mercredi 19 juin 2013

சீவா என்றோர் மானுடன்
சீவா என்றோர் மானுடன்

மேடையிலே அனல்பறக்கும்! மேல்கீழ் என்று
     மேதினியைப் பிரிப்போர்தம் உளம் உடைக்கும்!
ஆடையிலே கதர்மணக்கும்! ஆளும் வர்க்க
     ஆணவத்தை ஒடித்தடக்கும்! சாதிப் பேயைப்
பாடையிலே ஏற்றிவழி அனுப்பும்! வாடும்
     பாட்டாளி துயர்துடைக்கும்! துணிவ ளிக்கும்!
கோடையிலே குளிர்கொடுக்கும்! சீவானந்தர்
     கொட்டுகின்ற முரசொளிக்கும் கொள்கைப் பேச்சே!

கூழில்லை! குடியில்லை! மாற்றிக் கொள்ளக்
     குண்டிக்கோர் துணியில்லை! வறுமைக் கொல்நோய்
ஆழெல்லை வரைதொட்டு நம்மைத் தாக்கும்!
     அயராமல் உழைத்தென்ன பயனைக் கண்டோம்!
பாழில்லை! பழியில்லை பிறப்பில்! தோழா!
     பகுத்தறிவு ஒளியேற்று! புதுமை நோக்கு!
வாழெல்லை தொடும்வரையில் சீவானந்தர்
     வானதிர முழங்கியதும் உரிமைப் பாட்டே!

காட்டினிலே வாழ்சிங்கம் நாளை உண்ணக்
     கடுகளவும் இறைச்சியினை சேர்க்கா தையா!
நாட்டினையே சுருட்டிவிடத் திட்டம் தீட்டி
     நரியாக உலவுகின்ற கொள்ளைக் கூட்டம்!
வீட்டினையே தான்மறந்து வீதி தோறும்
     விடியலுக்குக் குரல்கொடுத்துச் சீவானந்தர்
நாட்டிற்குச் சொத்தானார்! நேர்மை தூய்மை
     பாட்டிற்குச் சொத்தானார்! உலகே போற்று!

படியாகும் எளியோர்தம் வாழ்கை ஓங்க!
     பகையாகும் சுரண்டலிடும் கூட்டம் ஓட!
அடியாகும் பொதுவுடைமை உலகைப் பாட!
     அணியாகும் இனியதமிழ் அன்னை சூட!
விடிவாகும் பெண்ணடிமை இருளை நீக்க!
     விழியாகும் இளைஞர்க்கே அறிவை ஊட்ட!
இடியாகும் கொடியவர்க்கு! சீவா னந்தர்
     எடுப்பாக மிளிர்கின்ற உருவம் என்பேன்!

வரலாறு வடித்திடவே சீவா என்ற
     மானுடனைத் தமிழ்த்தாய் பெற்றாள்! கொள்கை
உரமேறும் நெஞ்சத்துள் அச்சம் இல்லை!
     உண்ணுவதும் உறங்குவதும் வாழ்க்கை இல்லை!
நரம்போடு தமிழுணர்வு பின்னும் வண்ணம்
     நம்மிளைய சமுதாயம் வளர்தல் வேண்டும்!
வரமாகும்! வாழ்வாகும்! சீவானந்தர்
     வழியேற்றுப் புதியதோர் உலகைச் செய்வோம்!

21-04-2008

19 commentaires:

 1. தோழர் சீவா அவர்களை மறவாதிருப்பதும், அவர் வழி நடப்பதும்தான், நாம் அவருக்குச் செய்யும் கைமாறு. நன்றி அய்யா

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   சிந்தனை நன்கொளிரச் சீவா வழிநடப்போம்!
   செந்தமிழ் ஓங்கும் செழித்து!

   Supprimer
 2. கருத்தாழம் மிக்க உணர்வுபூர்வமான கவிதை
  படிக்கப் படிக்க இன்பமூட்டும் கவிதை
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   நற்றோழா் சீவாவின் நல்லுரைகள் எந்நாளும்
   கற்றோரைக் கவ்வும் கமழ்ந்து!

   Supprimer
 3. Réponses

  1. வணக்கம்!

   சீவாவின் சீா்எண்ணி வாக்களித்தீா்! இன்புற்றேன்
   ஆவலாய் நன்றி அளித்து!

   Supprimer
 4. கவி வரிகள் மூலம் சிறப்பித்தது புதுமை... அருமை... வாழ்த்துக்கள் ஐயா.. நன்றி..

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பொதுமை மனத்தா் புகழ்சீவா தோழா்
   புதுமை நெறிகளைப் போற்று!

   Supprimer
 5. உண்ணுவதும் உறங்குவதும் வாழ்க்கை இல்லை!
  நரம்போடு தமிழுணர்வு பின்னும் வண்ணம்
  நம்மிளைய சமுதாயம் வளர்தல் வேண்டும்!

  வாழ்த்துக்கள் என்றும் தமிழோடு உறவாடி தமிழ்
  வளர்க்கும் நற் பணியால் பெருமை கொள்ள !!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   ஆட்சி அரங்கில் அவா்அளித்த நல்லுரைகள்
   மாட்சி படைத்தவை! வாழ்த்து!

   Supprimer
 6. சிறப்பான அறிமுகம் சீவாஐயாவை கவியில்
  விருப்போடு தந்தீர் விளங்கிடவே யாவரும்
  பொறுப்போடு இதனை புரிந்திட்டாலே உலகில்
  செருக்கோடு வாழாலாம் தமிழனென்றே!..

  அருமையான கவியால் அறிந்தோம் அவர் பெருமை!
  பகிர்விற்கு மனமார்ந்த நன்றி ஐயா!

  த ம.5

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   தொடா்பணி யாளா்! சுடா்மொழி யாளா்!
   படா்பணி யாளா்!சீா் பாடு!

   Supprimer
 7. இவர்களை போல தன்னலம் கருதாமல் மக்களுக்காக வாழ்ந்தவர்கள் விரைவில் நம்மை விட்டு போய்விட்டது நம்முடைய துரதிஷ்டம் அப்துல் தயுப்

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   தன்னலம் இன்றித் தமிழ்நலம் காத்திட்ட
   பொன்மனச் சீவாவைப் போற்று!

   Supprimer

 8. உழைத்துருகும் தோழா் உயா்ந்தோங்க, வாழ்வை
  இழைத்தெழுதும் ஈடில் எழுத்தா்! - விழைந்தோதும்
  தேவாரத் செந்தமிழாய்ச் சீவாவின் சிந்தனையை
  நாவாரச் சொல்லல் நலம்!

  இனிய. தமிழ்ச்செல்வன்

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   சீவா எழுத்தைச் செழுந்தமிழ் நாட்டவா்கள்
   மேவா திருந்தால் விடிவேது? - பூவாய்
   மணக்கும் பொதுவுடைமை! நன்மனித நேயத்தை
   இணைக்கும் அறிவுடைமை ஏத்து!

   Supprimer
 9. கட்டியதோ கதரென்னும் முரட்டுவேட்டி,
  கைகளிலோ பிறர்க்கெனவே உழைக்கும் வேகம்,
  கிட்டியதோ ஏழ்மையெனும் குடிசை வாசம்,
  ஜீவாவின் சிந்தையதே ஒளிரும் தீபம்!
  இருப்பவரைப் பாடுதற்கே கவிகள் இல்லை,
  இறந்தவரைப் பாடிடுவார் இங்கே யாவர்?
  பாரதியின் தாசனென்றே பெயர் படைத்தீர்
  பண்ணூறும் கவி தந்தீர், வாழ்க நன்றே!
  -நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   செல்லப்பா தந்ததமிழ் செந்தேன் இனிமையெனச்
   சொல்லப்பா நாளும் சுவைத்து!

   Supprimer

 10. வணக்கம்!

  கூழைக் குடிப்பவனும் குன்றிக் கிடப்பவனும்
  ஊழை விரட்டி உயா்ந்திடவே! - வாழையென
  வந்து வளம்தந்த வன்மறவா் சீவாவைச்
  சிந்துக் கவிபாடிச் செப்பு!

  RépondreSupprimer