samedi 19 octobre 2013

வாலியைப் போற்றுவோம் - 1




கவிஞர் வாலியைப் போற்றுவோம்!
கவியரங்கத் தலைமைக் கவிதை

தமிழ் வணக்கம்

வாலியை வாழ்த்தி வணங்கிடவே, வண்டமிழே
வேலிணைச் சீர்களை வீசு!

இறை வணக்கம்

வாலியை வாழ்த்தி வணங்க, எனைக்காக்கும்
மாலினை வைத்தேன் மனத்து!

அவை வணக்கம்!

வாலி அரங்கிற்கு வந்தவரை வாழ்த்துகிறேன்
பாலென உள்ளம் படைத்து!

வாலியைப் போற்றுவோம்

அரும்வாலி புகழ்பாடும் பாட்ட ரங்கை 
     அடியவன்நான் திறக்கின்றேன்! தமிழைக் காக்கப்
பெரும்வேலி போலிருக்கும் கவிஞர் கூட்டம்
     பெருமையுடன் கவிபடைப்பார்! உழைக்கும் மக்கள் 
வருங்கூலி நாளெண்ணி வாழ்தல் போன்று 
     வண்டமிழின் சொல்லெண்ணி வாழ்ந்த வாலி!
திருக்காளி மாங்காளி தாள்கள் பற்றித் 
     திரைக்கவியைத் தேன்கவியைப் போற்று கின்றேன்! 

வெண்தாடி விளைந்திருக்கும்! வாயில் என்றும்
     வெற்றிலையின் மணமிருக்கும்! தமிழை வேண்டிப்
பண்பாடிப் படைக்கின்ற கவிதைச் சோலை
     பசுமையுடன் பளபளக்கும்! சுற்றும் பூமி
எண்கோடி ஆண்டுகளைக் கண்ட போதும்
     இனியகவி வாலியைப்போல் பிறப்பார் யாரோ?
விண்நாடி ஏன்சென்றார்? பரமன் காதில்
     வியன்தமிழை ஓதிடவோ? போற்று வோமே!

வெண்வேட்டி நீள்சிப்பா ஆடை ஏற்று
     வேந்தரெனப் பாட்டுலகை ஆண்டார்! விந்தைப்
பண்கூட்டி இசைத்தவுடன் பனுவல் பாடிப்
     படைக்கின்ற ஆற்றலினைப் பூண்டார்! காதல்
கண்காட்டி அழைக்கின்ற கன்னி போன்று
     கவிஞர்களை ஈர்க்கின்ற நூல்கள் ஈந்தார்!
மண்கூட்டி ஏன்வைத்தோம்? வாலி கொண்ட
     மதுத்தமிழை மண்சுவைக்க! போற்று வோமே!

மதுக்கவிதை என்பேனா மனத்தைக் கவ்வும்
     மலர்க்கவிதை என்பேனா வாலி தந்த
புதுக்கவிதை பேரழகை? புதுமை ஏந்திப்
     புகுந்தாடும் சீரழகை? வாரந் தோறும்
பொதுக்கவிதை என்றுரைக்க இதழ்கள் தம்மில்
     புனைந்திட்ட பக்கங்கள் தமிழின் செல்வம்!
முழுக்கவிதை வரலாறாய் வாழ்வைத் தந்த
     முதுகவியை வாயாரப் போற்று வோமே!

கற்பனைதான் என்றாலும், கலையாய் மின்னும்
     கற்சிலைதான் என்றாலும் மறவேன்! இப்பா
நற்சுவைதான் என்றுலகம் பாடிச் சுற்றும்!
     நான்ஆணை யிட்டால்பாட்டு இன்தேன் சொட்டும்!
நற்றுணைதான் மீனவர்க்குக் கரைமேல் என்னும்
     நல்லதமிழச் சொல்லினிக்கும் அடிகள் யாவும்!
நற்பனைதான் கொண்டுள்ள வயிரம் போன்றே
     நம்வாலி எழுத்திருக்கும்! போற்று வோமே!

அம்மாவென்று அழைக்காத உயிரே இல்லை
     அன்புமழை பொழிகின்ற அமுதப் பாட்டு!
சும்மாவென்று இருப்பரை மெல்லத் தட்டிச்
     சூடேற்றும் மூன்றெழுத்து மூச்சுப் பாட்டு!
உம்மாவென்று ஏங்குகின்ற உள்ளந் தன்னில்
     உணர்வூட்டும் புத்தகத்தைப் புரட்டும் பாட்டு!
செம்மாந்தொன்று உரைக்கின்றேன் கவிஞர் வாலி
     செந்தமிழின் கவிவேலி! போற்று வோமே!

[தொடரும்]

18.05.2013

13 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    மதுக்கவிதை என்பேனா மனத்தைக் கவ்வும்
    மலர்க்கவிதை என்பேனா வாலி தந்த
    புதுக்கவிதை பேரழகை?

    கவிஞர் வாலியைப்போற்றி படைத்த கவி நன்று ஐயா....... ஒவ்வொரு வரிகளும் கருத்தாழம் மிக்கவை.....வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. சிறப்பான வாழ்த்துப் பா... வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  3. நற்கவிகள் கொடுத்த
    வெண்தாடி வேந்தனுக்கு
    அழகான புகழாரம் ஐயா...

    RépondreSupprimer
  4. மதுக்கவிதை என்பேனா மனத்தைக் கவ்வும்
    மலர்க்கவிதை என்பேனா வாலி தந்த
    புதுக்கவிதை பேரழகை?//உண்மை சிறப்பான வரிகள்

    RépondreSupprimer
  5. செம்மாந்தொன்று உரைக்கின்றேன் கவிஞர் வாலி
    செந்தமிழின் கவிவேலி! போற்று வோமே!

    வாலி வாழ்த்து ...!

    RépondreSupprimer
  6. வாலியைப் போற்றி
    வரைந்திட்ட கவியே!
    பீலிசூடியவன் செய்த
    பெருமைதனை வியந்தேன்!
    காலியான தர்பாரிதனை
    ஆரவாரமாய் ஆர்ப்பரிக்க
    வாலியைக் காரணமாக்கிய
    வகைதனைப் போற்றினேன்!

    வாலியின் பெருதனை வரிவரியாய் வரைந்த கவி அருமை ஐயா!
    உங்கள் மீள்வருகையும் அந்த ராஜ கம்பீரமும் மனதை நிறைக்கின்றது!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  7. வாலியை வாழ்த்தி வணங்க, எனைக்காக்கும்
    மாலினை வைத்தேன் மனத்து!...

    ஆஹா.. இறை வணக்கம் நிறைக்கின்றது மனத்தில்.

    வாலியின் புகழினை தமிழின் வேலியான
    உங்கள் கவியில் காண அற்புதம்! அருமை!

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
  8. அம்மாவென்று அழைக்காத உயிரே இல்லை
    அன்புமழை பொழிகின்ற அமுதப் பாட்டு!
    சும்மாவென்று இருப்பரை மெல்லத் தட்டிச்
    சூடேற்றும் மூன்றெழுத்து மூச்சுப் பாட்டு!
    உம்மாவென்று ஏங்குகின்ற உள்ளந் தன்னில்
    உணர்வூட்டும் புத்தகத்தைப் புரட்டும் பாட்டு!
    செம்மாந்தொன்று உரைக்கின்றேன் கவிஞர் வாலி
    செந்தமிழின் கவிவேலி! போற்று வோமே!

    அத்தனை வரிகளும் வாலிபக் கவிஞனைப் போற்றும் வரிகள்...
    வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer
  9. வாலியைப் போற்றுவோம் ஐயா.

    RépondreSupprimer
  10. மதுக்கவிதை அத்தனையும் மரபுக் கவிதை-என்
    மனமென்னும் தோட்டத்தில் போட்ட விதை
    இதுகவிதை எனபோற்ற யாத்தீர் ஐயா -என்
    இதயத்தில் இன்பத்தை வார்தீர் ஐயா

    RépondreSupprimer

  11. வாலியைப் போற்றி வடித்த வளர்தமிழ்
    ஆலிலைக் கண்ணன் அருளியதோ? - கோலக்
    கவிஞர் கி. பாரதி தாசன் கவிதை
    குவிக்கும் இனிமை கொணர்ந்து!

    இனிய. தமிழ்ச்செல்வன்

    RépondreSupprimer
    Réponses

    1. ஆலிலைக் கண்ணன் திருவடியில் ஆழ்ந்தவர்
      போலினிப் பாக்கள் பொழிவேனா? - மேலினிச்
      செல்வேனா? செந்தமிழ்ச் செல்வா! கவிக்கலையை
      வெல்வேனா? ஏதென் விதி!

      Supprimer
  12. கற்பனைதான் என்றாலும், கலையாய் மின்னும்
    கற்சிலைதான் என்றாலும் மறவேன்! இப்பா
    நற்சுவைதான் என்றுலகம் பாடிச் சுற்றும்!
    நான்ஆணை யிட்டால்பாட்டு இன்தேன் சொட்டும்!

    வல்ல கவியை வர்ணித்த வரிகள் எல்லாமே வைரம் போல் ஜொலிக்கின்றன. தேனும் சொட்டுகின்றது. நன்றி...! வாழ்த்துக்கள்...!

    RépondreSupprimer