vendredi 14 juin 2013

தங்கத் தாரகையே !




தங்கத் தாரகையே !

தூக்கி முடித்த குழலழகில்
     சொக்கிப் போகும் என்மனமே!
தேக்கி வைத்த அழகெல்லாம்
     தேவன் உனக்குத் தந்தானோ?
ஆக்கி வைத்த சுவையுணவை
     அடியேன் உண்டு மகிழ்வதுபோல்
நாக்கில் எச்சில் ஊறுதடி
     நற்றேன் கனியைச் சுவைத்திடவே!

அருகே நீயும் நிற்கையிலே
     அணைக்க நெஞ்சம் துடிக்குதடி!
பெருகி ஓடும் வெள்ளமெனப்
     பெண்ணே காதல் பொங்குதடி!
உருகிக் குலையும் மெழுகாக
     உள்ளம் குன்றி நோகுதடி!
பருவம் மிளிரும் இளமாதே
     பசியைத் தந்து வாட்டாதே!

என்னை முறைத்துப் பார்க்காதே!
     இதயம் தன்னைத் தாக்காதே!
கண்ணைத் திறந்து வித்தைகளைக்
     காட்டி உயிரை மயக்காதே!
உன்னை நினைந்தே இரவெல்லாம்
     உறக்கம் இன்றித் தவிக்கின்றேன்!
பொன்னை நிகர்த்த நிறமுற்றுப்
     பொலியும் தங்கத் தாரகையே!

29.8.1984
 

17 commentaires:

  1. தங்கத் தாரகையின் ஜொலிப்பு
    தங்கள் கவிதையிலும்..
    அதன் தொடர்ச்சியாய் எங்கள்
    மனதிலும்...
    மனம் கொள்ளை கொண்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பொன்னங்கத் தாரகையைப் போற்றிய சொற்களினால்
      என்னங்கம் துள்ளும் எழுந்து!

      Supprimer
  2. Réponses

    1. மின்தங்கத் தாரகைக்குத் தந்தீா் தமிழ்மணம்!
      பொன்மழை போன்றே பொழிந்து!

      Supprimer
  3. காதல் ததும்பும் ஒவ்வொரு வரியும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      திண்டுக்கல் தந்த செழுந்தமிழ்ச் சொற்களைக்
      கண்டுபோல் உண்டேன் கமழ்ந்து!

      Supprimer
  4. மின்னும் தங்கத் தாரகை ..!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மின்னிவரும் தாரகையை மீட்டும் கவிபடித்தால்
      பின்னிவரும் காதல் பிறந்து!

      Supprimer
  5. என்றோ எழுதிய பாவிதுவே
    இன்றும் நறுந்தேனாய் இருக்கிறதே!
    நன்றே நமக்கு தமிழ்நங்கை
    நயமாய் தந்த கவியன்றோ நீர்.!

    என்னவொரு அழகிய சந்தம்!
    ஒவ்வொருவரியும் உயிரோவியமாக மிளிர்கிறதே!...

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      கொஞ்சம் தமிழில் கொடுத்த கவியடிகள்
      நெஞ்சுள் இருக்கும் நிலைத்து!

      Supprimer
  6. அற்புதமான கவிதை ஐயா

    நானும் முயற்சிக்கிறேன் இதே போல்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அற்புதப் பாட்டில் அசத்தும் கவியாகப்
      பொற்புடன் வா..வா பொலிந்து!

      Supprimer
  7. வணக்கம்.

    அழகான தாரகை தான்!!
    வாழ்த்துக்கள் கவிஞர்.
    த.ம. 7

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அழகுக் கலையகம்! அன்பின் நிலையம்!
      பழமுதிர் சோலையவள் பாடு!

      Supprimer

  8. தங்கத் தமிழ்மகள் தந்த கவியடிகள்
    உங்கள் திறனை உரைத்தனவே! - எங்கள்
    உளமினிக்க ஓதி உவக்கின்றோம்! வாழ்வில்
    வளமினிக்க வாழ்த்துகிறோம் வாழ்த்து!

    இனிய. தமிழ்ச்செல்வன்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தங்கத் தமிழ்ஒளிரத் தந்த கவியடிகள்
      பொங்கும் இனிமை பொழிந்து!

      Supprimer
  9. இயற்கையிலேயே அவள் தங்கத் தாரகை .. தங்களின் வரிகளின் இன்னும் கூடுதலாக மின்னுகிறாள்.! பாராட்டுக்கள்.

    RépondreSupprimer