பார்வேண்டும் கல்வியே! நல்லுறவே! பைந்தமிழால்
சீர்வேண்டும் சிந்தை சொலிப்புறவே! - ஊர்ப்பச்சைக்
காரோங்கக் கட்டுகவே! தங்கமே! வேரோடு
பாரோங்கச் சொல்லுகவே பா!
பார்..சேர் பலகலையே! உன்னுடைய சேண்மாகண்
சீர்சேர் தமிழே!தண் சேர்பார்..சேர் - தார்..சேர்
புகழே! பொலிவேசேர்! தாயே தருக
பகையே ஒழிதேர்சேர் பா!
விளக்கவுரை:
உலகம் கற்றவர்களின் நல்லுறவை வேண்டும். சிந்தை செழிப்படைய பைந்தமிழின் சீரினை வேண்டும். ஊரில் பச்சைவயல்களின் அழகோங்கச் செய்வாய்! தங்கத்தமிழே நிலைத்து நிற்கும் வண்ணம் பாரோங்கச் சொல்லுவாய் பாட்டு.
தமிழே! என்னைப் பார்த்திடுவாய். பல்கலையே சேர்த்திடுவாய்! உன்னுடைய நீள்கயல் கண்களால் எனக்குச் சீரினைச் சேர்த்திடுவாய். குளிர்ச்சியைச் சேர்த்திடுவாய்! உறவாக இப்புவியைச் சேர்த்திடுவாய்! வெற்றி மாலையைச் சேர்த்திடுவாய்! புகழையும் பொலிவையும் சேர்த்திடுவாய்! என் தாயே! பகையை ஒழிக்கின்ற தேரைச் சேர்கின்ற பாடலைத் தந்திடுவாய்.
சித்திரத்தில் 1வது எண்ணிருக்கும் இடத்தில் முதல் வெண்பாவைத் தொடங்கி இடம்வலம், வலம்இடம் என மாறிமாறிப் படித்துக் கொண்டே தேரின் உச்சிவரை சென்று, அங்கிருந்து நேரே சீழிறங்க முதல் வெண்பா நிறைவடையும்.
நிறைவடைந்த 'பா' எழுத்தில் தொடங்கி வலது சக்கரத்திலிறங்கிச் சுற்றிப் படித்து உள்வட்டத்தையும் அவ்வாறே படித்து வந்த வழியே 'பா' வந்து, இடது சக்கரத்திலிறங்கிச் சுற்றிப் படித்து, உள்வட்டத்தையும் அவ்வாறே படித்து வந்த வழியே 'பா' வந்து இரண்டாம் வெண்பா நிறைவடையும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
26.07.2019
Aucun commentaire:
Enregistrer un commentaire