mardi 22 octobre 2013

வாலியைப் போற்றுவோம் - 2




பாவலர்களைக் கவிபாட அழைத்தல்

பேணித் தமிழைக் காக்கின்ற
     பெருமை பெற்ற சீருடையார்!
காணி நிலத்துக் கவிஞரெனக்
     கவிகள் பாடும் பேருடையார்!
ஏணி யாக இவர்தமிழோ
     இனிமை யுலகுக்(கு) எமையேற்றும்!
வாணி தாசன் மருமகனார்
     வாலி புகழை வழங்குகவே!

புலவர் ஐயா வருகவே!
பூந்தேன் பாக்கள் தருகவே

-----------------------------------------------------------------------------------------------------

நம்மின் இராமன் திருவடியை
     நாடி வணங்கும் சமரசனார்!
எம்மின் நண்பர்! இன்கவிஞர்!
     எல்லோர்க் கினியர்! அருளாளர்!
கம்பன் கழகப் பொருளாளர்!
     கவிஞா் வாலி புகழ்..பேச
இம்மன் றேறி வந்திடுவார்!
     ஈடில் தமிழைத் தந்திடுவார்!

தணிகா சமரசனார் எழுகவே! - கவியைக்
கனியாய்ச் சுவைத்திடப் பொழிகவே!

----------------------------------------------------------------------------------------------------- 

தேன்போல் கவிதை படைக்கின்ற
     தேவ ராசு பாவாணர்!
மீன்போல் கவிதைக் கடலினிலே
     விரைந்து நீந்தும் நாவாணர்!
மான்போல் துள்ளி நாமாட
     மதுபோல் மயக்கிச் சுவைசூட
வான்போல் பொழிக தமிழ்மழையை!
     வாலி வடித்த புகழ்மழையை!

அய்யா தேவராசு - இனிக்கும்
கொய்யா போன்றே கவிபேசு!

----------------------------------------------------------------------------------------------------- 

அன்பிற் சிறந்த பொருளுண்டோ?
     அழகுத் தமிழ்போல் மொழியுண்டோ?
இன்பிற் சிறந்த கவிதைகளை
     இசைக்கும் கவிஞர் சரோசாபோல்
மன்றிற் தமிழை வழங்குகிற
     வண்ண மகளிர் ஒருசிலரே!
குன்றி லிட்ட விளக்காகக்
     கோலம் காணும் இவ்வரங்கே!

கவி. சரோசா வருகவே! - தமிழைச்
செவி குளிரத் தருகவே!

----------------------------------------------------------------------------------------------------- 

வெள்ளை ஆடை அணிந்திங்கு
     வெற்றிக் கொடியை ஏற்றியவர்!
கள்ளை நிகர்த்த போதைதரும்
     கவிஞர் வாலி புகழ்கூறக்
கிள்ளை மொழிசேர் லினோதினியார்
     கீர்த்தி யோடு வந்துள்ளார்!
கொள்ளைப் புறத்துப் பூக்களெனக்
     கொடுக்கும் பாக்கள் மணந்தருமே!

அருமை லினோதினி அவையேறிப் பாடுக!
பெருமை தருங்கவி சுவையேற்றிச் சூடுக!

----------------------------------------------------------------------------------------------------- 

தனித்த தமிழில் உரையாற்றும்
     தன்மை யுடைய பாமல்லர்!
இனித்த கவியின் கருவூலம்
     ஏந்தல் வாலி புகழ்போற்றக்
கனத்த கருத்தைத் தானேந்தி,
     கன்னல் கனியின் சுவையேந்தி
மனத்தை மயக்க வந்துள்ளார்
     மாண்பாய் அழைத்து மகிழ்கின்றேன்!

பாமல்லர் துள்ளி வருகவே! - அரங்கினிக்கப்
பைந்தமிழை அள்ளித் தருகவே!

----------------------------------------------------------------------------------------------------- 

நிறைவு கவிதை

காற்று வாங்கப் போனாலும்
     கவிதை வாங்கும் வாலியினைப்
போற்றும் வண்ணம் பாப்புனைந்தார்
     புலவர் கலிய பெருமானார்!
ஊற்றுச் சுரக்கும்! இவ்வரங்கில்
     உயர்ந்த தமிழும் சுரந்ததுவே!
சாற்றும் உலகம்! இவர்பாட்டுச்
     சங்கத் தமிழின் சால்பேன்றே!

முத்தாய்ப் பாக்கள் மொழிந்திட்ட
     மூத்த கவிஞர் வாலியினைச்
செத்தார் என்று செப்புவதோ?
     சிறந்தார் என்றே உரைத்திடுக!
சொத்தாய் வாலி படைப்புகளைச்
     சூடி மகிழும் தமிழுலகம்!
வித்தாய் வளரும் பாவலர்கள்
     விருந்தாய் உண்டு மகிழ்வாரே!

கலியபெருமானார்! - இங்குக்
கவிதைக் கரும்பானார்!
பொலியும் என்மனத்துள் - மணத்தைப்
புகுத்தும் அரும்பானார்!
 
எளிய நடையில் இருந்தொளிரும்! வல்ல
கலியபெரு மானார் கவி!

----------------------------------------------------------------------------------------------------- 

நரையில் உயர்ந்த நம்வாலி
     நடையில் உயர்ந்த பாட்டளித்தார்!
திரையில் நடிகர் வாயசைப்பார்!
     தரையில் மனிதர் தலையசைப்பார்!
சுரையில் பூத்த பூவழகாய்ச்;..
     சுடரும் வண்ண மணியழகாய..;
மரையில் அமர்ந்த கலைமகளின்
     வரத்தால் தணிகா கவி..கொடுத்தார்!

அணியாய் ஒளிரும்! அமுதைப் பொழியும்
தணிகா படைத்த தமிழ்!

----------------------------------------------------------------------------------------------------- 

வேலன் புகழைப் பாடியவர்!
     மாலன் அடியைச் சூடியவர்!
காலன் அவரைக் கவர்ந்தாலும்
     ஞாலம் அவரை மறந்திடுமோ?
ஏலம் கேட்டும் ஏழைகளும்
     எல்லாம் உடைய செல்வர்களும்
சீலம் என்றே போற்றிடுவார்!
     சிறந்த வாலி செந்தமிழை!

நல்ல மனமுடைய நம்தேவ ராசு..பா
சொல்லச் சுரக்கும் சுவை!

----------------------------------------------------------------------------------------------------- 

முருகா! முருகா! என்றோதித்
     திருவாய் மலர்ந்த தமிழ்ப்பாக்கள்
உருகா திருக்கும் உளத்தினையும்
     உருக்கி ஒளிரச் செய்திடுமே!
சருகா வாழ்வு? கூட்டுக்கள்
     குருகாய்க் குன்றித் தாழாதே!
அரும்..பா அளித்த கவி.சரோசா
     அறுகாய்த் தழைத்து வாழியவே!

தேனெனச் செந்தமிழைத் தீட்டும் சரோசா..சீர்
வானென வாய்க்கவே வாழ்த்து!

----------------------------------------------------------------------------------------------------- 

சீரின் கலையைக் கற்றதனால்
     சிதைக்கும் வினையை நானறியேன்!
பேரின் கலையைக் கற்றதனால்
     பிணிசெய் வினையை நானறியேன்!
போரின் வன்மைப் பெயர்கொண்ட
     புலவா! நண்பா! பாமல்லா!
வேரின் வன்மை எனக்குண்டு!
     வெற்றி என்றும் என்சொத்து!

மாவெல்லம் என்பேனா? மாங்கனி என்பேனா?
பாமல்லன் பாடிய பாட்டு!

----------------------------------------------------------------------------------------------------- 

பெண்பாடிக் கவிதொடுத்தால் இனிமை யோங்கும்!
     பேரவையும் தமிழிசைக்குத் தாளம் போடும்!
கண்ணாடி அணிந்திட்ட வாலி சீரைக்
     கவியாடி இசைத்திட்ட பாக்கள் கேட்டேன்!
விண்நாடி நம்வாலி சென்றார் என்று
     விழிகளிலே நீர்பனிக்கச் செய்தாய்! உன்றன்
பண்..கோடிக் கருத்துகளை நல்கக் கண்டேன்
     பாரதிநான் வாழ்த்துகின்றேன் தமிழ்போல் வாழி!

தங்கை லினோதினி தங்கக் கவிகொடுத்தார்
தங்கும் மனத்துள் தழைத்து!

தொடரும்

10 commentaires:

  1. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
    என்று முழங்கும்
    உங்கள் பாக்களினால்
    உள்ளம் நிறைந்ததையா!...

    சீர்களை அடுக்கி ஒவ்வொரு பாவலரையும்
    சிறப்பாக அழைத்த கவிதைகள் அற்புதம்!
    மிகவே ரசித்தேன்!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  2. வணக்கம் !
    கவிதையே கவிதைகளைப் போற்றும் அழகு கண்டு
    கண்களிலே துள்ளி விளையாடுகின்றது விண்மீன்களிரண்டு !!
    புவி போற்றும் பாவேந்தர் வலி புகழ் பாடித் திரியும்
    இனிதான மனங்களுக்கு என் வாழ்த்துக்கள் இங்கே ..

    RépondreSupprimer
  3. மிகவும் அருமை ஐயா... ரசித்துப் படித்தேன்... வாழ்த்துக்கள்... நன்றி...

    RépondreSupprimer
  4. ஒவ்வொரு அறிமுகக் கவிதையிலும்
    சொல்லும் பொருளும் புதிது புதிதாய்ப்
    பிறந்து வளர்ந்து நிறைந்து
    அந்த முண்டாசுக் கவிஞனை
    நினைவுறுத்திப் போகுது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  5. பாவலர்களைக் கவிபாட அழைத்ததும், நிறைவுக் கவிதையாகவும்
    வாலியின் புகழோடு கவிஞர்களையும் மிக்க அழகாகக்
    கவிதையிலேயே பாடிப் புகழ்ந்ததுகண்டு மனம் மகிழ்ந்தேன்.

    அனைத்துக் கவிதைகளும் அருமை!
    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
  6. "முத்தாய்ப் பாக்கள் மொழிந்திட்ட
    மூத்த கவிஞர் வாலியினைச்
    செத்தார் என்று செப்புவதோ?
    சிறந்தார் என்றே உரைத்திடுக!" என்பதே
    என் விருப்பமுமாகும்!

    RépondreSupprimer
  7. மிகவும் அருமை ஐயா...
    படித்து ரசித்தேன்...

    RépondreSupprimer

  8. கோலி..நான் ஆடும் பருவத்தில் கொஞ்சுதமிழ்
    வேலியாக நின்றவர்! விஞ்சுபுகழ் - வாலியார்!
    அள்ளி அளித்த அடிகள் அனைத்திலுமே
    துள்ளிக் குதிக்கும் சுவை.

    இனிய. தமிழ்ச்செல்வன்

    RépondreSupprimer
    Réponses

    1. துள்ளிக் குதிக்கும் சுவைக்கவி தந்தவரை
      அள்ளி அணைத்தேன் அருந்தமிழால்! - பள்ளியோன்
      பேரரங்கப் பேர்விளங்கும் வாலியார் சீர்பேசா
      ஓரரங்கம் உண்டோ உரை!

      Supprimer