lundi 24 juin 2013

மாவீரர் மறைவாரோ?

மாவீரா் மறைவாரோ?

நாவீரம் படைத்தவர்கள் நடிங்கி ஓட
     நரிமனத்துக் கொடியவர்கள் கொட்டம் வீழ
தாவீரம் என்றோதித் தமிழை வாழ்த்தித்
     தம்தலைவர் வழியேற்றுப் போர் புரிந்த
மாவீரர் மறைவாரோ? தமிழர் நெஞ்சுள்
     மறமூட்டி ஒளிர்கின்றார்! அவர்தம் சீரைப்
பாவீரப் பாவலரே பாடிப் பாடிப்
     பைந்தமிழால் ஈழத்தை மணக்கச் செய்வீர்!

புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் ஒன்றாய்க் கூடிப்
     புகழ்கொண்ட மாவீரர் மேன்மை போற்றி
உளம்நிறைந்த அஞ்சலியைச் செலுத்து கின்றார்!
     உலகுக்குத் தமிழ்நெறியை ஓது கின்றார்!
பலம்நிறைந்த போர்மறவர் கொள்கை ஏற்றுப்
     பறைசாற்றி முழங்குவதால் ஈழம் பூக்கும்!
வளம்நிறைந்த நல்வாழ்வைத் தமிழர் காண
     வழிவகுத்த தமிழ்த்தலைவர் வாழ்க! வாழ்க!!

மண்ணுரிமை மொழியுரிமை இழந்து விட்டால்
     வரலாற்றில் இடமின்றி மறைந்து போவோம்!
பெண்ணுரிமை பறிக்கின்ற அரசு, பொல்லாப்
     பேயுலவும் காடாக இருளே சூழும்!
முன்னுரிமை பெற்றவரைக் கீழே தள்ளி
     முதுகொடிக்க நினைத்திட்ட பகைவர் வீழ,
தன்னுரிமைப் போர்தொடுத்த தமிழன் என்று
     சான்றோர்கள் உரைக்கின்றார்! வெற்றி காண்போம்!

பனைமரத்துக் காடெல்லாம் நினைவில் ஆட,
     படரன்பு நட்புகளை எண்ணி வாட,
எனைமறந்து நிற்கின்றேன்! காலஞ் செய்த
     இழிவுகளை மாய்த்திடவே கடமை யெண்ணி
அணைதிறந்து பாய்தோடும் வெள்ளம் போன்றே
     அணிதிரண்டு போராடி ஒளி கொடுத்தார்
மனஞ்சிறந்த மாவீரர் தாள்கள் தம்மை
     மதியேந்தி வணங்கிடுவோம் வாரீர்! வாரீர்!

வளர்ந்துவரும் சமுதாயம் சிறந்து நிற்க,
     வன்கவிநான் உழைத்திடுவேன்! நன்மை செய்வேன்!
தளர்ந்துவரும் இளைஞர்தம் உள்ளம் தேடிச்
     சால்புகளை விளைத்திடுவேன்! தீமை சாய்த்து
மலர்ந்துவரும் பொதுவுடைமை மணக்கும் வண்ணம்
     மதியொளியை வீசிடுவேன்! வயலில் நன்றே
விளைந்துவரும் பயிருக்கு உரத்தைப் போன்று
     விளங்கிடுவேன் தமிழுயர! தாயே காப்பாய்!


(மாவீரா் நினைவு மலர் - 2003 பிரான்சு)  
     

17 commentaires:

 1. வீரமிகு வரிகள் அற்புதம்...

  வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   ஏழையாய் வாழ்ந்திடலாம்! எந்நொடியும் அஞ்சுகின்ற
   கோழையாய் வாழாதே! கொள்கையுறு! - ஊழை..நீ
   எண்ணிக் கிடப்பதும் ஏதேதோ கற்பனைகள்
   பண்ணிக் கிடப்பதும் பாழ்!

   Supprimer
 2. மகத்தான எங்கள் மாவீரர் தியாகமதை
  இகத்தில் எண்ணிட இயம்பிய கவிகண்டேன்
  யுகத்தில் வருவரோ யாரேனும் அவர்போல்
  சகத்தில் மனத்தில் சாலவும் போற்றிடுவோம்!.

  மாவீரர் புகழ்பாடிய மாண்புமிக்க ஐயா!
  உங்கள் பாவீரமதை போற்றுகின்றேன்!
  வாழ்த்துகின்றேன்!

  த ம.3

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   நாட்டின் உரிமையை நாடிய வீரா்!நம்
   கூட்டின் உயிரென்று கூறு! - ஏட்டில்..நான்
   தீட்டிய பாக்கள் திசையெட்டும் கேட்கட்டும்!
   வாட்டிய தீதை வதைத்து!

   Supprimer
 3. மாவீரர் மறைவதில்லை ஐயா.
  அவர்கள் எங்கள் மனங்களில் வாழுகின்றார்கள்.

  //வளர்ந்துவரும் சமுதாயம் சிறந்து நிற்க,
  வன்கவிநான் உழைத்திடுவேன்! நன்மை செய்வேன்!....
  ..... விளைந்துவரும் பயிருக்கு உரத்தைப் போன்று
  விளங்கிடுவேன் தமிழுயர! தாயே காப்பாய்!

  அருமை ஐயா! உரங்கொண்ட வரிகள்!
  சிறந்த கவிதை!
  மாவீரர் வீரத்திற்கும் நற்கவியால் எமக்கு உரைத்திட்ட உங்களுக்கும் தலைதாழ்ந்த வணக்கங்கள்!
  மிக்க நன்றி ஐயா!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   சங்கத் தமிழ்மொழியின் சால்புகளை நன்குணா்த்தித்
   தங்கத் தமிழ்மறவா் வாழ்கின்றார்! - திங்களென
   எங்கள் இதயத்துள் என்றும் ஒளிர்கின்றார்!
   பொங்கும் புகழிற் பொலிந்து!

   Supprimer
 4. பாவீரப் பாவலரே பாடிப் பாடிப்
  பைந்தமிழால் ஈழத்தை மணக்கச் செய்வீர்!

  முடியுமா கவிஞரே?

  த.ம.6

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   ஞானத் தமிழ்புரிந்த நற்கவி வாணனின்
   மான மொழிமுழுக்கம் மாண்புடைத்தாம்! - வானம்
   பொழியும்! வயல்விளையும்! பூத்துக் குலுங்கி
   வழியும் மணக்கும் வளா்ந்து!

   Supprimer

 5. ஈழ விடுதலைக்கு ஈந்துயிர், தொற்புகழ்
  ஆழம் அளந்தோர் அறம்போற்றி! - வேழப்
  படைநிகா்த்த வீரா் நடைபயில்வோம்! நீங்கும்
  தடைநிகா்த்த துன்பம் தகா்ந்து!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   நம்அணி ஓங்கின் நரிக்கூட்டம் நின்றிடுமோ?
   செம்மணிக் கவியே தமிழ்ச்செல்வா! இம்மண்
   இயம்பும் இணையிலா ஈழவர லாற்றை!
   மயங்கும் உலகம் மலைத்து!

   Supprimer
 6. Réponses

  1. வணக்கம்!

   பொங்கும் கடலெனப் பொங்கிப் பகையழித்த
   எங்கள் தமிழ்மறவா் போல்உலகில் - எங்குள்ளார்?
   அற்றைத் தமிழ்நுால் அரைகின்ற வீரத்தை
   இற்றைக்[கு] அளித்தார் இவா்!

   Supprimer
 7. காலம் கடந்தாலும் -கவிதை
  கருத்துக்கள் மனவானில்
  கோலம் இடுமய்ய! -நம்
  கொஞ்சுதமிழ் ஐய்ய!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   காலம் கடந்தாலும் கன்னல் தமிழ்மரபை
   ஞாலம் அறிந்து நயந்தேத்தும்! - கோலப்
   புகழ்சூடிக் கொண்டாடும்! பொங்குதமிழ் வீரத்தை
   அகங்சூடிக் கொண்டாடும்! ஆடு!

   Supprimer

 8. தமிழுறவுகளே வணக்கம்!

  மாவீரா் ஈந்த வரலாற்றை என்கைகள்
  பாவீரம் கொண்டு படைத்ததுவே! - வா..வீரா்
  பொன்னடியைப் போற்றிப் புகழ்வோம்! நமதினம்
  வன்னிடியைத் தாங்கும் மலை!

  RépondreSupprimer

 9. தமிழுறவுகளே வணக்கம்!

  காரமிகு பாக்களைக் கட்டிய பாரதிபோல்
  வீரமிகு பாக்களை மீட்டுகிறேன்! - பாரதிர
  வெற்றித் தமிழ்மறவா் வேங்கைக் கொடியேந்திச்
  சுற்றி வருவார் தொடா்ந்து!

  RépondreSupprimer
 10. வெட்டிய குழியினில் வீழ்த்திவிட் டோமென
  வெற்றிக் களிப்புறினும்
  வீர மழிந்திட வில்லையடா -- இது
  வேலுடன் பிறந்த இனம்!
  கொட்டிடு குண்டுயெம் நெஞ்சினிலே -எம்
  குருதியில் நனைந்த நிலம்
  கோடிக் கனவுகள் புதைத்திருக்கும் - எம்
  உயிரதை வளர்த்தெடுக்கும்!
  கொட்டடி இட்டெமைக் கொல்லுதல் செய்யினும்
  கொள்கையி லோஇறப்போம்?
  முட்டிட எருமைகள் மூண்டுவரின்என்ன
  மூர்க்கச் சிறுத்தைகள் யாம்!


  RépondreSupprimer