dimanche 14 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 103]




காதல் ஆயிரம் [பகுதி - 103]
 
891.
பழகும் தமிழ்போல் படர்பவளே! நன்றே
ஒழுகும் நெறிகளின் ஊற்றே! - அழகுன்
திருவடி சென்ற அடிச்சுவடு! தேவி
ஒருபடி தேனள்ளி ஊட்டு!

892.
ஊடல் சிறப்பை உணா்ந்தறிந்தேன்! பின்பெறும்
கூடல் சிறப்பைக் குறித்தறிந்தேன்! - ஆடல்
புரிகின்ற காதணி பொற்பாவாய்! கோபம்
தெரிகின்ற வீம்பேன் தெளி!

893.
வண்ணப் பறவைகள் வந்தாடும் சோலையென
எண்ணப் பறவை உனையெண்ணும்! - பெண்ணழகே!
உண்ணும் உணவும்..நீ! என்றன் உணர்வும்..நீ!
தின்னும் சுவையாவும் நீ!

894.
பண்ணிசைக்கும் பாவையின் பட்டொளிர் பார்வையால்
அண்ணிக்கும் தேனூறும் என்னகத்தே! - கண்ணசைக்கும்
சின்ன நொடிப்பொழுதை எண்ணிக் கிடக்கின்றேன்!
வண்ணக் கொடியாளே வா!

895.
தொட்ட நொடிப்பொழுதில் சொர்க்கம் தெரிந்ததடி!
பட்ட துயரம் பறந்ததடி! - கட்டழகே!
விட்ட விழியம்பால் வீழ்ந்து கிடக்கின்றேன்!
வட்ட நிலவழகே வா!

(தொடரும்)

14 commentaires:

  1. அருமை அய்யா. படித்தேன் ரசித்தேன். நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருமைத் தமிழவள்! அன்பை அளிக்கும்
      பெருமைக் குடிலவள்! பேசும் - கருமை
      விழியிரண்டும் என்னை விளையாடி வெல்லும்!
      வழியிருண்டு உள்ளேன் வதைந்து!

      Supprimer
  2. ரசிக்க வைக்கும் சுவைக்க வைக்கும் வரிகள்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சுவைக்கும் அமுதள்ளிச் சூடுகிறாள்! இன்பங்
      குவிக்கும் அழகள்ளிக் கொஞ்சுகிறாள்! நெஞ்ச
      அவைக்குள் அமா்ந்துஅரசு ஆளுகிறாள்! ஆசை
      தவிக்கும் இரவில் தனித்து!

      Supprimer
  3. தேவி ஒருபடி தேனள்ளி ஊட்டு!//சுவையுங்கள் தேனையும் சுவையுங்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      தேனள்ளி ஊட்டுகிறாள்! சிந்தனைப் பூக்களை
      ஏனள்ளிக் காட்டுகிறாள்! வாடுகிறேன்! - நானாட
      மின்துள்ளி ஆடும்! வியக்கும் விழியழகில்
      மான்துள்ளி ஆடும் மகிழ்ந்து!

      Supprimer
  4. தொட்ட நொடிப்பொழுதில் சொர்க்கம் தெரிந்ததடி!
    பட்ட துயரம் பறந்ததடி! - கட்டழகே!
    விட்ட விழியம்பால் வீழ்ந்து கிடக்கின்றேன்!
    வட்ட நிலவழகே வா!

    ----

    காதல் ரசம் சொட்டும் கவிதை வரிகள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வெட்டும் விழியுடையாள்! விந்தை மொழியுடையாள்!
      கொட்டும் மழையாய்க் குளிர்தருவாள்! - மட்டிலாச்
      சொட்டும் சுவைத்தேனைச் சூடும் கவிதகைள்
      கட்டும் மனத்தைக் கலைத்து!

      Supprimer

  5. கொஞ்சும் தமிழெடுத்துக் கோலக் கவிபாடி
    நெஞ்சுள் புகுந்தாடும் நேயரே! - பஞ்சாக
    வானில் பறக்கின்றோம்! வண்ணத் தமிழ்படித்துத்
    தேனில் மிதக்கின்றோம் சோ்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அன்னவள் தந்த அருமைக் கவியனைத்தும்
      இன்னவள் என்றும் எழிலவள் - என்றும்
      பறையடித்துப் பாடும்! பசுமைத் தமிழோங்க
      நிறைகொடுத்துப் பாடும் நிலைத்து!

      Supprimer
  6. பழகும் தமிழ்போல் படர்பவளே! நன்றே
    ஒழுகும் நெறிகளின் ஊற்றே! - அழகுன்
    திருவடி சென்ற அடிச்சுவடு! தேவி
    ஒருபடி தேனள்ளி ஊட்டு!

    இனிய தமிழில் அழகாக
    இயற்றும் வெண்பா தேனாக
    இனிக்கும் நாவில் எப்போதும்...!

    அழகிய பாக்கள்
    வாழ்த்துக்கள் கவிஞரே
    வாழட்டும் தமிழ்
    வாழவைப்பீர் எமக்காக...!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சின்னவளைப் பாடும் செழுந்தமிழ்ச் சொல்யாவும்
      பொன்னவள் என்று பொலிந்திடுமே! - தென்னவள்
      பேரழகைப் பேசிப் பெருஞ்சுவை காண்கின்றேன்!
      பாரழகை வெல்லும்என் பாட்டு!

      Supprimer
  7. // உண்ணும் உணவும்..நீ! என்றன் உணர்வும்..நீ!
    தின்னும் சுவையாவும் நீ! //

    உணவும் உணர்வும், உயிரும் உதிரமுமாய் அனைத்துமான தமிழ்!!
    அந்தத் தமிழில் கவியே நீங்கள் தரும் பாக்கள்...!!!
    எல்லாம் நாம் பெற்ற வரமே!

    வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உணவும் உணா்வும் உயிரும் தமிழே!
      மணமும் மதுவும் தமிழே! - கணமும்
      மறவாத் தமிழே!என் மாதவளை உன்றன்
      உறவாய் உரைத்தேன் உவந்து!

      Supprimer