mardi 5 août 2014

தாய்க்கொலை - பகுதி 2



தாய்க்கொலை என்ற முன் பதிவிற்குப் பேராசிரியர் தா. சோசப் விஜீ அய்யா  எழுதிய கருத்துரையையும் அதற்கான என் விளக்கத்தையும் அனைவருக்கும் பயன்தரும் எனவெண்ணி இங்குத் தருகிறேன்.

தாமதமாக வருகின்றமைக்குப் பொறுக்க!

இளமதியாரின் அறிதல் வேட்கையும், தங்களின் ஆழ்ந்த விளக்கமும் காணும் போது தமிழில் என்னைப் போன்றவர்கள் செல்ல வேண்டிய தூரம் தெரிகிறது.

தொல்காப்பியப் புள்ளி மயங்கியலின் 63 மற்றும் 64 ஆம் நூற்பாக்களைக் குறித்த ஓர்மையில் சகோதரி இளமதியார் இவ்வினாவைத் தொடுத்திருப்பதாகக் கருதுகிறேன்.

தாயென் கிளவி யியற்கை யாகும்எனச் சொல்கிறது புள்ளி மயங்கியலின் 63 ஆம் நூற்பா. இதற்கு இளம்பூரணரும், நச்சினார்க் கினியரும் தாய் என்னும் கிளவியை( சொல்லை) நிலைமொழியாகக் கொண்டு புணருங்கால் வல்லெழுத்து மிகாமல் இயல்பாகவே புணரும் என்று கூறுவதுடன், அதற்குத் தாய்கை, தாய்செவி, தாய்தலை, தாய்புறம் எனச் சான்று காட்டுவர்.

மகன் வினை கிளப்பின் முதனிலை யியற்றேஎன அதற்கடுத்து வரும் புறனடை நூற்பாவில் தாய் என்னும் சொல் மகன் என்னும் அடையைப் பெற்று அவனது வினையைக் கூறுமிடத்து மட்டுமே வல்லெழுத்து மிகும் என்று உரையாசிரியர் இருவரும் கூறுவர். சான்றாகமகன்தாய்க் கலாம்என்பதைக் காட்டுவர். (மகனுக்கும் தாய்க்கும் கலகம் மூண்ட தமிழ்ச்சமூதாயம் எனச சமூகவியலாளர்களால் பெருக எடுத்தாளப்படுமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சான்றாக இந்த ஒரு எடுத்துக்காட்டு இருந்திருக்கிறது.) எனவே தொல்காப்பிய மூல பாடத்தின் படியும் அதனை அடியொற்றி அமைந்த உரையாசிரியர் கருத்தின் படியும்தாய்கொலைஎன்பதே சரியானதாகும்.  ஆனால் பாவலரேறு பாலசுந்தரம் அவர்கள் கூறும் உரையே இங்கு மிகப் பொருத்தம் வாய்ந்ததாகும்
 அவர்
தாயென் கிளவி யியற்கை யாகு
மதன் வினை கிளப்பின் முதனிலை யியற்றே
என்று மூலபாடத்தைத் திருத்திப் பாடங்கொள்வார் ( யாகு மதன் என்பது உரையாசிரியர் காலத்தில் யாகும், மகன் எனத் திரிந்திருக்கிறது) தாய் என்னும் சொல்லை அடுத்து வரும் சொல் முன் வல்லினம் மிக வேண்டியதில்லை. அதற்கு அடுத்துத் தாய் குறித்த வினையோ வினைப் பண்போ வருமாயின் அங்கு ஒற்று மிகும் எனப் பாவலரேறு பாலசுந்தரம் அவர்கள் உரைப்பது மிக மிகப் பொருத்தமானதாகும். எனவே தாய்க் கொலை, தாய்க் குரல் , தாய்க் கட்சி, என்பது சரியானதாகும்.

முன்னோர் மொழியைப் பொன்னே போல் போற்றுவது தவறென்பதற்கும், யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப் பொருள் காண்பது அறிவென்பதற்கும் சான்றாக இதைக் காண்கிறேன்.

பாவலரேறு பாலசுந்தரனாரின் தொல்காப்பிய உரைகளைப் படிக்க வேண்டிய தேவை தமிழறிஞர்களுக்கு இருக்கிறது என்பதைத் தாய்க்கொலை காட்டுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------

பேராசிரியர் தா. சோசப் விஜீ அவர்கள் எழுதிய கருத்துரையைக் கண்டு வியந்து நிற்கின்றேன். மொழியியலில் அவர் கொண்ட நுண்மான்நுழைபுலம் எண்ணி எண்ணிப் போற்றி மகிழ்கின்றேன்.

சில புணர்ச்சிகள் இரண்டு விதிகளுக்குப் பொருந்திவரும். ஒரு விதியின் படி வல்லினம் மிகும். ஒரு விதியின் படி வல்லினம் மிகாது.

கொக்கு பறந்தது = எழுவாய்த் தொடர் என்பதால் இங்கு வல்லினம் மிகுக்காமல் பலர் எழுதுவர்.

கொக்குப் பறந்தது = வன்றொடர்க் குற்றியலுகரம் என்பதால் வல்லினம் மிகுத்துச் சிலர் எழுதுவர்.

பா படைத்தான் = இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பதால் வல்லினம் மிகுக்காமல் சிலர் எழுதுவர்.

பாப் படைத்தான் = ஓரெழுத்து ஒரு மொழி பின் வல்லினம் மிகும் என்பதால் பலர் மிகுத்து எழுதுவர்.

சாற்று கவி = வினைத்தொகை என்பதால் சிலர் மிகுக்காமல் எழுதுவர்.

சாற்றுக் கவி = வன்றொடர்க் குற்றியலுகரம் என்பதால் வல்லினம் மிகுத்துச் பலர் எழுதுவர்.

இப்படிப் பட்ட இடங்களில் எந்த விதியை நாம் ஏற்றுக்கொள்வது? பெரும்பான்மை வழக்கையும், முதன்மை வழக்கையும் நான் ஏற்றுப் பயன்படுத்துகிறேன்.

மற்றொரு விதியின் படி வல்லினம் மிகுக்க வேண்டி இருந்தாலும் எழுவாய்த் தொடராயின் மிகுக்காமல் எழுதுவதை மரபாய் வைத்துள்ளேன்.
                   கொக்கு பறந்தது

மற்றொரு விதியின் படி வல்லினம் மிகுக்க வேண்டி இருந்தாலும், வினைத்தொகையில் மிகுப்பதில்லை.
                   சாற்று கவி

உயர்திணைப் பெயர் முன் வரும் வல்லினம் மிகாது என்பது பொதுவிதி.

தொல்காப்பியம் தாய் என்னும் உயர்திணைப் பொதுப்பெயருக்குத் தனி நூற்பா தருகிறது.

உயர்திணைப் புணர்ச்சி விளக்கம்

நிலைமொழி உயர்திணையாக வரும் எழுவாய்த் தொடரில் வலி மிகாது.
                   தாய் படித்தாள்

நிலைமொழி உயர்திணையாக வரும் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும்.
                   தாய்க்கொலை

நிலைமொழி உயர்திணையாக வரும் நான்காம் வேற்றமைத் தொகையில் வலி மிகாது.
                   பொன்னி கணவன்

நிலைமொழி உயர்திணையாக வரும் ஆறாம் வேற்றமைத் தொகையில் வலி மிகாது
                   தாய்கை,

நிலைமொழி உயர்திணையாக வரும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையிலும் வலி மிகும்.
                   தாய்ப்பசு

நிலைமொழி உயர்திணையாக வரும் "செட்டித் தெரு" என ஒரோவிடத்து ஆறாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும்.

பாவலரேறு பாலசுந்தரனார் அவர்களின் கருத்து ஆய்வுக்குரியது.

தாய்கை போன்றே தாய்குரல், தாய்கட்சி மிகுக்காமல் எழுத வேண்டும்.

05.08.2014 
 

22 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.
    தமிழ்ப்புலமையில் புகுந்து விளையாடும்.
    தூயதமிழ்கண்டு மகிழ்ந்தேன்
    உமைக்கனவுகள் என்ற வலைப்பூவில் தகவலை படித்தேன் அதைப்போன்று தங்களின் வலைப்பூவிலும் படித்தேன். எழுவாய்த்தொடர். வன்றொடர் குற்றியலுகம் வேற்றுமை உருபுகள் பற்றிய இலக்கணவிளக்கம் மிகச்சிறப்பாக உள்ளது.
    2001ம் ஆண்டு உயர்தரம் படித்த போது .இலக்கணம். தமிழ்இலக்கியம் .உரைநடைத் தொகுப்பு.கம்பராமாயணம் .செய்யுள்கோவை.தென்னிஇந்தியவரலாறு.ஈழத்து இலக்கியவரலாறு பரிமேல் அழகர் உரை எழுதிய திருக்குறள் எல்லாம் படித்தேன் நாடுகடந்து வந்தபின்தான் அதன் தாற்பரியம் விளங்குகிறது ஐயா. இவைகளை ஈடுசெய்ய தங்களின் வலைப்பூ எனக்கு ஒரு புத்தகம் எப்போதும் படிக்கிறேன் ...பகிர்வுக்கு நன்றி.
    மேலும் தொடருங்கள் இலக்கணம் இலக்கியம் சம்மந்தமான பாடப்பரப்பு... காத்திருப்பேன் .படிப்பதற்காக
    த.ம.2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிக்கும் இலக்கணத்தை என்குரு நாதா்!
      கனிபோல் தந்தார் கமழ்ந்து!

      Supprimer
  2. வணக்கம் ஐயா!

    அருமையான இலக்கண விளக்கம். சிறப்பான தேடல்களும்
    நல்ல எடுத்துக் காட்டுகளும்!
    எனக்கு ஆரம்பத்திலிருந்து படித்திட வேண்டுமென
    ஆவலைத் தூண்டுகிறது.

    மிக மிகப் பயன் தரவல்ல பதிவு ஐயா! கற்கின்றேன் தொடர்ந்து!

    உங்களுக்கும் யோசெப்பு ஐயாவுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இளமதி கேட்ட இனியவினா விற்கு
      விளக்கமுற தந்தேன் விடை!

      Supprimer
  3. பெருந்தகையீர்,
    வணக்கம்.
    நான் பேராசிரியனோ தமிழாசிரியனோ அல்லேன்.
    எல்லாரையும் போல் சில பல தவறுகளுடன் தமிழில் எழுதுகிறவன்.
    தமிழின் மரபினைக் காக்க முயலும் தங்களைப் போன்றோரிடத்திருந்து என்றும் கற்கின்றவன். நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதன் தெளிவு புதிய பார்வைக்கு, புதிய கற்றலுக்கு வழிகோலும் என்று உறுதியாக நம்புகிறேன்.
    என் பின்னூட்டத்திலும் பிழைகள் இருந்தன.
    “தாமதமாக வருவதற்கு பொறுக்க“
    என்றே எழுதி இருந்தேன்.
    அதனைச் சரியாகத் தாமதமாக வருவதற்குப் பொறுக்க!
    என வலிமிகுத்துச் சரியாகப் பதிந்துள்ளீர்கள்.
    “அதற்கு தாய்கை“ என்றே என் பின்னூட்டத்தில் உள்ளது.
    தாங்கள் அதை “ அதற்குத் தாய்கை“ என வலிமிகுத்துச் சரியாகப் பதிந்துள்ளீர்கள்.
    “சொல்லாமல் செய்வர் பெரியர்“ எனும் ஔவையின் குரலை நீங்கள் என்னைத் திருத்தியதில் கேட்கிறேன்.
    “தமிழ்ச்சமூதாயம் எனச “ என இருப்பது ‘தமிழ்ச் சமுதாயம்‘ என்றும் ‘எனச்‘ என்றும் மாற்றப்படவேண்டியது தட்டச்சுப் பிழையெனக் கருதித் திருத்திடவில்லை போலும்.
    திருத்திட வேண்டுகிறேன்.
    “எனவே தாய்க் கொலை, தாய்க் குரல் , தாய்க் கட்சி, என்பது சரியானதாகும்.“ என எனது பின்னூட்டத்தில் இருப்பது தவறாகும்.
    “என்பன சரியானதாகும்“ என்றிருப்பினே அங்கு ஒருமைப் பன்மைப் பிழையற்று அமையும்.
    திருத்திட வேண்டுகிறேன்.
    பின்னூட்டப் பகுதியில் நேரடியாகத் தட்டச்சுச் செய்வதால் பின் படித்துப் பார்க்கும் போது பிழைகளைக் களைய வாய்ப்பற்றுப் போகிறது. இனிமேல் கவனமாய் இருப்பேன்.
    வல்லினம் மிகும் இடங்கள் மிகா இடங்களை இலக்கணம் கருதிக் கற்றுக் கொள்வதை விடத் தமிழறிஞர்களாகிய உங்களைப் போன்றோரின் பதிவுகளைப் படித்துப் பார்த்தால்
    சரியெது தவறெது என்கிற உள்ளுணர்வு மனம் பதியக் கூடும்.
    நல்ல தவறற்ற பதிவுகள் , புத்தகங்கள் தமிழில் இல்லாமையும், நம் மொழியில் தவறு செய்தால் அது பற்றிப் பேச, கேள்வி கேட்க ஆளில்லாமையும் மரபை மெல்லச் சீர்குலைக்கின்றன.
    தங்களைப் போன்றோரின் பணியால் தமிழ் வளரும். என் போன்றோர் திருந்துவர்.
    என் தவறுகளைத் தயங்காமல் சுட்டிக்காட்டிட வேண்டுகிறேன்.
    என்னுடைய வளர்ச்சி அதை அறிந்து திருத்திக் கொள்வதில் தான் எப்போதும் இருக்கிறது என்பதை நம்புகிறேன்.
    தங்கள் பால் மாறாத அன்பும், பெருமிதமும், செவி வாயாய் நெஞ்சு களனாய்க் கேட்பவை கேட்பவை விடாதுளத்தமைக்கும் மாணவ ஆர்வமும் என்னிடத்து எப்போதும் உண்டு!
    என் தலைதாழ்ந்த வணக்கங்கள்!
    நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அச்சுப் பிழைகளை ஆய்ந்தறிந்து நன்குரைத்தீா்!
      உச்சி குளிர்ந்தே உரைக்கின்றேன்! - நச்சினாா்
      போன்றே எமக்கு..நீ! பொங்கும் தமிழுணர்வால்
      ஈன்றேன் நனிநன்றி இங்கு!

      Supprimer
  4. ' என்பன சரியானவையாகும்“ எனச் ‘சரியானதாகும்‘ என்பது ‘சரியாவையாகும்‘ எனவும் திருத்தப் பட வேண்டும்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      திருத்தத்தை இங்குத் தெளிவுறத் தந்தீா்!
      பொருத்தமுடன் செய்வேன் பொலிவு!

      Supprimer

  5. மொழியினைக் காக்க முயலும் மனத்தீா்!
    பொழிந்தேன் வணக்கம்! புலமை - வழிந்தோடத்
    தீட்டும் படைப்புக்கள் செம்மை மலா்ந்தாடக்
    காட்டும் வழியைக் கணித்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வண்ணத் தமிழ்ச்செவ்வா! வண்டமிழ்ப் பற்றாளா!
      எண்ணம் இனிக்க எழுதுகிறாய்! - திண்ணமுடன்
      என்றும் இலக்கணத்தில் மின்னும் மனங்கொண்டாய்!
      என்றும் எனக்குள் இரு!

      Supprimer
  6. வணக்கம் கவிஞர் ஐயா !

    என்றோ படித்தும் எனக்குள் மறந்துவிட்ட
    இன்றமிழ் பூக்கும் இலக்கணங்கள் - இன்றிங்கு
    நெஞ்சில் நிறைய நெகிழ்ந்து தொழுகின்றேன்
    தஞ்சமாய் உம்மடி தொட்டு !

    மீண்டும் மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொண்டேன்
    தங்கள் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா

    வாழ்க வளமுடன்
    8

    RépondreSupprimer
    Réponses

    1. நெஞ்சுள் மணக்கும் நெடுந்தமிழைத் தான்அள்ளி
      கொஞ்சிக் களிக்கக் கொடுத்துள்ளேன்! - தஞ்சமெனச்
      சீராளன் வந்துள்ளான்! செந்தமிழை நன்குண்டு
      பாராள வந்துள்ளான் பார்!

      Supprimer
  7. அய்யா வணக்கம். தங்கள் அளவிற்கு நான் இலக்கணம் பயின்றவன் அல்லேன். எனினும் ஒன்று கூற விரும்புகிறேன்- “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்“ என்பது சரிதானே? இலக்கியம் என்பதும் ‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி’ வருவதுதானே? எனில், தமிழ்ப்புலவர் பெருமக்கள் ஒற்று-சொற் பிழைகாணும் அளவிற்கு பொருட்பிழை காண விழைவதில்லையே ஏன்? “சொல்லில் பிழையிருந்தால் மன்னிக்கலாம், பொருளில் பிழையிருந்தால்?” அதுதானே பெரும்பிழைகளுக்கு வழிகோலும்? எனவே, எழுதும் கவிதை, கட்டுரைகளில் “சமுதாய உணர்வற்ற (அ) சமூக உணர்வைப் புறந்தள்ளும் கருத்துகளைக் களையும் முயற்சியே தங்களைப் போலும் தமிழறிஞர்கள் செய்யவே்ண்டுவது” என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். (குற்றியலுகரப் பிழைகள் கவிதைகளில் வருவதைப் பெரிதுபடுத்தாமல் தாங்களே எழுதிவரும் மரபுச் செய்யுள் பலவற்றை நான் கண்டிருக்கிறேன்) இவ்விவாதம் “இலக்கற்றுப் போகிறதோ?” எனும் அய்யத்தில்தான் எழுதுகிறேன். “பாடபேதம், புறநடை, அப்படியும் இருக்கலாம்“ என விவாதம் வளர்வதைக் காட்டிலும் நல்ல சிந்தனைகளை வளர்ப்பது இன்றைய தேவையாயிருப்பதால் இதை எழுதுகிறேன். நம் தமிழ்க் குழந்தைகள் -பெரும்பாலும் தமிழ்ப்பெயர் அற்றுப்போய்- இலக்கற்று வாழும் இன்றைய நிலையில் நோக்கம் நல்லதாக இருக்கவேண்டுவதே இப்போதைய தேவையாக எனக்குத் தோன்றுகிறது.பிழையெனில் மன்னியுங்கள். இலக்கியம் வென்றால் வாழ்க்கையுடன் புதிய இலக்கணமும் தோன்றும். என்றும் தங்கள் தமிழறிவிற்குத் தலைவணங்கும், நண்பன்-நா.முத்துநிலவன்.http://valarumkavithai.blogspot.in/

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      வல்ல தமிழ்ச்சீர் வளர்ந்தோங்க நம்நிலவர்
      நல்ல கருத்தை நவின்றுள்ளார்! - சொல்லுகிறேன்
      என்றன் கவிகளில் குன்றுகரம் வந்தவிடம்
      என்றும் பிழையிலை ஏத்து!

      ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றி!

      நான் கவிதைகளை எழுதும்பொழுது குற்றியலுகரம் இகரங்களைப் புணர்ந்தே எழுதுவேன்.

      பதிவிடும் பொழுது எளிதில் புரியவேண்டிப் புணர்சிகளைப் பிரித்து எழுதுவேன். பிரித்து எழுதிய இவ்விடங்களைக் கண்டு நீங்கள் உரைத்தீர் என எண்ணுகிறேன்.

      என்னிடம் கவிதைக் கலையைக் கற்கின்றவர்களுக்குக் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம் ஆகிய இலக்கணங்களை மிக மிகத் தெளிவாகச் சொல்லித் தருவதை வழக்கமாக வைத்துள்ளேன், என் மாணவர்கள் இடத்தில் கூட இப்பிழைகளை நீங்கள் பார்க்க முடியாது.

      பணியின் சோர்வால், கவனம் குன்றி எங்கோ ஓரிடம் உங்கள் கண்ணில் இனிப்படுமால் உடன் தெரிவித்தால் நன்றி உடையவனாவேன்.

      Supprimer
  8. அருமையான பதிவு பூரண விளக்கங்களுடன். கற்ற ஞாபகங்கள் வந்து போயின. இந்தக் கடலில் நானும் கலந்து கொஞ்சமாக மொண்டு குவளையிலாவது பிடித்துக் கொள்கிறேன்.நன்றி! தொடரவாழ்த்துக்கள் ....!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இலக்கணத் தேனை இனிதே குடித்தால்
      கலக்கம் வருமோ கனத்து!

      Supprimer
  9. சிறந்த இலக்கண விளக்கப் பதிவு
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிறந்த இலக்கணம்! செப்பும் நெறிகளைத்
      திறந்து படைத்தேன் திளைத்து!

      Supprimer
  10. அருமை! பல்வகை இலக்கணங்கள் பயின்றேன் இந்தப்பதிவில்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பல்வகைப் பாக்களைப் பாடும் புலவருக்கு
      நல்வகை காட்டினேன் நான்!

      Supprimer
  11. நல்ல தமிழ் இலக்கணம் கற்கின்றோம்! மிக்க நன்றி ஐயா!

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      நல்ல தமிழின் நறுந்தேன் இலக்கணத்தைச்
      சொல்லச் சுரக்கும் சுவை!

      Supprimer