vendredi 19 juillet 2013

கண்ணீர்க்கடல்!

கண்ணீர்க்கடல்!

வேலி யாகத் தமிழுக்கு
     விளைத்த நன்மை பலகோடி!
வாலி உன்னைப் பிரிந்ததனால்
     வாடும் கவிதைப் பெருவயலே!
மாலின் உலகத் திருக்கதவம்
     மலர்போல் திறந்து வரவேற்கும்!
வேலின் கூர்மை வியன்தமிழை
     வேண்டி உன்முன் தவமேற்கும்!

நம்பன் இராமன் திருவடியை
     நாடி விண்மேல் சென்றாயோ!
கம்பன் அரங்கம் உனக்காகக்
     காத்துக் கிடக்கும் மறந்தாயோ!
செம்பொன் நெஞ்ச அடியார்கள்
     சிந்தும் கண்ணீர்க் கடலாகும்!
இம்மண் பிரிந்து போனாலும்
     இசைத்த பாக்கள் உயிர்வாழும்!

கோடம் பாக்கம் உன்பிரிவால்
     மாடம் சிதைந்த நிலமேவும்!
ஓடம் ஆற்றில் நடுவினிலே
     உடைந்து முழுகும் நிலைகாணும்!
பாடம் படிக்கப் பா..எழுதப்
     பார்த்தன் உன்னை அழைத்தானோ?
ஊட கங்கள் உறவெண்ணி
     உருகும்! உருளும்! அய்யய்யோ!

அந்த வாலி படலத்தை
     ஆழ்ந்து படித்த புலவன்நான்!
இந்த வாலி படைப்புகளை
     இதயம் ஏந்திக் காக்கின்றேன்!
வந்த வேலை முடிந்ததென
     வானை நோக்கிச் சென்றாயோ!
சொந்தம் இழந்து கலையன்னை
     துன்பக் கடலில் துவள்கின்றாள்!

வார இதழும் நாளேடும்
     வாடி வதங்கித் துயர்மேவும்!
ஆரத் தழுவி உன்கவியை
     அடைந்த சுவைக்குத் தாம்ஏங்கும்!
ஈர மின்றிக் காலமகன்
     ஏனோ உன்னை அழைத்தானோ?
பார முற்ற மனத்தோடு
     பணிந்து தொழுதேன் பரமனையே!

18.07.2013

26 commentaires:

 1. Réponses

  1. வல்ல கவிவாலி! வார்தத தமிழ்யாவும்
   சொல்லச் சுரக்கும் சுவை!

   Supprimer
 2. அமரர் வாலியின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

  RépondreSupprimer
  Réponses

  1. திரையிசை வானின் செழுங்கதிர் வாலி
   மரைமகள் பெற்ற மகன்!

   Supprimer
 3. இம்மண் பிரிந்து போனாலும்
  இசைத்த பாக்கள் உயிர்வாழும்!

  ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்..!

  RépondreSupprimer
  Réponses

  1. அழியாக் கவிதைகளை ஆக்கிய வாலி
   மொழியாத சொல்லுண்டோ சொல்!

   Supprimer
 4. வந்த வேலை முடிந்ததென
  வானை நோக்கிச் சென்றாயோ!
  சொந்தம் இழந்து கலையன்னை
  துன்பக் கடலில் துவள்கின்றாள்!
  வாலியின் மறைவால் துன்பக்கடலில் துவள்வது கலைஅன்னை மட்டுமல்ல நாங்களும் தான்.அருமையான அஞ்சலி கவிதை.அப்துல் தயுப்.

  RépondreSupprimer
  Réponses

  1. விண்ணில் புகுந்தாலும் கண்ணில் இருக்கின்றார்
   மண்ணில் புகழாய் மலா்ந்து!

   Supprimer
 5. துயர்மேவும் சேதி தருமிந்தப் பாக்கள்
  உயிர்கரைய ஓலமிட வைத்து!

  ஆர்ப்பரித்த ஆழியின் அமைதிகண்டு ஆழ்ந்த அஞ்சலிகள்!

  RépondreSupprimer
  Réponses

  1. ஆழி அலையில் அகப்பட்ட தும்பாகத்
   தோழியே! உற்றேன் துயா்!

   Supprimer
 6. கண்ணீர் மல்க எழுதிய அழகிய கவிதை வரிகளை
  வாழ்த்தி எம் இதயத்தில் இடம் பிடித்த கவிஞர்
  வாலி அவர்களுக்குத் தங்களுடன் சேர்ந்து எமது
  கண்ணீர் அஞ்சலியையும் இங்கே தெரிவிகின்றோம் :(

  RépondreSupprimer
  Réponses

  1. கண்ணீா் பெருகிவரும்! கன்னற் கவிவாலி
   விண்ணில் புகுந்தார் விழைந்து!

   Supprimer
 7. துயரத்தைத் தோய்த்து வடித்த கவிவரிகள்!

  ஆன்ம சாந்திக்காக உங்களுடன் நானும் இணைந்து வேண்டுகிறேன்...!

  RépondreSupprimer
  Réponses

  1. துயா்க்கடல் ஓங்கித் தொடா்ந்துவர என்றன்
   உயிர்உடல் வாடும் உடைந்து!

   Supprimer
 8. Réponses

  1. இரங்கலை ஏந்தி அழுகின்றோம்! நெஞ்ச
   உரத்தினை நீங்கி உலா்ந்து!

   Supprimer
 9. வந்த வேலை முடிந்ததென -ஏனோ
  வானை நோக்கிச் சென்றாயா!
  சிந்தை குலுங்க தமிழகமே -இங்கு
  சிந்தும் கண்ணிர் கண்டாயா!
  வெந்தப் புண்ணில் வேல்பாய -மேலும்
  வெம்மை நீர்மிக அதில்சாய
  அந்தம் ஆதி இல்லாதான் -திரு
  அடிகள் சரணம் என்றாயா

  RépondreSupprimer
  Réponses

  1. வாலி திருப்புகழைத் தோளில் சுமா்தாடி
   மாலிடம் வைப்போம் மனம்!

   Supprimer

 10. கண்ணீா் மலா்களைக் கட்டிப் படைக்கின்றேன்!
  பண்ணின் சிறந்த,பா வாணருக்கு! - தண்கவி
  மண்ணில் மறைந்தார்! மதுத்தமிழ்ச் சோலையெனக்
  கண்ணில் நிறைந்தார் கமழ்ந்து!

  RépondreSupprimer
  Réponses

  1. முதுமைச்சொல் முந்திவரும்! நல்லிளமை மின்னும்
   புதுமைச்சொல் பூத்துவரும்! பொற்கவி வாலி
   உடலால் மறைந்தார்! உயா்தமிழ் வீட்டில்
   சுடராய் ஒளிர்ந்தார் தொடா்ந்து!

   Supprimer

 11. தமிழுக் குழைத்தோர் தரணியில் நின்று
  தழைக்கும் புகழைத் தரிப்பார்! - அமுத
  கவிவாலி என்றும் கருத்தில் கமழ்ந்து
  புவிவாழ்வார் பொன்போல் பொலிந்து!

  RépondreSupprimer
 12. வாலிபக் கவிஞர் வாலியின்
  வாலிபக் கவிதைகள்
  வாலியின்
  பெயர் சொல்லிக் கொள்ளும்
  வாலியின் கவிதைகள், பாடல்கள்
  நம்முன்னே வாலியை வரவைக்கும்
  வாலியின் எழுத்துக்கள்
  வாலியை வாழவைக்கின்றதே!

  RépondreSupprimer
  Réponses

  1. இளமைக் கவியின் இனியகவி வாலி
   வளமைக கவியின் மழை!

   Supprimer
 13. ஐயா வணக்கம்!

  தமிழ்மொழியில் உள்ள பற்றும் கவியறிதலில் கொண்ட ஆர்வமும்(ஆசை) தவறுகளை உணராமல் எழுதிவிட வைத்துவிட்டன. மனம் வருந்துகிறேன்!

  இங்கு நீங்கள் ஒவ்வொருவருக்கும் பதிலாக இட்ட குறட்பாக்களின் இலக்கணம் கண்டு தெளிவுற்றேன். மிக்க மகிழ்ச்சி ஐயா!

  முறைப்படி முழுவதும் கற்று எழுதுவதற்குள் காலம் கடந்துவிடுகிறதால் அவசரம்.. அதனால் இடும் தவறுகள்...

  அப்படிக் கற்கக் காலம் போதாவிடினும் வருங்காலங்களில் உங்கள் குறட்பாக்களையும் ஏனைய இலகு பாக்களையும் அதிலுள்ள இலக்கணங்களைக் கண்டு தவறின்றி எழுத முயலுகிறேன்.
  அதற்கு நீங்கள் இங்குதரும் பாக்களே எமக்கு மிகுந்த வழிகாட்டுதலாக இருப்பது மிக்க மகிழ்வினைத்தருகிறது.

  மனம் நிறைந்த நன்றிகள் ஐயா!

  வாழ்க தமிழ்! வளரட்டும் உங்கள் தொண்டு!

  RépondreSupprimer
  Réponses

  1. இளமதி இன்று தமிழ்மதி ஆனார்!
   நிறைமதி காண்க நிலைத்து!

   Supprimer
 14. வணக்கம்
  ஐயா

  இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer