samedi 26 octobre 2013

கம்பன் புகழ்!

கம்பன் புகழ்!

தந்தையின் சொல்லினைத் தன்னுயிர் என்றான்
தனயன் இராமபிரான்! - கூனி
மந்தரை சூழ்ச்சியால் கைகேயி வார்த்தையால்
மன்னவன் காடுறைந்தான்!

அண்ணனும் தம்பியும் அன்பைப் பொழிந்திடும்
அற்புதக் காவியமாம் - அது
கன்னித் தமிழினில் கண்டெனத் தீட்டிய
கம்பனின் ஓவியமாம்!

கருணைக் கடலெனக் காணும் இராமனின்
காலடி கள்சுமந்தான் - உயர்
பரதனைப் போன்றொரு பண்புடைச் செல்வனைப்
பாவியத் துள்படைத்தான்!

சிற்றன்னை செய்த சிறப்பில்லாச் செய்கையால்
சீர்ராமன் காடடைந்தான் - நாளும்
உற்ற துணையாய் இலக்குவன் நின்றே
உயர்நிலை தானடைந்தான்!

சனகனின் கண்மணி சானகி தேவியின்
சால்பினை என்னென்பேன் - அவள்
கனவிலும் கூடக் கமழும் திருராமன்
காட்சியும் நன்றென்பேன்!

பெருமை இழந்தான் பிறன்மனை நோக்கிப்
பெரியோன் இராவணன்தான் - போற்றும்
அருமைக் கதையை அழகாய்ப் படைத்தான்
அருங்கம்ப நாடனவன்!

அரக்க இனத்தை அனுமனை விட்டே
அழிக்கக் கதைபடைத்தான் - இராமன்
இரக்க மனத்தால், இலங்கையின் வேந்தனை
இன்று போ.... என்றுரைத்தான்!

அசோக வனத்தில் மிதிலையின் செல்வி,தன்
அய்யனை நோக்கிநின்றாள் - அங்கு
விசுவாசத் தோடு திரிசடை என்பாள்
விரும்பிப் பணிபுரிந்தாள்!

காரிருள் தோற்றமும் காலனின் ஆற்றலும்
காணும் நிலத்தவனாம்! - குகன்
பார்புகழ் ராமன்பால் பக்தியை வைத்துப்
படகை விடுத்தவனாம்!

மூத்த மனைவி எனும்பெயர் பெற்றவள்
மூப்பிலாக் கோசலையாள் - அவள்
பூத்த மலராய்ப் பொலியும் இராமனைப்
பூமியில் பெற்றவளாம்!

மாய மிகுமானாய் வந்தவன் மாரீசன்
வாழும் அறமுரைத்தான் - கொடும்
பேயர் அரக்கர் குலத்தில் உதித்தும்
பெருமையால் தானுயர்ந்தான்!

இன்னும் பலரும் இராமக் கதையில்
இருக்க இடங்கொடுத்தான் - கம்பன்
கன்னல் தமிழினில் வண்ணங் கமழக்
களிக்கக் கவிபடைத்தான்!

மானை விரும்பிய மங்கையாம் சீதை
மனைதனைத் தாண்டிவிட்டாள் - இராமன்
தேனாய் இனித்த திருமகள் தேவியைத்
தீயுள் புகவிட்டான்!

செஞ்சோற்றுக் காகச் சிரசையும் தந்தவன்
சீர்மிகு கும்பகர்ணன் - எதற்கும்
அஞ்சாத வீரன்! அறவழி யாளன்!
அவன்புகழ் பாடுவமே!

ஆர்ப்பரித் தாள்அந்தச் சூர்பண கைதான்
அறவழி தான்மறந்தாள் - காம
வார்ப்பட மாகியே மூக்கறு பட்டுமே
வஞ்சகி தான்குலைந்தாள்!

முன்னவ னான இராவணன் செய்கை
முறையில்லை என்றுரைத்தான் - அயோத்தி
மன்னவன் பக்கமே வீடணன் நின்றதால்
மாப்புகழ் தானடைந்தான்!

எல்லாக் கலையிலும் ஏற்ற மடைந்தவன்
ஏந்தல் அனுமன்தான்! - அவனைச்
சொல்லினில் செல்வனாய்த் தோதாய்ப் படைத்தான்
சுடர்மிகு கம்பன்தான்!

தக்க அறவுரை தந்தைக்கு உரைத்தனன்
தன்னுயிர் தந்தனனே - வீரம்
மிக்கதோர் நல்மேக நாதன் புகழை
வியந்துநாம் போற்றுவமே!

அறநெறி யாவும் திருக்குறள் போலே
அழகுறத் தான்பொழிந்தான் - கம்பன்
உறவுகள் யாவும் உயர்அன்பி னாலே
ஒழுகிடத் தான்மொழிந்தான்!

கற்பனை யோடும் பொருட்சுவை யோடும்
கவிநயம் கண்டிடலாம்! - கம்பன்
நற்றமிழ்த் தேனாம் நனிமிகு பாக்கள்
நலம்பெற உண்டிடலாம்!

கம்பனைப் போலொரு கற்பனை கொஞ்சிடும்
காப்பியம் தந்தவர்யார்? - அதில்
பம்பும் உவமைகள் பாங்காய்ப் படத்திடப்
பாக்கள் படைத்தவர்யார்?

கம்பன் புகழினைக் கண்டங்கள் தாண்டியே
காணும் இனியவிழா - இங்கு
நம்மின் தமிழர்கள் நற்றமிழ் போற்றவே
நாடும் இராமன்விழா!

செந்தமிழ் ஒன்றையே சிந்தையில் கொண்டிடும்
சீரிய அன்பர்களே - பிழைக்க
வந்த இடத்திலும் வண்டமிழ் போற்றினீர்
வாயார வாழ்த்துகிறேன்!

நான்பெற்ற ஆற்றலை நற்றமிழ் மேடையில்
நன்றெனக் காட்டுகிறேன் - கம்பன்
தேன்கவி பாயவே சீர்பணி செய்யவே
செந்தமிழ் தீட்டுகிறேன்!

பிரான்சு கம்பன் விழா 14.09.2013

17 commentaires:

 1. வணக்கம் ஐயா !
  கம்பன் புகழைப் போற்றிடும் நற்
  கவியேயுன் புகழ் வாழியவே .....
  செம் பொற் கொடியை ஏந்தியவன்
  செந் தமிழை மழையாய் அருளிடவே ....

  http://rupika-rupika.blogspot.com/2013/10/700.html

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   தோழி வருகை தொடா்ந்திட வேண்டியே
   வாழியென வாழ்துமென் வாய்!

   Supprimer
 2. // கம்பனைப் போலொரு கற்பனை கொஞ்சிடும்
  காப்பியம் தந்தவர் யார்...? // (இனி மேலும்) யாரும் இல்லை ஐயா...

  சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   தனபால் தருகின்ற தங்கக் கருத்தை
   மனத்துள் அடைப்பேன் மகிழ்ந்து!
   !

   Supprimer
 3. கம்பனைப் போ்லொரு கற்பனை கொஞ்சிடும்
  காப்பியம் தந்தவர்யார்? - அதில்
  பம்பும் உவமைகள் பாங்காய்ப் படத்திடப்
  பாக்கள் படைத்தவர்யார்?

  கம்பன் புகழை சிறப்பாக பாடியமைக்குப் பாராட்டுக்கள்..!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   வாழ்த்தும் மனத்தை வணங்குகிறேன்! இன்பத்துள்
   ஆழ்த்தும் அடிகள் இவை!!

   Supprimer
 4. கம்பன் இன்புகழ் காவியம் பாடிடும்
  நம்மினம் பெற்ற கவியே! உங்கள்
  செந்தமிழ்ப் பாக்கள் சிறப்பினைச் சொல்ல
  சந்தனம் குணம் குன்றுமே!

  கம்பன் விழாப் பாக்கள் கற்கண்டு பாகென இருக்கின்றதையா!
  மனம் பாக்களின் சந்தத்திலும் சீர்களிலும் சிக்கிக் கொண்டது!

  என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   சந்தத் தமிழ்பாடித் தந்த கருத்துக்குச்
   சொந்தம் அமுதின் சுவை!

   Supprimer
 5. காவிய மாந்தரைக் கண்முன் படைக்கின்ற
  ஓவியப் பாக்கள்! ஒளிர்பூக்கள்! - தாவிக்
  குதித்தாடும் நெஞ்சம்! குவிந்தாடும் இன்புள்
  பதிந்தாடும் நெஞ்சம் பணிந்து!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பொதிந்தாடும் ஆட்டமாய்ப் பூக்கும் இனிமை
   பதிந்தாடும் பாட்டைப் படைத்தாய்! - புதியதாய்
   இன்று வடித்திட்ட இன்பக் கருத்திற்கு
   நன்றி நவில்கின்றேன் நான்!

   Supprimer
 6. வணக்கம்
  ஐயா

  செந்தமிழ் ஒன்றையே சிந்தையில் கொண்டிடும்
  சீரிய அன்பர்களே - பிழைக்க
  வந்த இடத்திலும் வண்டமிழ் போற்றினீர்
  வாயார வாழ்த்துகிறேன்

  கம்பன் புகழ் பற்றிய கவியில் உங்கள் கன்னித்தமிழ்இரசம் ஓடுதையா... அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கம்பன் புகழைக் கனிவுடன் பாடினேன்
   எம்மின் தமிழால் இனத்து!

   Supprimer
 7. தேனிலும் இனிய தெவிட்டாத சுவைப் பாக்கள்!
  நானிங்கு என்ன சொல்வது.. ரசிக்கின்றேன்!

  உங்கள் பாக்களைக் கண்டவுடன்
  ஏனோ மனம் கட்டுக்கடங்காமல்
  துள்ளிக் குதிக்கின்றது...

  மிகவும் கவர்கின்றன உங்கள் கவிதைச் சொற்கள்!

  வாழ்த்துக்கள் கவிஞரே!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   பூங்கொடி தந்த புகழுரை, தேனொழுகும்
   மாங்கனி என்பேன் மகிழ்ந்து!

   Supprimer
 8. Réponses

  1. வணக்கம்

   வருகைக்கு நன்றி! வடித்திட்ட சின்ன
   கருத்திற்கும் நன்றி கனிந்து!

   Supprimer
 9. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
  கவிபாடும் ஐயா!
  உங்கள் பாவில் கம்பன் புகழ்
  எட்டுத் திக்கும் பரவும் ஐயா!

  RépondreSupprimer