமும் நிறைந்த அவ்வெண்பாக்களைப் பன்முறை படித்து இன்புற்றேன். வெண்பா பதினொன்றில்

கண்ணா உனதினிமை காணாதோன் என்கூற?
கண்ட தமிழினிமை போன்றனையோ? – வண்ணமொன்றே
கொண்டிருப்பாய் நீயும்! பல...தமிழில்! அன்றிருந்து
இன்றிருக்கும் எம்மோ டது!

பாட்டின் விளக்கும்

கண்ணா! உன் இனிமையை நான் காணவில்லை. ஆமாம், நீ தமிழ்போல் இனிமையுடையவனோ? கண்ணனே நீ இறைவன் என்ற ஒரு வண்ணத்தைக் கொண்டிருக்கிறாய். உன்னை நாடி வந்தவர்களைக் காப்பாய்! அவ்வளவுதான் நீ! ஆனால் எங்கள் தமிழோ பல வண்ணங்களைக் கொண்டிருக்கிறது. எப்போதும் எங்களுடனே இருக்கிறது.

கவித்துவம் என்ற சொல்லுக்கும் பொருளைக் கவிச்செல்வரின் பாக்களில் கண்டு உவந்தேன்! படிப்போர் உள்ளத்துள் நிலையாய் இருக்கும் அந்த வெண்பாக்களையும் அவைகளை உள்வாங்கி நான் எழுதிய பதில் வெண்பாக்களையும் இங்குக் காலத்தின் பதிவாக்குகிறேன்.

உன்றன் தலையின் எழுத்து!

1.
விந்தை புரிகின்ற சிந்தை விதிசெய்ய
நொந்த மொழிநூற்கும் நுண்புலவன்எந்நாளும்
அன்றில் தமிழ்விட் டகலாது வாழ்வதுவே
உன்றன் தலையின் எழுத்து!

2.
கண்ணில் கலந்தவளைக் காதல் மொழிந்தவளை
மண்ணிலறி வூட்டி மகிழ்ந்தவளைஎண்ணமெலாம்
என்றும் தொழுதேத்த ஏக்கம் மிகக்கொண்ட(து)
உன்றன் தலையின் எழுத்து!

3.
பள்ளிப் படையாகிப் போனார் பெருவேந்தர்!
கொள்ளிவாய்ப் பட்டுதிர்ந்தோர் கோடியுளர்! – தெள்ளுதமிழ்
என்றும் வழங்கிடவே நின்றன் புகழ்நிறுத்தல்
உன்றன் தலையின் எழுத்து!

4.
கல்வி மணக்காதோ கற்கண்டுச் சொற்சுவையில்?
எல்லா மினிதமிழில் ஆகட்டும்! – அல்லாமல்
கொன்று விடமுயல்வோர் கோறல்அதுவன்றோ
உன்றன் தலையின் எழுத்து

5.
அண்ணன் அவன்தம்பி அன்னை அருந்தந்தை
மண்ணில் தமிழையெவர் மாசுறுத்த? – புண்ணாயின்
நன்று! குணப்படுத்து!‘ அன்றேல்அழியென்றல்
உன்றன் தலையின் எழுத்து!

6.
உண்மை அறியா உறவெதற்கு? காணார்க்குக்
கண்மை இழுத்துவிடுங் கோடெதற்கு? – அண்மைவாழ்
கன்றாதல் தாய்தமிழின் காதல் நிதம்பருகல்
உன்றன் தலையின் எழுத்து!

7.
உடனிருந்து காக்க உயிர்த்துணையாய் உள்ளீர்
நடமிடுமே நந்தமிழ் நன்றாய்! – “கடன்பட்டேன்
என்றன் மகவிற்கே“, என்று தமிழ்சொல்லல்
உன்றன் தலையின் எழுத்து!

8.
சோற்றுக்கு வாழ்ந்துடல் வீழுங் கொடும்புன்மைச்
சேற்றுக்குள் நீவீழ மாட்டாதேவேற்றுமொழி
நின்று தமிழழிக்க நின்மார் பதைத்தாங்கல்
உன்றன் தலையின் எழுத்து!

9
நம்பி! வருகவென நற்றாய் அழைத்திருக்க
வெம்பி உளம்சோர வீழுவையோ? – அம்புலியும்
குன்றும்! ஒளிவேண்டிக் கூடவரும் இன்றமிழே
உன்றன் தலையின் எழுத்து!

10.
ஓரடி சொல்உடனே ஓரா யிரம்வெண்பா
ஓராது செய்யவலான் உள்ளனெனத்தீராது
கன்னல் தமிழினித்துக் காதல் புரிவதுதான்
உன்றன் தலையின் எழுத்து!

11.
கண்ணா உனதினிமை காணாதோன் என்கூற?
கண்ட தமிழினிமை போன்றனையோ? – வண்ணமொன்றே
கொண்டிருப்பாய் நீயும்! பல...தமிழில்! அன்றிருந்து
இன்றிருக்கும் எம்மோ டது!

12.
வெஞ்சமர் செங்குருதி கொஞ்சுதமிழ் கேவியழ
மஞ்சத் துறங்கும் மறத்தமிழர்நெஞ்சிறங்கப்
பஞ்சமிலா செஞ்சொல் படைக்கின்றாய் நின்பணிதான்
பஞ்சிற் கனலின் பொறி

பேராசிரியர் 
கவிச்செல்வர் சோசப் விசி
23.08.2014
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 

அன்பால் மலர்ந்த வெண்பா
 
1.
அன்னைத் தமிழோடு அடியேன் உயிர்கலந்து
என்னை மறந்தே எழுதுகிறேன்! - முன்னைப்
பிறப்பின் பயனென்பேன்! பெற்றஎன் பெற்றோர்
சிறப்பின் பயனென்பேன் தேர்ந்து!

2.
கண்ணில் கலந்தவளை! காதல் பொழிந்தவளை!
பண்ணில் படைத்துப் பரவுகிறேன்! - மண்ணில்
முதன்மொழி நம்மொழியே! முத்தாய் மிளிரும்
அதன்னெறி காப்பேன் அகத்து!

3.
பள்ளிப் படிப்பென்ன? பட்டம் நிறைந்தென்ன?
அள்ளி அளிக்கும் அறிவென்ன? - தெள்ளுதமிழ்ப்
பற்றிலா வாழ்வு பயன்தருமோ? என்பாக்கள்
நற்பலா நல்கும் நலம்!

4.
கற்கண்டு சொல்லுண்டாம்! கன்னல் கவியுண்டாம்!
நற்றொண்டு மின்னும் நடையுண்டாம்! - விற்கொண்டு
பொல்லாப் பகைவரைப் போக்கும் திறமுண்டாம்!
எல்லாம் தமிழின் இயல்பு!

5.
அண்ணனெனத் தம்பியென அன்பு மழைபொழிந்து
வண்ணத் தமிழ்வளர்க்கும் வாணர்களைத் - திண்ணமுடன்
நான்பெற்றேன்! நல்லோர் உறவுற்றேன்! மென்கவலை
ஏன்பெற்றேன் தாயே இயம்பு?

6.
தாயின் அணைப்பில் தவழ்ந்து வளர்கின்ற
சேயின் திறமை செழித்தோங்கும்! - வாயினில்
உண்மை குடியிருக்கும்! தண்மை மனமிருக்கும்!
வண்மை வளமிருக்கும் வாழ்த்து!

7.
உடனிருந்து காத்திடுவாள்! ஓங்கிவரும் ஊழின்
வடமறுந்து போகவழி வார்ப்பாள்! - மடல்விரிந்த
தாழை மணக்கும் தனித்தமிழாள்! தந்திடுவாள்
வாழை வழங்கும் வளம்!

8.
கன்னல் தமிழில் கலக்கின்ற நஞ்சிதரும்
இன்னல் உணரா திருக்கின்றோம்! - மின்னலெனப்
பாய்கின்றேன் வன்பகைவர் பல்லுடைக்க! எந்நொடியும்
ஆய்கின்றேன் அந்தமிழில் ஆழ்ந்து!

9.
அன்னை அருந்தமிழாள் அன்புடன் என்தலையில்
முன்னைச் சிறப்பின் முடியணிந்தாள்! - குன்றா
இனமானம் கொண்டோங்க என்னைப் படைத்தாள்!
மனமாளும் கொள்கை மணம்!

10.
ஓரடி கேட்டே உயர்தமிழை நான்வணங்கச்
சீரடி அத்தனையும் சேர்த்தளித்தாள்! - வேரடி
யாக விளங்கும் வலிமை எனக்கீந்தாள்!
தாகம் தணித்தாள் தழைத்து!

11.
கண்ணன் தரும்சுவையைக் கன்னித் தமிழ்மிஞ்சும்!
எண்ணம் பறக்குமே எத்திசையும்! - வண்ணமுடன்
சந்தங்கள் வந்தாடும்! சிந்துவுடன் சித்திரமும்
சொந்தங்கள் ஆகின சூழ்ந்து!

12.
ஆசு கவியென்றே அன்பர் எனையழைக்க
பேசும் மொழியாவும் பேரின்பம்! - மாசிடும்
தீய பகைவரைத் தேடியழைத்து அக்கக்காய்
காய விடுவேன் கவிழ்த்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
25.08.2014

12 commentaires:

 1. வணக்கம் !
  மனம் மகிழத் தந்த சிறப்பான வரிகளுக்குப் பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் ஐயா !

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   அன்பின் மிகுதியால் வந்தளித்தீா் ஆரமுதை!
   உன்றன் கருத்துள் உவந்து!

   Supprimer
 2. வணக்கம் ஐயா!

  தாய்உள்ளம் என்றிங்கு தந்தீரே வெண்பாக்கள்!
  நோய்தீர்க்க வந்தநல் நோக்கு!

  காலப் பதிவாய்க் கமழ்கின்ற வெண்பாக்கள்!
  ஞாலத்தின் சீரென்றே நாம்காண்போம்! - மாலன்
  அருளால் மடைதிறந்தீர்! அன்னை மகிழப்
  பெருகிடும் உங்கள் பெயர்!

  உள்ளம் மகிழ்ச்சிக் கடலில் ஆடுகிறது!
  அத்தனை வெண்பாக்களின் பொருளும்
  சொல்வதற்கு இங்கு இடம் போதாதே!...

  ஆழ்ந்து சுவைத்தேன்! மிகச் சிறப்பு ஐயா!

  அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பெருகிடும் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்தீா்!
   உருகிடும் உம்மால்என் உள்ளம்! - அரும்பிடும்
   அன்புக்கு உளதோ அடைக்குந்தாழ்! அந்தமிழின்
   இன்புக்கு உளதோ இணை?

   Supprimer
 3. வணக்கம் கவிஞர் ஐயா!

  உங்கள் வெண்பாக்களும் பதிவும் உணர்த்தும் நட்பு
  எனக்குப் பாண்டி நாட்டுப் புலவர் பிசிராந்தையர்
  சோழ நாட்டரசன் கோப்பெருஞ்சோழனின்
  காணா நட்பினைக் கண்ணில் காட்சியாக
  இங்கு கொண்டு வந்தது!

  அனைத்துப் பெருமையும் அன்னைத் தமிழிற்கே!
  வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கோப்பெருஞ் சோழனைக் கொண்டபிசி ராந்தையை
   நாப்புகழ்ந்து ஏத்துமே நன்கு!

   Supprimer

 4. தாயுள்ளம் தந்த தமிழ்படித்து இன்புற்றேன்!
  தேயுள்ளம் நீங்கித் தெளிவுற்றேன்! - பேயுள்ளம்
  பெற்றவரும் பேணும் பெருந்சுவை பா..படைத்தீா்!
  பெற்ற..அரும் சீாின் பெருக்கு!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கற்றவர் உள்ளம் களிப்புறும்! மாண்புகளை
   பெற்றவர் உள்ளம் பொிதுவக்கும்! - மற்றவர்
   உள்ளம் மகிழ்ந்தாடும்! உண்மை! உயர்தமிழ்
   வெள்ளப் பெருக்கின் விளைவு!

   Supprimer
 5. வாட்ட மகற்றுதமிழ் வான்புகழ வாழுதமிழ்
  கூட்டுங் கவிமுழங்கக் கண்டேனே! -வாட்டமெழக்
  கால்கள் நறுக்கிடு‘‘வாள்‘‘! கண்ணீரும் போக்கிடுவாள்!
  ஆல்போல் தழைப்பாள் அவள்!
  தங்கள் அன்பின் மிகுதியால் என்னைப் பேராசிரியர் என்கிறீர்கள்.
  நான் அதற்குத் தகுதியிலேன்.
  பின்,
  எப்படியோ தங்கள் பாடலின் பெருமிதமும் , போர்க்குணமும் மீண்டெழுந்து
  வந்தமை கண்டு மகிழ்வு!
  நன்றி!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பேராசிாியா் பெயரைக் குறித்து

   தொற்புகழ் காப்பியமும்! தொன்னுாலும்! நன்னுாலும்
   கற்றுளம் ஓங்கிக் கமழ்வதனால்! - நற்றமிழ்ச்
   சீராய்ந்து சொல்லும் சிறப்புகளைப் பெற்றதனால்
   ஆராய்ந் தளித்தேன் அதை!

   Supprimer
 6. பள்ளிப் படிப்பென்ன? பட்டம் நிறைந்தென்ன?
  அள்ளி அளிக்கும் அறிவென்ன? - தெள்ளுதமிழ்ப்
  பற்றிலா வாழ்வு பயன்தருமோ? என்பாக்கள்
  நற்பலா நல்கும் நலம்!

  ஆஹா அருமை அருமை!
  வாயடைத்து நிற்கின்றேன்
  இன் தமிழில் தோய்ந்து!
  ஏதும் சொல்ல வழியின்றி
  வெம்பி அழுகின்றேன்
  வித்தைகள் கற்றிடாது
  வீணானதே என்வாழவும்என!

  நன்றி தொடர வாழ்த்துக்கள் ஐயா ...!

  RépondreSupprimer
 7. இனிய வணக்கம் ஐயா !

  இருபெரும் சான்றோர் இயற்றிய பாக்கள்
  உருகிப் படித்தால் உயர்வே - அருந்தவம்
  போலுங்கள் ஆக்கங்கள் பொங்கிடும் ! எல்லாமே
  வேலுள்ளான் தந்த வரம் !

  அல்லும் பகலும் அறிவூட்டும் நல்லோரே
  செல்லும் இடங்கள் செழிக்கட்டும் - சொல்லழகு
  செந்தேன் தனிச்சுவையாய் சிந்தையிலே உட்புகுந்து
  மந்தநிலை போக்கும் மருந்து !

  என்ன சொல்லி பாவெழுத என்று என் சின்மதியை சீராக்கி எழுதினேன்
  ஐயையோ என்ன ஒரு சொல்லடுக்கு பெருங்கவிகள் இருவரின் பாக்களும்
  வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை மனம் குளிர்ந்து நிற்கின்றேன்

  வாழ்க வளமுடன் வளரட்டும் அன்னைத் தமிழ் !

  RépondreSupprimer