vendredi 1 août 2014

செய்யுள் இலக்கணம் பகுதி - 3இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா!

காடு கமழ்கின்ற கண்கவர் முல்லையென
ஏடு மணக்கவரும் என்னுயிர்ச் செந்தமிழே!
பீடு மிளிர்கின்ற பேற்றுடனே மன்பதையில்
நீடு புகழ்கொண்டு நிற்கும் தமிழ்மகளே!
ஈடே இலாஉன்னை ஏற்காத் தமிழ்மகனைச்
சூடே இலான்என்று சொன்னால் தவறிலையே!
கேடும் உனக்கென்றால் கீழ்மை எமக்கன்றோ?
கூடும் மனமுடையீர் கொல்வோம் தமிழ்ப்பகையே!

அருந்தமிழ் அன்னையின் அன்பமுதை உண்டு
தருங்கவி யாவும் தழைத்தநலம் சூடும்!
பெருங்கவி என்று பெயரோங்கச் செய்யும்!
வரும்பகை கண்டு வருந்தா மனமேந்தி
இருள்வகை நீக்கி இனியவகை காட்டும்!
பொருள்மிகு வாழ்வினைப் போற்றுபுகழ் மாண்பினை
அருள்மிகு ஆட்சியினை அள்ளி அளிக்கும்!
உருகிடும் யாப்பில் உரைத்தேன் உயர்நெறியே! 


பாட்டின் இலக்கணம்

1. ஓரடியில் நான்கு சீர்கள் இருக்க வேண்டும்.
2. எட்டு அடிகள் ஒரே எதுகையில் வரவேண்டும்.
3. முதல் சீரிலும் மூன்றாம் சீர்லும் மோனை அமைய வேண்டும்.
4. அடிதோறும் வெண்டளை அமைய வேண்டும்.
5. அடியின் இறுதிக்கும் அடுத்த அடி முதலுக்கும் வெண்டளை கட்டாயமில்லை.
6. அடியின் இறுதியில் மாச்சீர் வந்தால், அடுத்த அடி நேரில் தொடங்காது.
(மேலுள்ள இரண்டாம் பாடலில் அடியின் இறுதியில் வந்துள்ள 'உண்டு, சூடும், செய்யும், காட்டும், அளிக்கும் என்னும் மாச்சீர் முன் நிரை வந்திருப்பதைக் கண்டுணர்க)


ஆண்டாள் பாடிய திருப்பாவை மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை இவ்வகைப் பாக்களால் ஆனவை.

கவிஞர் கி. பாரதிதாசன்
01.08.2014

28 commentaires:

 1. வணக்கம்
  ஐயா.

  மலைபோல இருக்கும் வார்த்தைகளை
  அலைபோல அள்ளி வீசுயுள்ளீர்கள்
  என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை
  பாடலும் அதற்கான இலக்கண விளக்கம் எல்லாம் நன்றாக புரிகிறது ஐயா.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

  என்பக்கம்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses
  1. உலகம் தழுவிய ஒண்கவிதைப் போட்டி!
   பலரும் பயன்பெறுக! பாடும் - கலைவளர்க!
   இன்பத் தமிழின் எழில்ஒளிர்க! எத்திசையும்
   அன்பு மழைபொழிக ஆழ்ந்து!

   Supprimer
 2. வணக்கம்
  த.ம2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   வாக்களித்து என்னை வளமுறச் செய்தீா்!என்
   நாக்களிக்கும் நன்றியை நன்கு!

   Supprimer
 3. வணக்கம் ஐயா!

  தேடும் இலக்கணம் தேர்ந்து தருகின்றீர்!
  கூடுதே ஆர்வம் குதித்து!

  அருமையான இன்னுமொரு இலக்கண அறிமுகம்.

  உங்கள் பாக்களும் தேனென இனிக்கின்ற சீர்களுடன்
  மிக மிக அருமை ஐயா!

  இந்த இலக்கணத்திற் கமையப் பாவியற்ற முயல்கின்றேன்.
  மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பாடும் இலக்கணத்தைச் சூடும் நிலையுணர்ந்து
   ஏடு மணக்க எழுது!

   Supprimer

 4. மறந்துவரும் பாட்டின் வகைகளைப் பாடிப்
  பறந்துவரும் பாரதியே! உன்னால் - சிறந்துவரும்
  ஈக்கள் சுவைப்பதுபோல் இன்பத் தமிழுண்டு
  பாக்கள் படைக்கும் படை!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பாக்கள் படைக்கும் படையென்று தந்தகவி
   பூக்கள் மணக்கும் பொழிலென்பேன்! - ஈக்கள்
   மலா்நாடிச் சென்றாடும்! வளா்தமிழ் நெஞ்சம்
   நலங்கோடித் தந்தாடும் நன்கு!

   Supprimer
 5. வணக்கம் ஐயா!..

  பெருமுயற்சியாய் ஒன்று இங்கு தருகிறேன்.
  திருத்தத்தினை வேண்டுகிறேன்.
  மிக்க நன்றி ஐயா!

  நாடு நமதாகும் நாளினைத் தாணெண்ணிப்
  பாடு தினமும் பரவசம் மேலாக!
  சூடு சொரணையே சொற்பமும் இல்லையென்றால்
  கேடு! மிகவெட்கக் கேடேயாம்! கேவலமே!
  சாடு வரேயாம்! சகிக்காது கூறுவார்கள்!
  கோடு வரைந்தே குடங்கிக் கிடப்பரென்று!
  ஓடு! விடிவுகாண ஒன்றாய் இணைந்துடனே!
  போடு! எதிரிதலை போகட்டும்! தோல்விகண்டே!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இங்குத் தருகின்ற இன்பத் தமிழெல்லாம்
   பொங்கும் சுவையைப் புலா்ந்து!

   Supprimer

 6. எளிமையான பாவிலக்கண விளக்கம்
  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  படியுங்கள் இணையுங்கள்
  தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
  http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பூக்கள் மணக்கும் பொலிசோலை போன்றது
   பாக்கள் மணக்கும் பதிவு!

   Supprimer
 7. வணக்கம் !
  பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா .

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கவியெழுத வேண்டுமெனில் காரிகையைக் கற்பீா்
   புவியெழுதும் உம்மை புகழ்ந்து!

   Supprimer
 8. வாக்கினில் எந்தமிழாள் வந்துதிக்க வாளினுங்கூர்
  நோக்கினில் தூயகவி நோற்றவுன்றன் ஆற்றலினைப்
  பாக்களிலோ பாட? பழகுதமிழ்ப் பெண்ணாளே
  பூக்களெனச் சூடவரும் பொற்புடையாய்! தாய்மறந்து
  சாக்கடையில் வீழ்ந்தவரைச் சந்தனப் பைங்குழம்பின்
  நாக்கினிக்கும் நன்மைசொல்லி நாடென்றாய்! நாடார்க்குத்
  தீக்குழம்பா கும்உன் திருமொழிகள் ! தென்றல்நீர்
  ஆக்குமர பிற்குள் அடியேனாள் ஆகேனோ?

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   சீர்தொடுத்துப் பாடும் செழுந்தமிழ்ச் சிற்பியே!
   தார்தொடுத்து நின்றாய் தமிழருள் வேண்டியே!
   கார்கருத்து மின்னி மழைபொழியும்! கன்னல்மரம்
   வேர்பெருத்து நன்றே விளைந்தாடும்! நுண்பொருளைக்
   கூா்தொடுத்துத் தீட்டுகின்ற கோலத் தமிழ்பாயும்!
   யார்தடுக்க இங்குள்ளார்? எல்லாம் இறையாணை!
   பேர்தொடுத்து ஓங்கப் பெரும்புகழை நீ..சூடு!
   தேர்தொடுத்து ஓட்டிடுவேன் தேடியுனை நான்வந்தே!

   Supprimer
 9. பாடலோடு வந்த இலக்கணம் அருமை! எளிமையாக புரிய வைத்தமை சிறப்பு! பாடலும் அருமை! நன்றி!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இனிக்கும் இலக்கணத்தை ஏந்தி மகிழ்வீா்!
   நனிக்கும் கவிதை நலம்!

   Supprimer
 10. அருமை ஐயா. இதம் என்னும் தலைப்பை மாற்றி விட்டேன். ஐயா.நன்றி

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   நல்ல செயற்புாிந்தீா்! நன்றி பலகோடி!
   வெல்லும் தமிழை விளைத்து!

   Supprimer
 11. அய்யா இலக்கண விளக்கம் மிக எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது. மிக்க நன்றி அய்யா

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இலக்கண நுால்கள் இருளகற்றும்! கற்பீா்!
   தலைக்கனம் போகும் தகா்ந்து!

   Supprimer
 12. பாடுகின்றீர் பாக்கள் அமைத்து நற்றமிழை
  ஈடு இணையில்லா இன்பம் அதிலமைத்து
  ஐஞ்சுவை கலந்து அமுதெனப் படைத்து
  ஐயமில்லா தமிழ் விருந்தொன்று படைத்தீர் எமக்கு!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பாடும் இலக்கணத்தைப் பற்றிக் களித்திடுவீா்
   பீடும் பெருகும் பிணைந்து!

   Supprimer
 13. பகிர்வுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் கவிஞரே...! தொடருங்கள் முயற்சி செய்கிறேன் புரிந்து கொள்ள.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கற்றிட கற்றிட கன்னல் தமிழினிக்கும்
   நற்றவம் செய்த நமக்கு!

   Supprimer
 14. ஓடி விளையாடி ஓய்ந்தமர்ந்த வேலையிலே
  பாடி பரவசமாய்ப் பக்கத்தில் வந்தமர்ந்தான்!
  ஊடி இருந்ததனால் ஊமைபோல் பேசாமல்
  மூடி அமர்ந்தே முகநகையைத் தான்மறைத்தேன்!
  ”மாடிப் படியருகில் மல்லிகைப்பூ பூத்திருக்கு
  வாடி வதங்கும்முன் வாடி பறித்திடலாம்”
  கோடி கனவுடனே கூப்பிட்ட அக்குரலால்
  நாடி நரம்பும் நடுங்கியதை நானுணர்ந்தேன்!!

  03.08.2014

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பாடிப் படைத்தகவி பாவலன் என்னுள்ளே
   கோடிக் கனவுகளைக் கொட்டிக் குவித்ததுவே!
   ஓடி விளையாடு உயர்தமிழ்ச் சோலையுள்!
   கூடி விளையாடு பூங்குயில் கூட்டத்துள்!
   ஆடி விளையாடு வண்ணமயில் அன்னங்கள்
   தேடி விளையாடு! தென்றல் மணஞ்சூடு!
   நாடி நரம்புகளில் நற்றமிழ்ப் பற்றேற்று!
   வாடி வதங்காதே! வாழ்வை வடித்திடுக!

   Supprimer